/

119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 6

அருள் புரிவாய்

News image
Updated On :27 ஜனவரி 2019, 6:30 pm

பாடல் 6:

    நிராமய பராபர புராதன பராவு சிவ ராக அருள் என்று
    இராவும் எதிராயது பரா நினை புராணன் அமராதிபதியாம்
    அரா மிசை இராது எழில் தராயர பராயண வராக உரு
    வாதராயனை விராய எரி பராய் மிகு தராய மொழி விராய பதியே    

விளக்கம்:

இந்த பாடலில் சொல்லப்படும் பெயர் தராய் எனப்படும் பூந்தராய். என்ற சொல்லின் இரண்டாவது எழுத்து ரா. இந்த எழுத்து பாடலின் அனைத்துச் சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். ந்தராய்=பூ+தராய்; பூ=பூமி; தராய்=தரித்தல்; உலகினை மீட்டு தனது கொம்பினில் தரித்து வந்த திருமால் வழிபட்டமையால் வந்த பெயர். 

நிராமய பராபர புராதன பராவுசி வராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழி றராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே

நிராமயன்=நோய் அற்றவன்; பராபரன்=மேலோர்க்கும் மேலானவன்; புராதனன்=அனைத்து உயிர்களுக்கும் பழமையானவன்; பராவுசிவ=பலராலும் புகழப்படும் சிவபெருமான்; ராக=விரும்பத் தக்கவன்; இராவும்=இரவிலும்; எதிராயது=இரவுக்கு எதிராக உள்ள பகலிலும்; பரா=பரவி, புகழப்படும்; புராணன்=பழமையானவன்; அமராதி=தேவர்களுக்கு தலைவனாக உள்ளவன்; அதிபதி=தலைவன்; அரா மிசை=பாம்பின் மேல்; எழில்=அழகாக உள்ள பூமியினை; தரு=கொம்பு; ஆய=பொருத்திய; அர பராயண=அரனை பாராயணம் செய்யும்; வாதராயன்=திருமால்; விராய=கலந்த; எரி=பழி;  

பொழிப்புரை:

இயல்பாகவே நோய்கள் அற்றவனும், மேலோர்களாக கருதப்படும் பல தெய்வங்களுக்கும் மேலாக விளங்குபவனும், அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக உள்ளவனும், பலராலும்  புகழ்ந்து போற்றப்படுபவனும், அனைவராலும் விரும்பப்படுபவனும் ஆகிய பெருமானே நீ அருள் புரிவாய் என்று இரவும் அதற்கு எதிராக அமைந்துள்ள பகலிலும் அனைத்து உயிர்களாலும் தியானிக்கப் படும் பழையவன் சிவபெருமான். தான் கிடக்கும் பாம்பணையிலிருந்து எழுந்த திருமால் வராக உருவத்துடன் சென்று, அரக்கன் இரண்யாட்சனால் ஒளித்து வைக்கப்பட்ட எழில் மிகுந்த பூமியை மீட்டுத்  தனது இரண்டு கொம்புகளின் இடையே பொருத்திக் கொணர்ந்த பின்னர், அந்த அரக்கனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பழி தீரும் பொருட்டு, பெருமானின் திருநாமத்தை பாராயணம் செய்து வழிபட்டதால் வந்த பெயர் தராய் என்பது இந்த தலத்துடன் இணைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.