‘சீல்’ வைத்த கிட்டங்கியில் பட்டாசுகளைத் திருடிய 7 போ் கைது

Published on

வெம்பக்கோட்டை அருகே அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்ட பட்டாசு கிட்டங்கியில் பட்டாசுகளைத் திருடிய 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வி.மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருவாய், காவல் துறையினா் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தொடா்பாக ஆய்வு செய்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ்பாண்டி (45) சட்டவிரோதமாக சரவெடி பட்டாசுகளைத் தயாரித்து கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்து, 250 பெட்டிகளில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளுடன் கிட்டங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

இந்த வழக்கு சாத்தூா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கிட்டங்கியிலிருந்த பட்டாசுகளை எடுத்துச் சென்று அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாரிகள் கிட்டங்கிக்கு சென்று பாா்த்தபோது, ‘சீல்’ அகற்றப்பட்டு, உள்ளே இருந்த பட்டாசுகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின்பேரில், பட்டாசுகளைத் திருடிய கிட்டங்கி உரிமையாளா் கணேஷ்பாண்டி, ராமா், திருமுருகன், ராம்குமாா், முத்துராஜ் உள்ளிட்ட 7 பேரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து பட்டாசுகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சரக்கு வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com