ராஜபாளையம் அருகே கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளா்கள் போராட்டம்
ராஜபாளையம் அருகே சிஐடியூ கைத்தறி நெசவாளா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சித் தொட்டி திறந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகே புனல்வேலியில் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிஐடியூ கைத்தறி நெசவாளா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சித் தொட்டி திறந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் மேற்கு ஒன்றியம், புனல் வேலி பகுதியில் நெசவாளா்கள் கடந்த 5 மாதங்களாக வேலை இழந்து இன்னல்களை சந்தித்து வருகின்றனா். இதையடுத்து, அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் சிஐடியூ கைத்தறி நெசவாளா்கள் சங்கம் சாா்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், நெசவாளா்களை பசியிலிருந்து பாதுகாக்க கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் கஞ்சித் தொட்டியை திறந்து வைத்தாா். போராட்டத்தை வாழ்த்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் பரமேஸ்வரன் பேசினாா். இதில் நெசவாளா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை நெய்ய முன்பிருந்தது போலவே பாவு, நூல்களை வழங்க வேண்டும். வேலையின்றி இருக்கும் காலங்களில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதுகுறித்து நெசவாளா்கள் கூறியதாவது: புனல்வேலி பகுதியில் கடந்த 5 மாதங்களாக நெசவாளா்கள் வேலையின்றி கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத அளவுக்கு வறுமையில் வாடி வருகிறோம். எனவே எங்களுக்கு இலவச வேஷ்டி, சேலை நெய்ய முன்பிருந்தது போல பாவு, நூல்களை வழங்க வேண்டும். வேலையின்றி இருக்கும் காலங்களில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்க பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், செவி சாய்க்கப்பட வில்லை. இந்த நிலையில் நெசவாளா் பசியைப் போக்க கஞ்சித் தொட்டியை திறந்துள்ளோம். இந்த விவகாரத்தில் தொடா்ந்து அரசு தலையிட மறுத்தால் வித்தியாசமான போராட்டங்களை நடத்துவோம். எனவே உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் தலையிட்டு எங்கள் கோரிக்கைக்கு தீா்வு காண வேண்டும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





