பெருங் கற்படைக் காலம் (இரும்புக் காலம் முதல் சங்க காலம் வரை - 1)

மனித இனம் ஒரு குழுவாக மட்டும் வாழாமல், குடும்பமாக, ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ முற்பட்டதன் விளைவே, இறந்தவர்களை புதைத்து அந்த இடத்திலேயே ஓர் நினைவுச் சின்னத்தை அமைத்தல் போன்றவை இவர்களது வழக்கங்களாக மாறின. இவை இடத்துக்கு இடம் வேறுபட்டாலும், இவற்றின் உட்கருத்து ஒன்றே. இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவையே இந்நினைவுச் சின்னங்கள்.
Updated on
7 min read

பெருங் கற்படைக் கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை

தமிழகத்தில் புதிய கற்காலப் பண்பாட்டுக்கு அடுத்து மிகப் பரவலாகக் காணப்படுவது, பெருங் கற்படைக் காலப் பண்பாட்டு ஆகும். புதிய கற்காலப் பண்பாட்டிலிருந்து பெருங் கற்படைக் காலப் பண்பாடு எவ்வாறு வேறுபட்டிருந்தது என்பதையும், தமிழகத்தில் இக்கால மக்கள் பெற்ற தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றங்கள், சமூக மாற்றங்கள் அனைத்தும் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் வெளிப்படுத்திய சான்றுகள் கொண்டு இப்பகுதி அமைகிறது.

இப்பகுதியில் குறிப்பிடப்படும் வரலாற்றுத் தகவல்கள், அனைவராலும் உற்று கவனிக்க வேண்டிய முக்கியத்துவம் உடையவை. ஏனெனில், தமிழகத்தைப் பொருத்தவரையில், ஒவ்வொரு கிராமத்திலும், எல்லா மூலை முடுக்குகளிலும் பெருங் கற்படைக் காலப் பண்பாட்டு எச்சங்களைக் காணலாம். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், இந்தியத் தொல்லியல் துறையும் தனித்தனியாகப் பல அகழாய்வுகளை மேற்கொண்டு, ஏராளமானத் தரவுகளை வரலாற்று உலகுக்கு வழங்கியுள்ளன. இருப்பினும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் எண்ணிக்கை சிறிதே ஆகும். மேலும் ஆய்வு செய்ய வேண்டிய பகுதிகள் ஏராளம் உள்ளன. இக்காலப் பண்பாடு குறித்து இன்னும் பல தலைமுறைகள் ஆய்வுகள் மேற்கொள்ளும் அளவுக்குத் தமிழகப் பரப்பில் சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன.

ஒரு வேண்டுகோள்

புதையுண்ட தமிழகத்தின் முழுமையான வரலாற்றை அறிந்துகொள்ள இவற்றை வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்பதை யாவரும் உணர வேண்டும். இவ்வுணர்தலின் பின்புலத்தில், மக்களின் பங்களிப்பின் அவசியம் சுட்டிக்காட்டப்படுகிறது. இனி வரும் பகுதிகளில், தமிழகத்தில் கிடைத்த தொல்பொருட்களைப் பற்றியும், பண்பாட்டையும் குறித்துத் தெரிவிப்பதற்குச் சான்றாகக் காட்டப்படும் தொல்லியல் தடயங்கள் போன்றோ, நிழற்படங்கள் போன்றோ காண நேர்ந்தால், அவற்றை உடனே பதிவு செய்ய முன்வருதல் வேண்டும். ஏராளமான தொல்லியல் தடயங்கள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டும், மேற்பரப்பில் சிதறியும் கிடைக்கின்றன. நிலத்துக்குக் கீழ் உள்ளவற்றைத் தோண்டி எடுக்க தனிமனிதருக்கு உரிமையில்லை. அவ்வாறு தோண்டி எடுக்க முயலும் செயலைத் தடுத்து நிறுத்துவதும் ஒரு சீரிய செயலே. மேற்பரப்பில் உள்ளவற்றை அறிந்து அதனை வெளிப்படுத்த முன்வாருங்கள். மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு இருக்கும் நம் தமிழக வரலாற்றை வெளிக் கொண்டுவருவதற்கு துணை நிற்க வாருங்கள்.

தமிழகத்தில், பெருங் கற்படைப் பண்பாட்டுக் காலம் என்பது சங்க காலத்தோடு இணைந்த பண்பாட்டுக் காலகட்டமாகும். இப்பண்பாடு, வரலாற்றுக் காலத்துக்கு வித்திட்ட பண்பாடாகவும் விளங்குகிறது. இக்காலத்துக்குரிய தொல்லியல் சான்றுகள், பெருங் கற்படைக் காலத்துக்கும் வரலாற்றின் தொடக்கக் காலத்துக்கும் ஒரு பாலமாக அமைபவை. அந்தவகையில், இவை நமது பண்டைய மரபுமாறாப் பண்பாட்டை எடுத்துக்கூறும் தொல்லியல் ஆவணங்கள் ஆகும். நாள்தோறும் புதிய தகவல்களும், ஆய்வுக் கருத்துகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அண்மையில், பேராசிரியர் கா.ராஜன் அவர்கள், பெருங் கற்கால மக்கள் வாழ்ந்த பகுதியான கொடுமணல் அகழாய்வில் கிடைத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழக எழுத்துகளின் வளர்ச்சி பற்றிய கால நிர்ணயத்தை வழங்கியுள்ளார். தமிழ் எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையது எனக் குறிப்பதற்குத் தக்க சான்றுகளை முன்வைத்துள்ளார். இவ்வாறான தகுந்த சான்றுகளுடன் கூறப்படும் செய்திகள், தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்பவை. இவ்வாறான பெருங் கற்படைக் காலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் அறியப்பட்ட புதையுண்ட தமிழக வரலாற்றை, இனி சான்றுகள் வழி காண்போம்.

பெருங் கற்படைக் காலம் மற்றும் இரும்புக் காலம்

மனித இனம் நல்ல வளர்ச்சி அடைந்து வாழ ஆரம்பித்தது, பெருங் கற்படைக் காலத்தில்தான் எனக் கூறலாம். இக்காலமே, கற்களால் செய்யப்பட்ட பொருட்களைத் தனது வாழ்க்கைக்குப் பெரும்பகுதி பயன்படுத்திய காலத்தில் இருந்து விடுபட்டு, பின்னர் மண்ணாலும், இரும்பாலும் செய்த பொருட்களைத் தங்களது வாழ்க்கைக்குப் பயன்படுத்தத் துவங்கிய காலகட்டமாகும். இதனால், தமிழகத்தில் உலோகப் பயன்பாட்டை துவக்கிய காலகட்டமும் இதுவே எனலாம். இப்பண்பாட்டுக் காலத் தமிழர்கள், இரும்பின் பயன்பாட்டை அறிந்தவர்கள்; இரும்பு என்னும் கனிமத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்; இரும்புத்தாதுவைப் பிரித்தெடுக்கும் கலையையும், அதனை உருக்கி கருவிகளை வடிவமைக்கவும் முதலில் அறிந்தவர்கள் என, பலவகையிலும் நாகரிகத்தில் உயர்ந்த இவர்களை, தொல்லியல் வல்லுநர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் போற்றுகின்றனர். இப்பண்பாட்டுக் காலத்தை இரும்புக் காலம் என்றே தனியாகப் பகுக்கவும் இதுவே காரணமாகும். இச்சிறப்பு குறித்து பின்னர் விரிவாகக் காண்போம். முதலாவதாக, இப்பண்பாடு பெருங் கற்படைப் பண்பாடு என்று அறியப்படும் காரணங்களை ஆய்வோம்.

புதிய கற்கால மக்கள், இறந்தவர்களை தங்களது வாழ்விடத்துக்கு அருகிலேயே புதைத்தனர். பெருங் கற்படைக் கால மக்கள்தான், இறந்தவர்களை முறையாகப் புதைக்கும் வழக்கத்தை பரவலாகவும் சிறப்பாகவும் பின்பற்றினர். இடுகாட்டை ஊருக்கு வெளியே அமைப்பது வழக்கத்துக்கு வந்தது இக்காலகட்டத்தில்தான்.

மனித இனம் ஒரு குழுவாக மட்டும் வாழாமல், குடும்பமாக, ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ முற்பட்டதன் விளைவே, இறந்தவர்களை புதைத்து அந்த இடத்திலேயே ஓர் நினைவுச் சின்னத்தை அமைத்தல் போன்றவை இவர்களது வழக்கங்களாக மாறின. இவை இடத்துக்கு இடம் வேறுபட்டாலும், இவற்றின் உட்கருத்து ஒன்றே. இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவையே இந்நினைவுச் சின்னங்கள்.  இச்சின்னங்கள், அளவில் மிகப்பெரியவையாகவும், சிறியவையாகும் உள்ளன. தனிமனிதன் ஒருவனால் இச்சின்னங்களை அமைப்பது என்பது அரிதான செயல்.

ஏனெனில், பெருங் கற்படை நினைவுச் சின்னங்கள் தனி ஒரு பெரிய கல்லைக்கொண்டு அமைக்காமல், பல பெரிய கற்களை அல்லது பெரிய பலகைக் கற்களைக் கொண்டு அமைத்துள்ளனர். இதன் காரணமாவே, இவ்வகைச் சின்னங்கள் பெருங் கற்படைச் சின்னங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இதனைப் பெருங்கற்காலம் என்றும் அழைத்தனர். இதுபோன்ற நினைவுச் சின்னங்களை அமைக்க ஒரு கூட்டமே செயல்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

இதன் அடிப்படையில், பெருங் கற்கால மக்கள் கூட்டமாகவே வாழ்ந்துள்ளனர் என்பது எளிதில் புலப்படுகிறது. இறந்தவர்களை புதைத்த இடத்தில், அவர்களது நினைவாக அதன் மேல் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினர். இவற்றை ஈமச்சின்னங்கள் என்றும் கூறலாம். ஈமச்சடங்குகள், பின்னர் இவை சமுதாயக் கட்டாய கட்டமைப்பில் இன்றியமையாத சடங்குகளாக நிலைத்துவிட்டன.

பெருங் கற்படைக் கால மக்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஈமச்சின்னங்களைத்தான் இன்று நாம் அவர்களது நினைவுச் சின்னங்களாகக் காண்கிறோம். இவ்வகை நினைவுச் சின்னங்கள், எளிதில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. கற்பாறைகள் கிடைத்த இடத்தில் கற்குண்டுகள் மற்றும் கற்பாறைகளைக் கொண்டும், அவை கிடைக்காத இடத்தில் கற்கள் இல்லாமல் மட்கலன்கள் கொண்டும் பெருங் கற்படைச் சின்னங்களை அமைத்துள்ளனர்.

சில இடங்களில், நேர்த்தியாகவும் சில இடங்களில் இயற்கையான பாறைகளை அப்படியே கரடுமுரடான நிலையிலும் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம். இவையனைத்தும், அந்தந்த இடத்தின் சூழ்நிலையின் காரணமாக ஏற்பட்டவை என்ற கருத்து கவனிக்கத்தக்க ஒன்று.

இப்பகுதியில், அனைத்துவிதமான பெருங்கற் சின்னங்களையும் தொகுத்தும் பகுத்தும் ஆய்வு செய்யப்பட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய, தமிழக பெருங் கற்படைப் பண்பாட்டுக் காலத்தைப் பற்றி அறியும் முன்னர், உலகளவில் இப்பண்பாடு எவ்வாறு வளர்ச்சியுற்றிருந்தது என்பதையும், ஆங்காங்கே காணப்பட்ட பல்வேறு வகையிலான சின்னங்கள் குறித்தும் இங்கு காண்போம்.

பெருங் கற்படைச் சின்னங்கள் அமைவிடம்

பெருங் கற்கால மக்கள், இறந்தவர்களை தங்களது வாழ்விடங்களை விட்டு சற்று தொலைவாகவே புதைக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டனர். குறிப்பாக, இறந்தவர்களை இம்மக்கள் ஊருக்குத் தெற்கே அல்லது தென்மேற்கே அடக்கம் செய்து அதன் மீது நினைவுச் சின்னங்களை எழுப்புவர். இதன் காரணமாக, வாழ்விடம் ஓரிடத்திலும், இடுகாட்டை வேறு இடத்திலும் வைத்து ஒரு சுத்தமான, சுகாதாரமான வாழ்க்கையை வாழக் கற்றவர்கள் என்பதை உணர்த்தினர். பெரும்பாலும், பெருங் கற்கால மக்கள் மலையடிவாரங்களிலும், மலைச்சரிவுகளிலும், ஊரின் எல்லைப் பகுதிகளிலும், வறண்ட மேட்டு நிலங்களிலும் புதைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர். எனவே, நினைவுச் சின்னங்கள் காணும் இடங்களுக்கு மிக அருகாமையிலேயே அம்மக்களின் வாழ்விடங்களும் இருக்கும் என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மையாகும்.

உலகளவில் பெருங் கற்படைச் சின்னங்கள்

உலகம் முழுவதும் பெருங் கற்படைச் சின்னங்கள் பல்வேறு வடிவமைப்பில் காணப்படுகின்றன. குறிப்பாக, இங்கிலாந்தில் காணப்படும் பெருங் கற்படைக் கால தலைக்கல்லில், மேல் பகுதியில் சிறிய குழியுடன், வளையங்களும் (Cup Mark with Rings) பொறிக்கப்பட்டுள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், அயர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் பெருங் கற்படைச் சின்னங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.*1 லண்டனில் காணப்படும் ஸ்டோன்ஹென்ஜ் (Stonehenge), குறிப்பிடத்தக்க பெருங் கற்படைச் சின்னங்களில் ஒன்றாகும். ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பெருங் கற்காலப் பண்பாட்டின் காலத்தை 6000 - 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணித்துள்ளனர். கல்வட்டங்கள் வகைச் சின்னங்களை பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் பல இடங்களில் காணமுடிகிறது.

(தலைக் கல்லில் குழியுடன், வளையங்கள் - இங்கிலாந்து)

(ஸ்டோன்ஹென்ஜ் – லண்டன், இங்கிலாந்து)

(ஸ்டோன்ஹென்ஜ் வேறு வடிவங்கள்)

இவ்வாறு, எவ்விதத் துணையுமின்றி தனித்தனியாக செங்குத்தாக நடப்பட்ட கற்கள் தொகுப்பாகக் காணப்படும். இவ்வடிவமைப்பே ஸ்டோன்ஹென்ஜ் என அழைக்கப்படுகின்றன, இவ்வகைகள், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மற்றொரு வகை, குத்துக் கல் வகையாகும். இதில், ஒவ்வொரு கல்லும் தனித்தனியாக எவ்விதத் துணையும் இன்றி செங்குத்தாக நடப்பட்டிருக்கும்.

(குத்துக்கல், பிரான்ஸ் – Menhir - France)

மற்றொரு வகை, கல் வட்டம் ஆகும். இது, சிறு சிறு உருளை அல்லது இயற்கையாகக் கிடைக்கும் கற்களைக் கொண்டு வட்ட வடிவில் அமைக்கப்படுவதாகும்.

(கல் வட்டம் - இங்கிலாந்து)

(இடு துளை (Porthole) அமைப்புடைய கற் பதுக்கைகள்)

(கல் வட்டம் மற்றும் குத்துக் கல் - ஜோர்டான்)

இந்தியாவில் பெருங் கற்படைக் காலம்

இந்தியத் துணைக் கண்டத்தை, அதன் நிலவியல் அமைப்பைக் கொண்டு ஐந்து பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவை:

  1. வடக்கே இமயமலைப் பகுதியும், மேற்கே பெஷாவர், கிழக்கே அசாம் பகுதியும் அடங்கிய நிலப்பரப்பு.

  2. கங்கை ஆற்றுச் சமவெளிப் பகுதி, வண்டல் மண் கலந்த நிலப்பரப்பு உடைய உத்தரப் பிரதேசம், சிந்து மற்றும் பிகார் பகுதிகள்.

  3. மத்திய இந்தியாவில் காணப்படும் நிலப்பரப்பு, விந்தியமலைப் பகுதிகள்.

  4. தக்காணப் பீடபூமி.

  5. காவிரி ஆற்றுப்படுகை.

இவற்றில், விந்தியமலைப் பகுதியில் இருந்து காவிரி ஆற்றுப்படுகை வரை தென்னிந்தியாவாகக் கொள்வர். தென்னிந்தியாவில், பெருங் கற்படைப் பண்பாடு மிகவும் வளர்ச்சி அடைந்த முதன்மையான பண்பாடாகவும், பொருளாதாரம் சார்ந்த விவசாயமும், இரும்பு உற்பத்தியும், பயன்பாடும் பரவலாகக் காணப்பட்டுள்ளன. இக்காலத்தைச் சேர்ந்த மக்கள், பல்வேறுவிதமான மட்கலங்களை தயாரிக்கும் சிறந்த தொழில்நுட்ப அறிவினையும் பெற்றுத் திகழ்ந்தனர்.

இந்தியாவில், விந்தியமலைக்குத் தெற்கே, குறிப்பாக இந்திய தீபகற்பப் பகுதியில், பெருங் கற்படைக் காலப் பண்பாட்டு நினைவுச் சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன.*2

இந்தியாவில் பெருங் கற்படைப் பண்பாட்டை ஆய்வு செய்த சான்றோர்களும் அவர்களது ஆய்வுகளும்

கார்டன் சைல்டு (Child 1947-48) மற்றும் R.E.M வீலர் (1948) ஆகியோர், உலக நாடுகளுடன் ஒப்பிட்டு, பெருங் கற்கால நினைவுச் சின்னங்களில் இடுதுளைகள் காணப்படுவதும், கட்டடக் கலை அமைப்பும், தோராயமாக இந்தியாவுடன் ஒத்துப்போகின்றன என்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் காணப்படக்கூடிய நினைவுச் சின்னங்கள், வடக்கு ஈரானியன் (North Iranian), காகசியன் (Caucasian) மற்றும் பாலஸ்தீனப் (Palestinian), பகுதிகளில் காணப்படும் சின்னங்களுடன் பெரிதும் ஒப்புமை உடையதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், ஹெமெண்டோர்ப் (Hamendorf), ரூபன் (Ruben) ஆகியோர், இந்தியப் பெருங் கற்கால நினைவுச் சின்னங்களின் ஆரம்பகட்டத்தை, அதாவது குறிப்பாக தென்னிந்தியாவின் மலபார் பகுதிகளில்தான் தோன்றியது எனக் குறிப்பிடுகின்றனர்.

கேரளப் பகுதியில் சேரமாங்காடு (Cheramangad) மற்றும் பொற்காலம் (Porkalam) போன்ற இடங்களில், தொப்பிக் கல் வகை ஈமச் சின்னங்கள் காணப்படுவதைக் குறிப்பிடுகின்றனர். இவற்றை குடைக் கல் (Umbrella Stone) என்றும் தொப்பிக் கல் என்றும் குறிப்பர். இது தோற்றத்தில், கைப்பிடி இல்லாத குடை போன்று தோற்றம் அளிப்பதாகும்.

(தொப்பிக் கல்)

மார்டிமர் வீலர், ‘Early India and Pakistan’ (1969) என்ற நூலில், பெருங் கற்படைக் காலப் பண்பாட்டின் மையப் பிரச்னைகளை ஆய்வு செய்துள்ளார். தக்காணத்திலும், தென்னிந்தியாவிலும் பெருங் கற்படைப் பண்பாடு அடர்ந்த நிலையில் காணப்படுகின்றன என்கிறார். வி.டி.கிருஷ்ணசாமி, பெருங் கற்படைக் காலப் பண்பாட்டுச் சின்னங்களின் வகைகள் அனைத்தையும் சரியான முறையில் பகுத்து, ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.

பிரம்மகிரி மற்றும் சந்திரவள்ளி பகுதிகளில் அகழாய்வு மேற்கொண்ட கே.எஸ். ராமசந்திரன், இந்தியப் பெருங் கற்படைக் சின்னங்கள் குறித்த குறிப்பட்டவணை ஒன்றை நூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். என்.ஆர். பானர்ஜி, பெருங் கற்படைப் பண்பாட்டின் கால நிர்ணயம் குறித்த ஆய்வு மேற்கொண்டு, இதனை பொ.ஆ.மு. 1000 - 800 வரை எனப் பகுக்கின்றார்.

வி.கோர்டன் சைல்ட் (V.Gordom Childe), பெருங் கற்காலம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, பெருங் கற்படைச் சின்னங்களில் ஒன்றான கல் பதுக்கை பற்றியும், அதன் அமைவிடம் மற்றும் இடு துளைகளைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்.

ஏ. அய்யப்பன் (A.Aiappan), The Megalithic Culture of South India என்ற தொகுப்பில் தனது கருத்தாகத் தெரிவிக்கும்பொழுது, தமிழகத்தில் தென் மாவட்டங்களில் முதுமக்கள் தாழி வகைகளும், கிருஷ்ணா, கோதாவரி பள்ளத்தாக்குகளில் கல்லறைகளும் காணமுடிகிறது என்கிறார்.

கே.ஆர். வெங்கட்ராம ஐய்யர், புதுக்கோட்டை மாவட்டப் பெருங் கற்காலச் சின்னங்களை அட்டவணைப்படுத்தியுள்ளார்.

பாபிங்டன், 1823-ல் மலபார் பகுதியில் பெருங் கற்கால வகைகளாகத் தொப்பிக் கல், கொடைக் கல் போன்றவற்றை அகழாய்வு மேற்கொண்டார். அங்கு திரிசூலம், பல்வேறு வடிவ மணிகள், இரும்புப் பொருட்கள், அம்பு முனை போன்ற தொல் பொருட்களைச் சேகரித்து அறியப்படுத்தியுள்ளர்.

தமிழகத்தில் சானூரில், என்.ஆர், பானர்ஜி மற்றும் கே.வி. செளந்தரராஜன் (1950), அமிர்தமங்கலத்தில் என்.ஆர். பானர்ஜி (1954-55) அகழாய்வு மேற்கொண்டு, நான்கு கால் ஈமப் பேழை, கருப்பு சிவப்பு மட்கலன்கள், கருப்பு சிவப்பு மட்கலன்களுடன் இரும்பு ஆயுதங்கள், கார்னிலியன் மணிகள், எலும்புகள், மண்டை ஓடுகள் ஆகியவற்றை சேகரித்துள்ளனர்.

பி.ஆர். பிரான்பில், கரடுமுரடான பெருங் கற்கால நினைவுச் சின்னத்தை, இருளபண்டா, பாபநத்தம் (ஆந்திர மாநிலம், பலம்னேர் வட்டம்) பகுதிகளில் அகழாய்வு மேற்கொண்டு, அங்கு காணப்பட்ட பெருங் கற்கால ஈமச்சின்னத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, அரைவட்ட வடிவ தலைப்பகுதி, செவ்வக வடிவ பலகைக் கல் இவற்றைக் கொண்டு வட்டமாக ஒன்றுக்குப் பிற் அடுக்கிய நிலையிலான வித்தியாசமான அரிய வகை பெருங் கற்கால நினைவுச் சின்ன வகை என அறிமுகப்படுத்தினார்.

(இருளபண்டா பெருங் கல் சின்னத்தின் தோற்றம் (ஆந்திர மாநிலம், பலம்னேர் வட்டம்)

(இதுபோன்ற சிறப்பு வடிவம் கொண்ட பெருங் கற்கால ஈமச்சின்னங்கள், 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லசந்திரம், மேலுமலை என்ற இடத்திலும் காணமுடிகிறது. அதனை பற்றிய ஆய்வு விவரங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்).

சான்றென் விளக்கம்

1. Magdalena S.Midgley. Monuments and Monumentality: The Cosmological Model of the World Megaliths, Documenta Praehistorica xxxvii, 2010.

2. தமிழக வரலாறு, தொல்பழங்காலம், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை (1975), ப. 237.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com