சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 7

மாடுகள் மேய்ந்து

News image
Updated On :30 செப்டம்பர் 2018, 6:30 pm


பாடல் 7: 

    பீர் அடைந்த பாலது ஆட்டப் பேணாத வன் தாதை 
    வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் தனக்குத்
    தார் அடைந்த மாலை சூட்டிச் தலைமை வகுத்தது என்னே
    சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

பீர்=தானாகவே சுரந்த பால்; வன் தாதை=வலிய நெஞ்சம் கொண்ட தந்தை, வன்னெஞ்சம் கொண்ட தந்தை; வேர்=வழிபாட்டின் வேராகிய பால்; வேர் அடைந்து சினத்தால் வேர்த்து  என்று பொருள் கொண்டு விளக்கம் சிலர் அளிக்கின்றனர். பேணாத=பசுக்கள் தாமாகவே சொரிந்த பால் கொண்டு, மணலால் அமைக்கப்பட்ட இலிங்கம் நீராட்டப் பட்டதை புரிந்து கொள்ளாது பால் வீணாக மணலில் சிந்தப்படுகின்றது என்று எண்ணிய தந்தை;

மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்ற விசாரசருமர், மாடுகள் மேய்ந்து முடிந்து நிழலில் கூடிய சமயத்தில், பசுக்களின் நான்கு முலைக் காம்புகளில் ஒன்றினைத் தொட, தனது கன்று தீண்டியதைப் போன்ற உணர்வினை அடைந்த பசுக்கள், தாமே பாலை சொரிந்தன என்று சேக்கிழார் கூறுகின்றார். நான்கு முலைக் காம்புகளில் ஒன்றினையே விசாரசருமர் தொட்டார் என்று குறிப்பிடுவதன் மூலம், பசுக்களின் உரிமையாளர்க்கும் கன்றினுக்கும் பால் குறையாமல் கிடைக்கும் வண்ணம் செய்தார் என்பதை நாம் உணரலாம். அவ்வாறு சொரிந்த பால் ஒன்பது குடங்கள் நிறைய சொரிந்தன என்று சேக்கிழார் கூறுகின்றார். மேலும் இவ்வாறு பசுக்கள் தாமே பால் சொரிந்த போதிலும், உரிமையாளர்க்கு முன்பு போல் குறைவின்றி பால் கிடைத்தன என்பதும் பெரிய புராணத்தில் உணர்த்தப் படுகின்றது.   

    நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக்கொண்டு நாணல் பூங்
    கொல்லை இடந்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட
    ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர்       
    செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்
 

பொழிப்புரை:

தாமாகவே பசுக்கள் பொழிந்த பாலினைக் கொண்டு சிறுவன் விசாரசருமன் மணல் இலிங்கத்தை நீராட்ட, இவ்வாறு பால் பரமனுக்கு நீராட்ட பயன்படும் சிறப்பினை உணராது வலிய நெஞ்சம் கொண்டவனாக விளங்கிய எச்சதத்தன் (சண்டீசரின் தந்தை பெயர்) கோபத்துடன் பாய்ந்து பாற்குடத்தினை இடற, தனது தந்தை என்றும் பாராமல் அவனது கால்களை துண்டித்த சிறுவனுக்கு தான் அணிந்திருந்த கொன்றை மலர் மாலையினை சூட்டி அவருக்கு சிவகணங்களுக்கு தலைவனாக இருக்கும் பதவியையும் அளித்த பெருமானது கருணைச் செயல் மிகவும் வியப்புக்கு உரியதாகும். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் சேய்ஞலூர் தலத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த திருக்கோயிலில் அமர்ந்துள்ளான்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.