ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாயு ஆதிக்கமும் வயிற்று உபாதைகளும்!

நான் மருந்து கம்பெனியில் வேலை செய்கிறேன். ஊர் ஊராகச் சென்று டாக்டர்களைப் பார்த்து எங்கள் மருந்து கம்பெனியின் மருந்துகளை மக்களுக்குச் சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொள்வேன். ஹோட்டல்களில் சாப்பிட வேண்டிய
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாயு ஆதிக்கமும் வயிற்று உபாதைகளும்!
Updated on
2 min read

நான் மருந்து கம்பெனியில் வேலை செய்கிறேன். ஊர் ஊராகச் சென்று டாக்டர்களைப் பார்த்து எங்கள் மருந்து கம்பெனியின் மருந்துகளை மக்களுக்குச் சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொள்வேன். ஹோட்டல்களில் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம். புலால் உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவேன். இதனால் அடிக்கடி மலம் கழிச்சல் ஏற்பட்டு உடல் சோர்வாகிறது. வயிறு வலிக்கிறது. சத்தத்துடன் மலம் கழிகிறது. இந்த உபாதை மாற வழி என்ன?

அரவிந்தன், கோவை.

மனிதர்களுக்கு பேதி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கூறுவதாவது: சத்ய யுகத்தின் ஆரம்பத்தில், முனிவர்களின் யாகத்தில் பலி கொடுப்பதற்காக மிருகங்களைக் கொண்டு வந்தனர். பலி கொடுப்பதற்கான மந்திரங்களைக் கூறி, அவற்றைக் கொல்லாமல் மறுபடியும் காடுகளில் விட்டுவிட்டனர்.

அதன் பிறகு வந்த யுகத்தில், மனு எனும் முனிவரின் மகன்களாகிய நரிஷ்யன், நாபாகன், இக்ஷ்வாகு, ந்ருக, சர்யாதி போன்றவர்கள் யாகத்தில் மிருகங்களை காவு கொடுக்கத் தொடங்கினார்கள். காவு கொடுக்கப்பட்ட மிருகங்கள் சொர்க்கத்தைச் சென்றடைவதாக அவர்கள் கருதினார்கள்.

அதன் பிறகு, ப்ருஷத்ரன் என்ற முனிவர் தன் நீண்ட யாகத்தின் போது, போதிய மிருகங்கள் கிடைக்காததால் காளை மற்றும் பசு மாடுகளையும் காவு கொடுக்கத் தொடங்கினார். இதனால் மற்ற உயிரினங்கள் நடுங்கின. யாகத்திற்குப்போக, மிச்சமிருந்த மாமிசங்களைச் சாப்பிட்டவர்கள், அவற்றின் செரிக்காத தன்மை, சூடு, பழக்கமில்லாதவை போன்ற காரணங்களால் பசித்தீ மந்தமாகி, மனம் பேதலித்து, பேதியினால் அவதிப்படத் தொடங்கினார்கள்.

இந்தக் கதைக்கும் உங்களுக்கும் சம்பந்தமிருக்கிறது. அதாவது புலால் உணவை விரும்பிச் சாப்பிடும் உங்களுக்கு அதிலுள்ள எளிதில் செரியாமை, சூடு, பழக்கமில்லாத ஓட்டல்களில் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் குடல் அவற்றை ஏற்க மறுக்கிறது. பேதியாக வெளியே தள்ளுகிறது. ஆனாலும் நாக்கிற்கு அடிமையாகிப் போனதால் உங்களால் புலால் உணவைத் தவிர்க்க இயலவில்லை.

குடல்  வாயுவின் ஆதிக்கத்தினால் உங்களுக்கு வயிற்று வலியும், சத்தத்துடனும் மலம் கழிகிறது. அதாவது வாததோஷத்தின் சீற்றத்தினால் உங்களுக்குப் பேதியாகிறது.

குடலில் வாயு அதிக அளவில் சேர்வதற்கு எதிர்காற்றில் நடப்பது, கடுமையான வெயிலில் குடை பிடிக்காமல் நடந்து செல்வது, உடற்பயிற்சி அதிகம் செய்தல், சிறிதும் எண்ணெய், நெய் சேர்க்காத வரண்டு போன உணவு  வகைகளைச் சாப்பிடுதல் அல்லது நேர அமைப்புடன் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுதல், அதிக வீர்யம் கொண்ட மதுபானங்களைக் குடித்தல், இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர் போன்றவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

வாயுவின் சஞ்சாரம் வயிற்றில் அடங்கும் வரை பசித்தீயின் சுடர் பிரகாசமாக எரியும் வரை உங்களுக்கு மலத்தைக் கட்டும் மருந்துகளால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அதனால் முன் குறிப்பிட்ட நோய்க்கான காரணங்களை நிறுத்தவும்.

அடுத்ததாக, கடுக்காய்ச் சூரணம் 5 கிராம் அளவில் எடுத்து, சம அளவு சுத்தமான வெல்லம் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மேலும் ஓரிரு முறை மலம் கழியும். குடலில் தேங்கியுள்ள தேவையற்ற வாயு வெளியேறிவிடும்.

பசித்தீ பிரகாசமாகும். அதன் பிறகு வசம்பு 5 கிராம், அதிவிடயம் 10 கிராம் அளவில் எடுத்து 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து, அரை லிட்டர் ஆகும் வரை குறுக்கி, குடிக்கப் பயன்படுத்த உங்களுடைய உபாதை விரைவில் குணமாகிவிடும். இந்தக் குடிநீர், பசித்தீயை நன்றாகத் தூண்டிவிட்டு, வயிற்றில் தேங்கும் உணவை விரைவில் செரிக்கச் செய்துவிடும்.

நீங்கள் ஓட்டலில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய அடுப்பு, சிலிண்டர், சில பாத்திரங்களைக் கொண்டு காலையில் அரை மணி நேரத்தில் தயாரித்துவிடக்கூடிய கஞ்சியினால், இழந்துபோன ஆரோக்கியத்தை நீங்கள் மறுபடியும் அடைந்துவிடலாம்.

சுமார் 1 டம்ளர் (300 கிராம்) பச்சரிசியில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு, அதில் 2 கிராம் வீதம் வில்வக்காய், சுக்கு, தனியா, அரிசி திப்பிலி, புளிப்பு மாதுளை, பெருங்காயம் (இறுதியில் சேர்க்கவும்) கலந்து குக்கரில் வேக வைத்து, வடிகட்டி 3 டம்ளர் கஞ்சியில் சிறிது இந்துப்பு சேர்த்துக் குடிக்க, விரைவில் உங்கள் உடல் நலமாகிவிடும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com