பயிற்சி: சிசேரியனா...வேண்டாமே?
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துப் பெண்கள் வயல் வேலைகளைச் செய்து கொண்டு இருக்கும்போதோ, காட்டில் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும்போதோ பிரசவ வலி வந்து, வேலை செய்யுமிடத்திலேயே குழந்தையைப் பெற்றுக் கொண்ட


நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துப் பெண்கள் வயல் வேலைகளைச் செய்து கொண்டு இருக்கும்போதோ, காட்டில் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும்போதோ பிரசவ வலி வந்து, வேலை செய்யுமிடத்திலேயே குழந்தையைப் பெற்றுக் கொண்டு, சிறிது நேரம் கழித்து தான் பெற்ற குழந்தையைத் தானே தூக்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து வந்ததை நமது பாட்டி சொல்லிக் கேட்டிருப்போம்.
இன்றோ பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் இல்லாமல் குழந்தை பிறப்பது இல்லை. கர்ப்ப காலத்தில் குழந்தைப் பிறப்பின் போது ஏற்படும் வலியை எண்ணி இரவும் பகலும் நடுங்கிக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.
""சிசேரியன் இல்லாமல் சுகப் பிரசவம் நடைபெற பெண்கள் குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகளையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடித்தால் போதுமானது '' என்கிறார் ராக்கி கபூர். சென்னை
ஆழ்வார் பேட்டையில் "த்வி மெட்டர்னிட்டி ஸ்டுடியோ' என்ற பெயரில் இதற்கான பயிற்சி மையத்தை அவர் நடத்தி வருகிறார்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், கர்ப்பிணிப் பெண்ணின் கணவரும் இவர் நடத்தும் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
ராக்கி கபூரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற்பயிற்சிகளைச் சொல்லித் தரவேண்டும் என்ற தேவை எப்படி ஏற்படுகிறது?
நான் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பிஸியோ தெரபி படித்தவள். அங்கேதான் கர்ப்பிணிப் பெண்களுக்கான எக்ஸர்ûஸஸ் பற்றிச் சொல்லித் தருகிறார்கள். நான் அங்கே படித்திருந்ததால் இந்தப் பயிற்சி வகுப்புகளை எடுக்க முடிகிறது.
இந்தக் காலத்தில் எல்லா வேலைகளும் விரல் நுனியிலேயே முடிந்து விடுகின்றன. மாவு அரைக்க வேண்டுமா? மசாலா அரைக்க வேண்டுமா? தண்ணீர் இறைக்க வேண்டுமா? எல்லாவற்றிற்கும் பட்டனை அமுக்க விரல் நுனிகள் இருந்தால் போதும். மாடிப்படி ஏற வேண்டுமா? அதற்கும் லிஃப்ட்டின் சுவிட்சை அழுத்த விரல் நுனிகள் போதும். இதனால் உடல் உழைப்பு பெண்களுக்கு மிகவும் குறைந்து போகிறது.
ஆனால் சாப்பிடுவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதுவும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். வீட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தால் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தூங்குவதை கொஞ்சமும் குறைவில்லாமல் செய்கிறார்கள். டிவி பார்த்துக் கொண்டே எதையாவது கொறித்துக் கொண்டிருப்பார்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தக் காலத்து அம்மாக்கள் நன்றாகச் சாப்பிடும்படி அறிவுரை வேறு சொல்வார்கள். வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பார்கள். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் நிறையச் சாப்பிடுவார்கள். அவர்களும் குண்டாகிவிடுவதோடு, வயிற்றில் உள்ள குழந்தையையும் குண்டாக்கிவிடுவார்கள். அப்புறம் பிரசவ நேரத்தில் குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏற்பட்டு, சிசேரியன் செய்து குழந்தையைப் பிறக்க வைப்பார்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு நிறைய அறிவுரை சொல்வார்கள். மாடிப்படி ஏறக்கூடாது. கடுமையாக வேலை செய்யக் கூடாது. படுத்திருக்கும் போது அப்படியே திரும்பிப் படுக்கக் கூடாது. எழுந்து உட்கார்ந்து அப்புறம்தான் திரும்பிப் படுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால் உண்மையில் கர்ப்பிணிப் பெண்கள் நிறைய வேலை செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். தேவையான சத்துள்ள உணவுகளைத் தேவையான அளவுக்கு மட்டும் உண்ண வேண்டும். இவற்றையெல்லாம் செய்து வந்தால் குழந்தை எளிதாகப் பிறந்துவிடும்.
இந்த விஷயங்களைச் சொல்லித் தர வேண்டிய தேவை இருப்பதால் இந்தப் பயிற்சி மையத்தைத் துவக்கினோம்.
எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் பொருந்துமா?
கர்ப்பிணிப் பெண்களிடம் நேரில் பேசி அவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைத் தேர்வு செய்கிறோம். 3 மாத கர்ப்பிணிக்குப் பொருத்தமான உடற்பயிற்சிகள், 5 மாத கர்ப்பிணிக்குப் பொருத்தமான உடற்பயிற்சிகள் என உடற்பயிற்சிகள் மாறுபடும்.
இதுதவிர, கர்ப்பிணிப் பெண்கள் எந்தெந்த உணவுகளை எந்த அளவுக்கு உண்ண வேண்டும் என்று சொல்லித் தருகிறோம்.
இந்த உடற்பயிற்சிகளைச் சொல்லித் தரும்போது கர்ப்பிணிப் பெண்ணின் கணவரும் உடனிருக்க வேண்டும். குழந்தையைப் பெற்றுக் கொள்வது பெண் என்றாலும், ஆணுக்கும் குடும்பப் பொறுப்பு உள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு நீங்கள் சொல்லித் தரும் உடற்பயிற்சிகளைக் கணவரும் தெரிந்து கொள்வதால் என்ன பயன்?
கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற் பயிற்சிகளை நாங்கள் சொல்லிக் கொடுத்தாலும் அவர்கள் ஓரிரு நாட்கள் செய்துவிட்டு பின்பு செய்யமாட்டார்கள். அதுவும் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவே நேரம் இருக்காது. இந்நிலையில் அவர்களுடன் வாக்கிங் போகவோ, உடற்பயிற்சி செய்யவோ ஒரு நண்பர் இருந்தால் மகிழ்ச்சியுடன் உடற்பயிற்சி செய்வார்கள். அந்த நண்பராக அந்தப் பெண்ணின் கணவரை இருக்கச் சொல்கிறோம்.
வீட்டில் இருவரும் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் பின்னர் அதுவே ஒரு பழக்கமாகிவிடும். நாளை குழந்தை பிறந்து வளர்ந்து வரும்போது அம்மாவும், அப்பாவும் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து குழந்தையும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடும்.
என்னதான் உடற்பயிற்சி, உணவுமுறைகளைக் கடைப்பிடித்தாலும் பிரசவம் என்றால் பயம் ஏற்படுவது சகஜம்தானே?
இங்கே சொல்லித் தருகிற உடற்பயிற்சி, உணவுமுறைகள் தவிர, பிரசவத்தைத் தைரியமாக எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை, தைரியத்தைப் பெண்களுக்கு ஏற்படுத்துகிறோம். இதனால் பிரசவ வார்டில் கூட எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருக்கிறார்கள். இங்கே பயிற்சி பெற்ற பெண்களுக்குச் சிசேரியன் செய்ய வேண்டிய தேவையில்லாமல் சுகப் பிரசவம் ஆகிவிடுகிறது.
வேறு என்ன சொல்லித் தருகிறீர்கள்?
இந்தக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்களின் தாய்மார்களில் பலருக்கு குழந்தை பிறந்தபின் எப்படிக் குளிப்பாட்டுவது? குழந்தையை எப்படி டாய்லெட் போகவிடுவது? குழந்தைக்கு என்ன உணவு கொடுப்பது என்றெல்லாம் தெரிவதில்லை. எனவே குழந்தை பெற்ற பெண்களுக்கு இதற்கும் பயிற்சி தருகிறோம்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தங்களுடைய நண்பர்களிடம் சொல்கிறார்கள். அவர்களுடைய நண்பர்களும் குழுந்தைகள் என்பதால் பிரச்னைக்கான தீர்வு கிடைக்காது. குழந்தைகள் தங்களுடைய பிரச்னைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான சூழ்நிலையை வீட்டில் உருவாக்க வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறோம்.
முன்பு இந்தப் பயிற்சி வகுப்புகள் இல்லாமலேயே பெண்கள் குழந்தைகள் பெற்று வளர்க்கவில்லையா?
முதலில் கூட்டுக் குடும்பம் இருந்தது. பெண்களுக்குத் தேவையான அனைத்தையும் பாட்டி, தாய் எல்லாரும் சொல்லித் தந்தார்கள். காலங்காலமாகப் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் சொல்லித் தந்தார்கள். இப்போது கூட்டுக் குடும்பம் இல்லை. தனிக்குடித்தனத்தில் முதியவர்களுக்கு இடமில்லை. எனவே இதுபோன்றவற்றைச் சொல்லித் தர எங்களைப் போன்றவர்களின் தேவை ஏற்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...