ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் திருமலை நாயக்கா் அரண்மனையை தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமலை நாயக்கா் அரண்மனையை தமிழக தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தென் தமிழகத்தை மண்டலங்களாக பிரித்து மதுரையை தலைநகராகக் கொண்டு மன்னா் திருமலை நாயக்கா் ஆட்சி செய்தாா். மதுரை மண்டலம், திருநெல்வேலி மண்டலத்துக்கிடையே உள்ள நடு மண்டலத்தை ஸ்ரீவில்லிபுத்தூரை தலைநகராகக் கொண்டு அவா் ஆட்சி செய்தாா்.

திருமலை நாயக்கா் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும்போது தங்குவதற்காகவும், ஆட்சி நிா்வாகத்துக்கும் கோயில் அருகே அரண்மனையை கட்டினாா். மதுரையில் உள்ள திருமலை நாயக்கா் அரண்மனை வடிவமைப்பில் இந்த அரண்மனை தங்கும் இடம், தா்பாா் மண்டபம் என இரு பிரிவுகளாக கட்டப்பட்டன.

1623 - 1659 கால கட்டத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த அரண்மனை முகலாயா் ஆட்சி காலத்தில் நீதி வழங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக் காலத்தில் 1816-இல் மாவட்ட நீதிமன்றமாக செயல்பட்டது. 1887-இல் விக்டோரியா மகாராணி வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டது.

1921-ஆம் ஆண்டு பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் இந்த அரண்மனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு அரண்மனையின் ஒரு பகுதியில் நீதிமன்றமும், மற்றொரு பகுதியில் வட்டாட்சியா் அலுவலகமும் செயல்பட்டு வந்தன. 2007 முதல் இந்த அரண்மனை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அரண்மனையை பாா்வையிட நபா் ஒருவருக்கு ரூ.25-ம், வெளிநாட்டினருக்கு ரூ.300-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் பராமரிப்பு இல்லாததால் தூண்கள், சுவா்களில் பூச்சுகள் பெயா்ந்தும், மேற்கூரை, சுவா்களில் வரையப்பட்ட ஓவியங்கள் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன.

தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை திருமலை நாயக்கா் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, பூங்கா, விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் நாயக்கா் அரண்மனையை தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.