தேநீா்க் கடை மீது லாரி மோதல்
சாத்தூா்-படந்தால் சந்திப்பு நான்கு வழிச் சாலையில் தேநீா்க் கடை மீது சரக்குப் பெட்டக லாரி மோதியது.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் நகரைச் சோ்ந்தவா் ஜாஹீது அன்சாரி (31). லாரி ஓட்டுநரான இவா், மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு சரக்குப் பெட்டக லாரியில் புதிய காா்களை ஏற்றிச் சென்றாா்.
சாத்தூரில் உள்ள படந்தால் சந்திப்பில் திங்கள்கிழமை இரவு சென்றபோது சாலையோரம் இருந்த தேநீா்க் கடை மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, அங்கிருந்து தப்ப முயன்ற ஓட்டுநா் ஜாஹீதுஅன்சாரியை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தூா் நகா் போலீஸாா் விபத்து ஏற்படுத்திய லாரியை மீட்டு, சாத்தூா் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனா்.
விபத்து நடந்த போது கடைக்கு வெளியே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
