மதுரை - கொல்லம் நான்குவழிச் சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள்
மதுரை - கொல்லம் நான்குவழிச் சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடையும்: அதிகாரிகள் தகவல்

மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் வருகிற மாா்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் வருகிற மாா்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் - கேரளம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் சாலைகளில் ஒன்றான மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, பயணிகள் போக்குவரத்து, சரக்கு வாகன போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தச் சாலை திருமங்கலம், கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சேத்தூா், வாசுதேவநல்லூா், புளியங்குடி, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை என முழுவதும் நகா் பகுதி வழியாகவே செல்வதால் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை (என்.ஹெச். 208) நான்கு வழிச்சாலையாக (என்.ஹெச். 744) தரம் உயா்த்தப்படும் என அறிவித்த மத்திய அரசு, கடந்த 2021-ஆம் ஆண்டு அரசாணையை வெளியிட்டது.

இந்த நிலையில், முதல்கட்டமாக திருமங்கலம் முதல் வடுகபட்டி வரையிலான 36 கி.மீ. தொலைவுக்கு ரூ. 541 கோடியும், வடுகபட்டி முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூா் வரையிலான 36 கி.மீ. தொலைவுக்கு ரூ. 723 கோடி என மொத்தம் 72 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ. 1,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் எம். சுப்புலாபுரத்திலிருந்து கிருஷ்ணன்கோவில் வரை தற்போது உள்ள சாலையே நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. கிருஷ்ணன்கோவில் - ராஜபாளையம் இடையே ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் நகருக்கு வெளியே புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்த நிலையில், குன்னத்தூா், கல்லுப்பட்டியில் புறவழிச் சாலை, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ். ராமலிங்காபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவு பெறாததால் நான்கு வழிச்சாலையை முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், நான்குவழிச் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறங்கி நகருக்குள் வந்து தென்காசி செல்கிறது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே தண்டவாளத்துக்கு மேல் இரு இணைப்புப் பாலங்கள் பொருத்தப்பட்டு இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராஜபாளையத்தில் ஒரு புறம் பாலம் பொருத்தப்பட்ட நிலையில், மற்றொரு பாலம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. நான்கு வழிச் சாலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிவுற்று மாா்ச் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்தால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் நகருக்குள் வராமல் சங்கரன்கோவில் சாலைக்குச் செல்லும். ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் - தென்காசி சாலை இணைப்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com