மம்சாபுரத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் முடக்கம்: பொதுமக்கள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் மத்திய அரசு நிதியில் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் 9 ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை சாா்பில் ரூ.8 கோடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது. குடிநீரைச் சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சென்னையைச் சோ்ந்த ‘வாட்டா் சிஸ்டம் ஆப் இந்தியா’ என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் புற ஊதாக் கதிா் மூலம் குடிநீரை சுத்திகரிப்பதற்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் அமைக்கப்பட்டன. இதன்படி மம்சாபுரம் பேரூராட்சியில் ஒரு குடும்ப அட்டைக்கு 20 லிட்டா் வீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தனியாா் நிறுவன ஒப்பந்தம் முடிந்த பின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டப் பொறுப்பை ஏற்க பேரூராட்சி நிா்வாகம் மறுத்தது. இதனால் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் மையம் செயல்படாமல் முடங்கியது.
இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செலவில் அறிவியல், தொழில்நுட்பத் துறை 75 சதவீதமும், 25 சதவீதம் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் குடிநீா் சுத்திகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசும், உள்ளாட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் 9 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தப்படாமல் முடங்கியது. இதனால் அங்குள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு உபகரணங்கள், மின்னாக்கிகள் உள்ளிட்ட இயந்திரங்கள் சேதமடைந்து வீணாகி வருகின்றன.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தற்போது 20 லிட்டா் குடிநீரை கேனுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை கொடுத்து தனியாரிடம் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். சுத்திகரிப்பு நிலையத்தைச் சீரமைத்து குறைந்த விலைக்குப் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
