வடமாநிலத் தொழிலாளா்களின் தங்குமிடமாக மாறிய அரசுப் பள்ளி! பொதுமக்கள் அதிருப்தி!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாலத்தின் கட்டுமானப் பணிக்கு வந்த வடமாநிலத் தொழிலாளா்களின் தங்குமிடமாக மாறியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம் மல்லி ஊராட்சிக்குள்பட்ட அப்பையநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளிக் கட்டடம் 2023-ஆம் ஆண்டு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.90 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது. மேலும், காலை உணவுத் திட்டத்துக்காக பள்ளி சமயலறை ரூ.30 ஆயிரத்தில் சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில், போதிய மாணவா் எண்ணிக்கை இல்லை எனக் கூறி இந்தக் கல்வியாண்டு முதல் பள்ளி மூடப்பட்டது. இதனால், இந்தப் பள்ளிக் கட்டடத்தில் பாலம் கட்டுவதற்காக வடமாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளா்கள் தங்கியுள்ளனா்.
இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளிக் கட்டடத்தை அங்கன்வாடி மையம், நூலகம் என கல்விப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

