தேய்பிறையில் ஒரு வெண்ணிலா!

ஏதேனும் ஒரு மாயம் நிகழ்ந்துவிடாதா என்று நம்பிக்கைவைத்து வாழ்ந்த காதலர்களின் கதை.
ஸ்ரீஜனா - சுபேதி
ஸ்ரீஜனா - சுபேதிCredits : X , Facebook
Published on
Updated on
3 min read

ஒருதலைக்காதல், இருதலைக்காதல், காதல் திருமணம், ரெஜிஸ்டர் மேரேஜ், காதல் தோல்வி என்று காதல் பல கோணங்களில் முடிவுக்கு வரும்/ சிலருக்கு மகிழ்ச்சியாகவும் சிலருக்கு சோகமாகவும். அவ்வாறு காதலில் தொடங்கி திருமணத்தில் முடிந்து நினைத்ததுபோல் வாழத்தொடங்கிய ஒரு காதல் ஜோடியின் கதை தெரியுமா? ஒரு கதையின் முடிவு முன்னரே தெரிந்துவிட்டால் அதை தொடர்வதில் சுவாரசியம் இருக்காது. இருப்பினும் அந்தக் கதையில் ஏதேனும் ஒரு மாயம் நிகழ்ந்துவிடாதா என்று நம்பிக்கைவைத்து கதையை தொடர்பவர்கள் சிலரே. அப்படி நம்பிக்கையோடு கதையைத் தொடர்ந்த ஸ்ரீஜனா - சுபேதியின் காதல் இது .

Credits : Instagram

ஸ்ரீஜனாவின் காதல் கதை அவளது பள்ளிப் பருவத்தில் துவங்குகிறது. பள்ளியில் அவளது சீனியர் தான் பிபேக் பங்கேணி. இருவருக்கும் குழந்தை பருவத்திலிருந்தே நல்ல பழக்கம். இந்தப் பழக்கம் படிப்படியாக முன்னேறி இருவரும் காதலை வெளிப்படுத்திக்கொண்டனர். பள்ளிப்பருவக் காதல் இருதலைக் காதலாக மாறுவதெல்லாம் பலரின் பள்ளிப்பருவத்து வாழ்நாள் கனவாகும். அந்த கனவை நினைவாக்கிக்கொண்ட ஸ்ரீஜனா - பிபேக் ஜோடியினர் தொல்காப்பிய நம்பியகப்பொருள் கூறும் காதலின் 17 கட்டங்களையும் உணர்ந்து புரிந்துகொள்ளும்விதமாக 6 வருடம் காதலித்து வந்தனர். பின் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

பொதுவாக காதலை திருமணம் வரை எடுத்துச் செல்வதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனால் ஸ்ரீஜனா - பிபேக் கதையில் அப்படி எதற்கும் இடம் கொடுக்காமல் அவர்கள் நினைத்தது போல் வாழ்க்கை அமைந்தது.

Credits : Instagram

பிபேக் ஒரு சமூக வலைதளப் பிரபலம். திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து சமூக வலைதளத்தில் காணொளிகளை பகிர்ந்து வந்தனர். பின்னர் வாழ்க்கையில் இணைந்து முன்னேற வேண்டும் என்பதற்காக பிபேக்கின் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ள இருவரும் அமெரிக்கா சென்றனர். அங்கு சென்ற சில நாள்களிலேயே அவர்கள் ஆசைப்பட்ட கனவு வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக வாழத் தொடங்கினர். சில நாள்கள் கழித்து பிபேக்கை தொடர் தலைவலி அவதிப்படுத்தியது. இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத பிபேக் ஒரு நாள் நடக்க முடியாமல் நிலைக்குலைந்து கீழே விழுகிறார். அவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்கிறார் ஸ்ரீஜனா. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நான்காம் கட்ட மூளைப் புற்றுநோய் இருப்பது 2022 ஆம் ஆண்டு தெரிய வருகிறது. தான் நினைத்தது போல் பிபேக் உடன் ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டது என நினைத்துக் கொண்டிருந்த ஸ்ரீஜனாவை இந்த செய்தி நொறுக்கியது. ஆறு மாதம் வரை தான் பிபேக் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைக் கேட்ட பின் ஸ்ரீஜனாவின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். வாழ்நாள் துணையான தன் கணவரின் கடைசி ஆறு மாதக் காலத்தில் அவள் என்ன செய்ய முடியும். இந்த செய்தியின் சோகத்திலிருந்து வெளி வருவதற்கு கூட போதுமான காலம் இல்லை அந்த ஆறு மாதம். இதன்பின் சமூக வலைதளப் பகிரல்கள் நின்றது. 

Credits : Instagram

கணவரின் இந்த நிலையை பார்த்த ஸ்ரீஜனாவிடம் எஞ்சியிருந்த ஒரே நம்பிக்கை காதல். தனது பேரன்பாலும் காதலாலும் பிபேக்கினை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கினாள். யார் துணையும் இன்றி ஒரு குழந்தை போல் தன் கணவரைப் பார்த்துக்கொள்கிறாள். ஆறு மாதம் கடந்தது மருத்துவரின் கணிப்பு தோற்றது. ஸ்ரீ ஜனாவின் காதல் பிபேக்கை கைவிடவில்லை ஆனால், பிபேக்கின் நம்பிக்கைதான் அவரை குணப்படுத்துவதற்கு மிக முக்கியம் என புரிந்து கொண்ட அவள் அவரது நம்பிக்கையை அதிகரிக்க மக்களை நாடினாள். புற்றுநோய் பாதிப்பிற்கு பின் சமூக வலைதளத்தில் எந்த பகிரலும் செய்திடாத அவள் அவரைப் பார்த்துக் கொள்ளும் காணொளிகளை 2023 ஜூன் மாதம் முதல் சமூக வலைதளத்தில் பகிரத் தொடங்கினாள். அவள் நினைத்தது போல் மக்களின் அன்பும் வேண்டுதலும் பிபேக்கிற்கு கிடைத்தது.

இதனால் பிபேக்கிற்கும் தன் மீது உள்ள நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்தக் காணொளிகள் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தன. இதனால் பிபேக்கிற்கான வேண்டுதலும் அதிகரித்தது. காணொளியை பார்ப்பவர்கள் பிபேக் மேல் ஸ்ரீ ஜனா வைத்திருக்கும் காதலுக்கு அளவே இல்லை என்றும் இப்படிப்பட்ட காதலை எங்கும் காண இயலாது என்றும் புகழாரம் சூட்டினர். பிபேக்கிற்கு துணையாக மட்டுமில்லாமல் ஒரு தூணாகவும் இருந்தாள் ஸ்ரீஜனா. ஸ்ரீஜான தனது கணவரைப் காணொளிகளைப் பார்க்கும்போது வாழ்க்கையில் இப்படி ஒரு துணை வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆறு மாதம் என்பது இரண்டு வருடங்கள் ஆனது. ஆனால், மக்களின் வேண்டுதலும் ஸ்ரீஜனாவின் காதலும் புற்றுநோயிடம் தோற்றது. டிசம்பர் 19 2024 தன் உலகமான ஸ்ரீஜனாவைப் பிரிந்தார் பிபேக். 

Credits : X

காதலில் தொடங்கி திருமணத்தில் முடிந்ததால் காதல் ஜெயித்தது என்று சொல்வதா? வாழத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே கணவன் மறைந்ததால் காதல்வாழ்வு தோற்றது என்று சொல்வதா? அப்படி முடிவு செய்ய காதல் ஒன்றும் போட்டி அல்ல. ஆறு மாத காலம் வாழ வேண்டிய பிபேக்கை இரண்டு வருடம் வாழ வைத்தது காதல்தான். முடிவு தெரிந்த பின்பும் ஏதேனும் ஒரு மாயம் நடந்து விடாதா என்று ஸ்ரீஜனா வைத்த நம்பிக்கைதான் காதல். காதலுக்கு தனி விளக்கம் இல்லை. அகராதி இல்லை. ஆனால் ஒரு உருவமாக ஸ்ரீஜனா நேபாளத்தில் பிபேக்கின் நினைவுகளோடு வாழ்ந்து வருகிறார். கடவுளுக்கு கண் இல்லையா என்று என்னால் கேட்க இயலாது…ஏனெனில் கடவுளே இல்லை என்பதற்கு சான்றாக இந்த பிரிவினை நடந்துள்ளது. அன்பே கடவுள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com