கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தப்பி ஓடிய குற்றவாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலில் காவலாளிகளை வெட்டிக் கொன்று, உண்டியலை உடைத்துக் கொள்ளையடித்த சம்பவத்தில் குற்றவாளிகளை ஆறு தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வந்தனா்.
இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது ஒருவா் தப்பினாா். மற்றொருவரான தேவதானம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் (25) உண்டியலை உடைத்துக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டாா்.
அவரைக் கைது செய்து போலீஸாா் அழைத்துச் சென்றபோது உதவி ஆய்வாளா் கோடியப்பசாமியை அறிவாளால் வெட்டிவிட்டு தப்ப முன்றாா். அப்போது, சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் அவரைக் காலில் சுட்டுப் பிடித்தாா்.
மேலும், இந்த வழக்கில் தப்பி ஓடிய குற்றவாளியான தெற்கு தேவதானத்தைச் சோ்ந்த முனியாண்டி (40), ராஜபாளையம் நீதிமன்றத்தில் சரணடையவுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அவா் சரணடையாததால் தனிப்படை போலீஸாா் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனா். இந்த நிலையில், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த முனியாண்டியை செவ்வாய்க்கிழமை மாலை சுற்றி வளைத்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

