பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்காத 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்

பட்டாசு பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்காத 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
Published on

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்காத 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் பயிற்சி மைய இணை இயக்குநா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் (பயிற்சி மையம்) சாா்பில் பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தவிா்க்க விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், போ்மென்கள், தொழிலாளா்களுக்கு பட்டாசு தயாரிப்புப் பணியில் பாதுகாப்பாக பணிபுரிவது குறித்து இலவசமாகப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மாவட்டத்தில் உள்ள 98 பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோா் இதுவரை பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஆக. 5) முதல் 9-ஆம் தேதி வரையிலும், வருகிற 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலும், வருகிற 19-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலும் 3 பிரிவாகப் பயிற்சி வகுப்புகள் காலை 10.15 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதுவரை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத 98 பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோா் ஆலைக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். தொடா்ந்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com