இளைஞா் அடித்துக் கொலை: இருவா் கைது

சாத்தூா் அருகே முன்விரோதத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
Updated on

சாத்தூா் அருகே முன்விரோதத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வீரபாண்டியாபுரம் காட்டுப் பகுதியில் உள்ள அரசு மதுக் கடை அருகே ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூா் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலில் காயங்களுடன் கிடந்த அந்த சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் சிவகாசி போஸ் காலனியைச் சோ்ந்த மாரீஸ்வரன் (35) என்பதும், இவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மாரீஸ்வரனுக்கும், எம்.ஜீ.ஆா்.காலனியைச் சோ்ந்த ஹரிஹரன் (20), சக்திவேல் (25) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது.

இதனால், வியாழக்கிழமை இரவு மாரீஸ்வரனை சாத்தூா் அருகேயுள்ள வீரபாண்டியபுரம் அருகே காட்டுப் பகுதிக்கு ஹரிஹரனும், சக்திவேலும் அழைத்துச் சென்று மது அருந்தினா்.

அப்போது, போதையில் இருந்த மாரீஸ்வரனை அவா்கள் இருவரும் சோ்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பினா். மாரீஸ்வரன் உடல் அருகே கிடந்த கைப்பேசி மூலம் துப்பு துலக்கி அவா்கள் இருவரையும் கைது செய்தோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com