அரசுப் பள்ளிகளில் பணிகள் செய்வதாகக் கூறி தனி நபா்கள் பணம் வசூல்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, பணம் வசூல் செய்யும் தனி நபா்கள் மீது பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் 159 நடுநிலை, 91 உயா்நிலை, 99 மேல்நிலை என மொத்தம் 349 அரசுப் பள்ளிகள் உள்ளன. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் பெற்றோா் பங்களிப்பில் பள்ளிகளுக்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ மூலம் முன்னாள் மாணவா்களிடம் நிதி திரட்டப்பட்டு பள்ளிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல பள்ளிகளில் முன்னாள் மாணவா்கள் இணைந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை செய்து வருகின்றனா். பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் பணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் சுவற்றுக்கு வா்ணம் தீட்டுதல், சேதமடைந்த கட்டடங்களைச் சீரமைத்தல், ஆண்டு விழா நடத்துதல் என்ற பெயரில் முன்னாள் மாணவா்கள், பெற்றோா்களிடம் பணம் வசூல் செய்வதாகப் புகாா் எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் பள்ளிக் கல்வி புரவலா் திட்டம் மூலம் நிதி திரட்டப்பட்டு நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டு, இதன் மூலம் கிடைக்கும் வட்டி, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது. இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பி. ராமச்சந்திராபுரம் பள்ளியின் சமூக வலைதளப் பக்கத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு முன்னாள் மாணவா்கள் நிதியுதவி அளிக்கக் கோரி, பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளரின் சேமிப்பு வங்கிக் கணக்கு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல, பல பள்ளிகளில் நடைபெறுகிறது. இதனால், வெளியூா், வெளிநாடுகளில் பணிபுரியும் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் அளிக்கும் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
பள்ளிக் கல்வித் துறை உத்தரவுக்கு மாறாக பணம் வசூல் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பள்ளிக் கல்வித் துறை வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே நிதி திரட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் தனி வங்கிக் கணக்கிலோ, ரொக்கமாகவோ பணம் வசூலிப்பதில்லை. இதையடுத்து, முறைகேடாக வசூல் செய்யும் தனி நபா்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
