பாடல் 5:
பணம் கெழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்
அணங்கு எழுவு பாகம் உடையாக முடை அன்பர் பெருமானது இடமாம்
இணங்கெழுவி ஆடு கொடி மாட மதில் நீடு விரையார் புறவு எல்லாம்
தணம் கெழுவி ஏடலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே
விளக்கம்:
பார்வதி தேவியின் அழகினை முந்தைய பாடல்களில் விவரித்த சம்பந்தர், இந்த பாடலில் தேவியை தெய்வத் தன்மை பொருந்திய பெண் என்று கூறுகின்றார். கெழுவு=பொருந்திய, அம்=அழகிய; பணம்=பண்+அம்; பண்ணுக்கு அழகு இனிமை; பரமேட்டி=மேலானவர்கள் என்று கருதப்படும் தேவர்களால் பெரிதும் விரும்பப் படுபவன்; புறாக்கள் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் உலாவுகின்றன என்ற குறிப்புக்கு ஒரு சுவையான விளக்கமும் தரப் படுகின்றது. சிபிச் சக்ரவர்த்தியை சோதிக்க புறா வடிவினில் வந்த அக்னி, தான் செய்த தவறினுக்கு வருந்தி புறா வடிவினில் பெருமானை வழிபாட்டு பயன் அடைந்ததை நினைத்து, தங்களது இனத்தில் ஒரு புறாவுக்கு இறைவன் அருள் புரிந்த இடம் என்று பெருமையுடன் மகிழ்வதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது.
இந்த பாடலில் பெருமானை பகவன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த சொல் பகவான் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். .பகவான் என்று கீதையில் வரும் சொல்லுக்கு பராசர முனிவர் ஆறு சிறந்த குணங்கள் உடையவன் என்று பொருள் கூறுகின்றார். முழு வலிமை, முழுதான புகழ், முழுமையான செல்வம், முழுமையான அறிவு, முழுமையான அழகு மற்றும் முற்றும் துறந்த தன்மை என்பவையே அந்த ஆறு குணங்கள் என்று கூறுவார்கள். தன்வயத்தன் ஆதல், முதல் இல்லாது ஆதியாக இருத்தல், உருவம் அற்றவனாக இருத்தல், எல்லா நலன்களும் உடையவனாக இருத்தல், எங்கும் பரவி இருத்தல், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருத்தல் ஆகிய இந்த ஆறு செயல்களை உடையவன் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு செயல்களின் தன்மையை நாம் உணர்ந்தால், இந்த ஆறு தன்மைகள் கொண்டவன் பெருமான் ஒருவனே என்பதை நாம் அறிந்து கொள்வோம். எனவே பகவன் என்ற சொல் பெருமான் ஒருவனுக்கே உரிய பெயர் என்பதை நாம் உணர்வோமாக.
பகவன் என்று பல திருமுறைப் பாடல்களில் பெருமான் அழைக்கப் படுகின்றார். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.67.4) சம்பந்தர் பெருமானை பரமன் என்றும் பகவன் என்றும் பரமேச்சுவரன் என்றும் அழைக்கின்றார். பரமன்=உயர்ந்தவன்; பரமேச்சுவரன்=மேலோர்க்கும் மேலோன்; உரம்=வலிமை; உலறு=வற்றிய; கோடு=கிளைகள்; நறவம்=கள், தேன் என்ற பொருளில் பொதுவாக பயன்டுத்தப்பட்டாலும் இங்கே உணவு என்ற பொருளை குறிப்பதாக கொள்ள வேண்டும்.
உரமன்னு உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்
இரவில் பூதம் பாட ஆடி எழிலார் அலர் மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எனை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.121.1) ஒன்றில் சம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். நடைமரு திரிபுரம்=இயங்கும் தன்மை கொண்ட கோட்டைகள், பறக்கும் கோட்டைகள்; பொதுளிய=செறிந்த, அடர்ந்த; தீயினை உமிழும் படைக்கலம் என்று பெருமானின் மழுப்படையினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மேகங்கள் தவழும் வண்ணம் மருதமரங்கள் உயர்ந்து காணப்படுகின்றன என்று குறிப்பிட்டு சம்பந்தர் தலத்தின் நீர் வளத்தினையும் நிலா வளத்தினையும் இங்கே கூறுகின்றார்.
நடைமரு திரிபுரம் எரி உண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன்
புடை தரு மருது இளமுகில் வளம் அமர் பொதுளிய
இடைமருது அடைய நம் இடர் கெடல் எளிதே
இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.117) பாடலில் சம்பந்தர் இறைவனை பகவன் என்று அழைக்கின்றார். பிறைமதியைச் சூடிய வண்ணம் கூத்தாடும் பெருமான் வினைகளை அழிக்கும் வல்லமை உடையவர் என்றும், அனைவர்க்கும் மேலானவன் என்றும் தூய்மையாயான ஆறு குணங்களை உடையவன் என்றும் கூறும் சம்பந்தர், இரும்பை மாகாளத்தில் உள்ள மறையவர்கள் இறைவனைத் தொழுது வணங்கியதையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். குறைவதாய=கலைகள் குறைந்த; குனித்தான்=கூத்தாடிய பெருமான்; பறைவது=அழிப்பது;
குறைவதாய குளிர் திங்கள் சூடிக் குனித்தான் வினை
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை மாகாளம்
மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே
பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.1.11) இறைவனை பகவனார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் போற்றி பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாட வல்ல அடியார்கள் தங்களின், தீவினைகள் அகன்று நல்வினைகள் கூடப் பெறுவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல் வாய்ப்
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொன்மாலை பத்தும் வல்லார்
அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவாரே
கொச்சைவயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.5), பகவன் என்று குறிப்பிடும் சம்பந்தர் இனியன அல்லாதவற்றையும் இனியதாக ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். இந்த பாடலில் குபேரனை தோழனாக இறைவன் கொண்டுள்ள தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்நாளில் சீர்காழி நகரில் இருந்த மறையவர்கள் வளர்த்த வேள்வியிலிருந்து எழுந்த புகை வானளாவச் சென்று வானையும் சந்திரனையும் மறைத்ததாக கூறுகின்றார். குனிமதி=வளைந்த பிறையை உடைய சந்திரன்
பனிவளர் மாமலைக்கு மருகன் குபேரனோடு தோழமைக் கொள் பகவன்
இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் இடம் கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவிக்
குனிமதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே
பிரமபுரத்தின் மீது அருளிய பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67) ஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானின் திருவடிகள் பிரகாசமான நாகமணி போன்று ஒளி வீசுவதாகவும் விரிந்த செந்தாமரை மலர் போன்று மென்மையாகவும் அழகாகவும் இருப்பதாக கூறுகின்றார். முகம் என்ற சொல் பார்வை என்ற பொருளில் இங்கே வருகின்றது. பெருமான் வாய் திறந்து ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தவாறே தனது திருவருள் நோக்கத்தால் அருள் புரிந்து சனகாதி முனிவர்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று கூறுகின்றார். நகமணி= நாகமணி; முகை-விரிந்த
பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு
அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய பகவன் இடமாம்
பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர்
புக உலகு புகழ எழில் திகழும் அலர் பெருகு புகலி நகரே
கொட்டையூர் மற்றும் வலஞ்சுழி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் (6.73) பாடலில் அப்பர் பிரான் பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார். அணவுதல்=எட்டுதல், எட்டுதற்கு அரியவனாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பணம்=பாம்பின் படம். அவனது அருளின் உதவியாலன்றி எட்டுதற்கு அரியவனாக உள்ளவனும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும், என்றும் அழியாத தன்மை உடையவனும், உலகங்கள் எங்கும் பரந்து நிற்பவனும், அழகான படத்தையும் பெரிய மணியினையும் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக உடையவனும், பண்டரங்க கூத்து எனப்படும் கூத்தினை ஆடுபவனும், அளவற்ற செல்வம் முதலான ஆறு தன்மைகளை கொண்டவனும், மணலினை வாரிக் கொண்டு வரும் பொன்னி நதியின் கரையில் அமைந்த வலஞ்சுழி தலத்தின் இறைவனும், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பும் அதிகாரத்தினை வரமாக அருளுபவனும், நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற அடியார்கள் வாழும் கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக, என்று தனது நெஞ்சத்திற்கு கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பதிகம்.
அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவினாசி
கண்டாய் அண்டத்தான் கண்டாய்
பணமணி மாநாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய்
பகவன் கண்டாய்
மணல் வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும்
நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சரத்து
உறையும் கோமான் தானே
திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.92.2) அப்பர் பிரான் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தோன்றும் பிரம கபாலம்; என்பறாக் கோலம்=எலும்பு மாலைகள் நீங்காமல் எப்போதும் அணிந்திருக்கும் தன்மை;
பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னைப்
பாய்புலித் தோல் உடையானைப் பகவன் தன்னை
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னைச் சுடருருவில்
என்பறாக் கோலத்தானை
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை ஆலின் கீழ்
இருந்தானை அமுது ஆனானை
கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக்கண்ணாரக்
கண்டேன் நானே
தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் கடைப் பாடலில் (6.2) அப்பர் பிரான் பகவனார் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; பெருமான் இடையில் தான் உடுத்தியுள்ள பட்டாடையின் மேல் கச்சாக பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டும், பூத கணங்கள் சூழவும், தீயினைக் கையில் ஏந்தியவாறும், நடனக் கலையில் வல்லவராக நடனம் செய்கின்றார் என்று பாடலின் முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், அந்த பெருமானை தில்லை நகர் சென்று காணுமாறு நம்மை பணிக்கின்றார். அவ்வாறு நடனம் ஆடும் பெருமானை தேடிக் கொண்டு செல்லும் நாம் அவனை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவனது அடையாளங்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒளியுடன் விளங்கும் சூலம், மார்பினில் திகழும் வெண்ணூல், ஓதும் வேதம், கையில் வீணை மற்றும் கட்டங்கம் என்று குறிப்பிட்டு இறுதியில் வேறு எவருக்கும் இல்லாத நீலக்கறை படிந்த கழுத்து என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். விட்டு=ஒளிவீசும்; சிட்டர்=மேலானவர், நடனக் கலையில் வல்லவர் என்று பொருள் கொள்ளவேண்டும்.
பட்டுடுத்து தோல் போர்த்துப் பாம்பு ஒன்று ஆர்த்துப் பகவனார்
பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய் தீ ஏந்திச் செய்வார் தம்மைத் தில்லை சிற்றம்பலத்தே
கண்டோம் இந்நாள்
விட்டு இலங்கு சூலமே வெண்ணூல் உண்டே ஓதுவதும் வேதமே
வீணை உண்டே
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று
எம் கபாலியார்க்கே
கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது பாடிய பதிகத்தில் கருவூர்த் தேவர் பெருமானை பகவன் என்று குறிப்பிடும் பாடலை (9.13.5) நாம் இங்கே காண்போம். சுருதி= வேதம்; பருதி=சூரியன்; வேதங்கள் ஓதும் பிரமனாகவும், திருமாலாகவும், சுவர்க்க லோகத்தை ஆளும் இந்திரனாகவும், வானில் உலவும் சூரியனாகவும், உள்ள பெருமான், மூன்று கண்களை உடையவனாக, சிறந்த ஆறு குணங்களை உடையவனாக, அனைத்து உடலிலும் உள்ளே இருக்கும் உயிரினுக்கு அமுதம் போன்று இனியவனாகவும் இருப்பதாக இங்கே கூறுகின்றார். இவ்வாறு இருக்கும் பெருமான், கருதுவார் கருதும் உருவமாகவும் இருக்கின்றான் என்று பாடலை முடிக்கின்றார்
சுருதி வானவனாம் திருநெடுமாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே
திருமந்திரம் ஆதார ஆதேயம் தந்திரத்தில், பெருமானை பகவன் என்று குறிப்பிடும் திருமூலர், பிராட்டி என்றும் பகவானுடன் பிரியாது நிற்கும் நிலையினை உணர்த்துகின்றார். அத்தகைய சக்தியை, தமது உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபடும் அடியார்களின் உள்ளங்கள் அழுக்கு நீங்கிய நிலையில் உள்ள வெண்ணிற ஆடையினைப் போன்று, ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களும் நீங்கப் பெற்று தூய்மையாக விளங்கும் என்று கூறுகின்றார்.
மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்
பாதி நல்லாளும் பகவனும் ஆனது
சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடையாமே
மாகேசுர பூஜை என்ற தந்திரத்தில் வரும் பாடலில் திருமூலர் பெருமானை பகவன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். தமது உள்ளமே பெருங்கோயிலாக திகழ்வதை உணர்ந்து கொண்டு, தமது உள்ளத்தில் உள்ள சிவனை போற்றி வழிபடு செய்யும் அடியார்கள் நடமாடும் கோயிலாகத் திகழ்கின்றனர் என்றும், அத்தகைய அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு இறைவனைச் சென்று சாரும் என்று இங்கே திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆனால் திருக்கோயிலில் உள்ள பெருமானுக்கு செய்யப்படும் வழிபாடு, நடமாடும் உயிர்களின் உள்ளே இருக்கும் சிவனைச் சென்று சாராது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாட்டினும் சிறந்தது என்பதை திருமூலர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். படமாடக் கோயில்=கொடிகள் ஆடும் திருக்கோயில்கள்; நடமாடும் கோயில்=நடமாடும் உயிர்களின் உள்ளத்தில் இணைந்து நிற்கும் பெருமான் உள்ள இடம்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அதாமே
பொழிப்புரை:
இனிமை பொருந்திய பண்களுடன் கலந்து பாடுவதும் ஆடுவதும் இடைவிடாது செய்யும் பெருமான் மேலானவர்கள் என்று கருதப்படும் தேவர்களால் பெரிதும் விரும்பப்படுபவன். அவன் சிறந்த ஆறு குணங்களை உடையவன். தெய்வத்தன்மை பொருந்திய பிராட்டியைத் தனது உடலின் ஒரு அங்கமாக உடையவனும் தனது அடியார்களுக்கு அருள் புரிந்து அன்பராக விளங்குபவனும் ஆகிய பெருமான் உறையும் இடம் சண்பை நகரம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலமாகும். சிறப்பினில் ஒன்றினோடு ஒன்று ஒத்து விளங்கும் கொடிகள் பறக்கும் மாடங்களும், உயர்ந்த மதில்களும் கலந்ததும், நறுமணம் கமழ்வதும் ஆகிய சண்பை நகரினில் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் புறாக்கள் உலாவுகின்றன; மேலும் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் உடைய தாமரை மலர்களின் மேல் அன்னப் பறவைகள் தவழ்ந்து வளர்கின்றன. இத்தகைய செழிப்பு வாய்ந்த நகரமே பெருமான் உறையும் இடமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

