/

119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 3

விநாயகப் பெருமானின்

News image
Updated On :24 ஜனவரி 2019, 6:30 pm


பாடல் 3: 

    பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண
         அகவு முனிவர்க்கு
    அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய
          பகவன் இடமாம்
    பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள
          நிகரில் இமையோர்
    புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு
          புகலி நகரே

விளக்கம்:

இந்த பாடலில் சொல்லப்[படும் புகலி என்ற பெயரின் இரண்டாவது எழுத்து க என்பதாகும், பெரும்பாலான சீர்களில் க என்பது இரண்டாவது எழுத்தாகவும் மற்ற சீர்களில் கை, என்ற எழுத்து இரண்டாவது எழுத்தாக வருவதையும் நாம் காணலாம். சென்ற பாடலில் விநாயகப் பெருமானின் தோற்றத்தை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் முருகப் பெருமானை தோற்றுவித்த காரணத்தை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் புகலி என்ற பெயர் வந்த காரணம் உணர்த்தப் படுகின்றது. 

பகலொளிசெய் நகமணியை முகைமலரை நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையிலறு முகவிறையை மிகவருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழவெழி றிகழநிக ழலர்பெருகு புகலிநகரே

நிகழ்=போன்ற; நகமணி=நாகமணி; முகை=மொட்டு; முகைமலர்=அன்று வரை மொட்டாக இருந்து அப்போது தான் மலர்ந்த மலர், நாண்மலர்; பகவன்=சிவபெருமான்; முகம்= திருவருள் நோக்கம்; பகை=தேவர்களின் பகைவராகிய அசுரர்கள்; மிக அருள=மிகுந்த கருணையுடன் தர; நிகரில் இமையோர்=அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த தேவர்கள்; புக=சரண் புக; அகவு=விருப்பம்; சிவபெருமான் தனது ஐந்து முகங்களோடு அதோமுகமும் கொண்டு குமாரக் கடவுளை தோற்றுவித்த தன்மையை உணர்த்தும் வண்ணம், ஒரு முகம் மிகுந்த நிலையினை குறிப்பால் சுட்டிக்காட்டும் வண்ணம் மிக அருளி என்று சம்பந்தர் கூறியதாக விளக்கம் கூறுகின்றனர்.   

இந்த பாடலில் பெருமானை பகவன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த சொல் பகவான் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். .பகவான் என்று கீதையில் வரும் சொல்லுக்கு பராசர முனிவர் ஆறு சிறந்த குணங்கள் உடையவன் என்று பொருள் கூறுகின்றார். முழு வலிமை, முழுதான புகழ், முழுமையான செல்வம், முழுமையான அறிவு, முழுமையான அழகு மற்றும் முற்றும் துறந்த தன்மை என்பவையே அந்த ஆறு குணங்கள் என்று கூறுவார்கள். தன்வயத்தன் ஆதல், முதல் இல்லாது ஆதியாக இருத்தல், உருவம் அற்றவனாக இருத்தல், எல்லா நலன்களும் உடையவனாக இருத்தல், எங்கும் பரவி இருத்தல், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருத்தல் ஆகிய இந்த ஆறு செயல்களை உடையவன் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு செயல்களின் தன்மையை நாம் உணர்ந்தால், இந்த ஆறு தன்மைகள் கொண்டவன் பெருமான் ஒருவனே என்பதை நாம் அறிந்து கொள்வோம். எனவே பகவன் என்ற சொல் பெருமான் ஒருவனுக்கே உரிய பெயர் என்பதை நாம் உணர்வோமாக.       

பொழிப்புரை:

பகலில் ஒளிரும் சூரியன் போன்று பிரகாசம் உடைய நாகமணிகள் போன்று ஒளிவீசுவதும், அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்று மென்மையாக இருப்பதும் ஆகிய இறைவனின் திருப்பாத கமலங்களை, மிகுந்த விருப்பத்துடன் வணங்கிய சனகாதி முனிவர்களுக்கு, விரிவான கலைகள் அனைத்தையும் தெளிவுடன் உணரும் வண்ணம் தனது திருவருளால் நோக்கி அருளிய பெருமான் ஆறு சிறந்த குணங்களை உடையவன் ஆவான். அவன் வீற்றிருந்து அருள் புரியும் இடம் சீர்காழி ஆகும். இவ்வாறு முனிவர்களுக்கு அருளிய பெருமான் தேவர்களுக்கும் அருளியவன் ஆவான். தேவர்களின் பகையாக விளங்கிய சூரபதுமனையும் அவனுடன் இருந்த அரக்கர்களையும் வேரோடு களையும் வகையில் ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானை இறைவன் தோற்றுவிக்க, அதனால் மிகவும் மகிழ்ந்த தேவர்கள், முருகப் பெருமானின் தோற்றத்திற்கு முன்னம் சரண் அடைவதற்கு தகுந்த இடமாக, புகழ் மிகுந்ததும் அழகு வாய்ந்ததுமாக விளங்கியது சீர்காழி நகரம், தேவர்கள் புகல் அடைந்தமையால் புகலி நகர் என்ற பெயரினைப் பெற்றது.         
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.