""மதுரைதான் சொந்த ஊர். நான்தான் குடும்பத்தில் பெரிய பையன். எனக்கு அடுத்து தம்பியும், தங்கையும் இருந்தனர். நான் ஐந்தாவது முடித்தவுடனேயே டீக்கடையில் வேலை பார்த்து வந்தேன். ஆறாவது படிக்கும்போது பட்டறையில் வேலை பார்த்து வந்தேன். ஏழாவது படிக்கும்போது ஹோட்டலிலும், எட்டாவது படிக்கும்போது கோழிக்கறி கடையிலும் வேலை பார்த்தேன். ஒன்பதாவது, பத்தாவது படிக்கும்போது அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணி செய்தேன். பதினொன்று, பன்னிரண்டாவது படிக்கும்போது மதுரை, அண்ணாநகர் பகுதியிலிருக்கும் புரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தேன். இப்படி வேலை செய்து கொண்டே படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்த என்னைப் பற்றிய செய்தியை முதலில் வெளியிட்டது "தினமணி' பத்திரிகைதான்.