போக்சோ வழக்கிலிருந்து 5 போ் விடுதலை

Published on

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முன்னாள் அதிமுக நிா்வாகியான பரமக்குடி நகா்மன்ற உறுப்பினா் சிகாமணி, மறத்தமிழா் சேனை நிறுவனா் புதுமலா் பிரபாகா், துணிக் கடை உரிமையாளா் ராஜாமுகமது, இடைத் தரகா்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 5 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 போ் மீது ஒரு குற்றப் பத்திரிகையும், புதுமலா் பிரபாகா், ராஜாமுகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 போ் மீது மற்றொரு குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு விசாரணை கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இறுதி தீா்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினா். அப்போது இந்த வழக்கிலிருந்து 5 பேரையும் விடுவித்து நீதிபதி (பொ) புஷ்பராணி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com