வாழ்க்கை அங்கே... மனது இங்கே...!
பரதநாட்டியம், பாலிவுட் டான்ஸ், பாங்ரா நடனம், கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு, ஸ்லோகா கிளாஸ், தமிழை சரியாக உச்சரிக்கப் பயிற்சி, ஹிந்தி கிளாஸ், யோகா கிளாஸ் - இவையெல்லாம் என்ன என்கிறீர்களா? சென்னையில


பரதநாட்டியம், பாலிவுட் டான்ஸ், பாங்ரா நடனம், கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு, ஸ்லோகா கிளாஸ், தமிழை சரியாக உச்சரிக்கப் பயிற்சி, ஹிந்தி கிளாஸ், யோகா கிளாஸ் - இவையெல்லாம் என்ன என்கிறீர்களா?
சென்னையில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று அங்கே வேலை செய்யும் கிருத்திகா நரேன் தனது ஓய்வுநேரத்தில் அமெரிக்காவில் உள்ள இந்திய குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் வகுப்புகள்தாம் இவை.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஜெர்ஸி சிட்டியில்தான் அவருடைய வகுப்புகள் நடக்கும் ஸ்டுடியோ உள்ளது. சென்னை வந்திருந்த கிருத்திகா நரேனைச் சந்தித்துப் பேசினோம்.
""அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு கம்பெனியில் நான் வேலை செய்கிறேன். காலை 5.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வரும் போது மாலை 5.30 ஆகிவிடும். அதன்பின்புதான் நான் வகுப்புகள் எடுக்கிறேன்.
இந்த வகுப்பு ஜெர்ஸி சிட்டியில் உள்ளது. ஜெர்ஸி சிட்டி பார்ப்பதற்கு நமது மும்பை போலவே இருக்கும். அந்த அளவுக்கு அதிகமாக இந்தியர்கள் இங்கு வாழ்கிறார்கள். இங்குள்ள இந்தியக் குழந்தைகளுக்கு பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், யோகா வகுப்புகள், ஸ்லோக கிளாஸ் என பல வகுப்புகளை எடுக்கிறோம்.
இந்தக் குழந்தைகளின் பெற்றோர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள். வேலைக்காக அமெரிக்கா வந்தவர்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டுச் சோர்வாக வீடு திரும்புவதால் குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேச அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. இந்தியாவைப் பற்றியோ இந்தியக் கலாசாரத்தைப் பற்றியோ குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவும் அவர்களுக்கு நேரமில்லை. அதனால் குழந்தைகளை எங்கள் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
அங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாது. அதற்காகத் தமிழ் வகுப்புகளை எடுக்கிறோம். அதுபோல வடஇந்தியக் குழந்தைகளுக்கு இந்தி வகுப்பு எடுக்கிறோம்.
நமது கலாசாரத்தை அங்குள்ள குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்விதமாக கர்நாடக சங்கீதத்தில் வாய்பாட்டு கற்றுக் கொடுக்கிறோம். பக்தியை வளர்க்க ஸ்லோகங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்.
அங்குள்ள தமிழ்க் குழந்தையொன்றின் பெற்றோர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தைக்கு தஞ்சாவூரைப் பற்றிய எல்லா விவரங்களையும் விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கிறோம். அதுமட்டுமல்ல, வட இந்தியக் குழந்தைகளும் அதைக் கேட்பார்கள். அவர்களும் தமிழ்நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள்.
அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கு இந்தியாவைப் பற்றிய அறிவையும் புரிதலையும் ஏற்படுத்திக் கொடுப்பதே எங்களுடைய நோக்கம்.
நாங்கள் யோகா வகுப்பு எடுக்க ஆசிரியர்கள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தோம். அதைப் பார்த்துவிட்டு பலர் வந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவரைப் பார்த்து நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். வந்தவர் ஜான் என்ற அமெரிக்கர். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து யோகா கற்றுக் கொண்டாராம். அவரையே நாங்கள் யோகா ஆசிரியராக நியமித்தோம்.
நான் பரதநாட்டியம் வகுப்பு எடுக்கிறேன். என்னைப் போல அங்கே உள்ள இந்தியப் பெண்கள் பல வகுப்புகளை எடுக்க வருகிறார்கள். எங்கள் பள்ளியில் மொத்தம் 21 ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
அமெரிக்காவில் பாலிவுட் டான்ஸ் ரொம்ப பிரபலம். அந்தக் கிளாஸýக்கு அங்கே ஏகப்பட்ட வரவேற்பு. வாரத்தின் ஏழு நாட்களும் 2 பேட்ச் அந்த வகுப்பு நடக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுமட்டுமல்ல சனி, ஞாயிறுகளில் மட்டும் 6 பேட்ச் அந்த வகுப்பு நடக்கிறது.
வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் முதலிய இசைக் கருவிகள் வாசிக்கவும் அங்கே கற்றுக் கொடுக்கிறோம்.
எங்கள் வகுப்பு ஜெர்ஸி தெருவில் 3 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள ஸ்டுடியோவில் நடக்கிறது. நடனமாடும் குழந்தைகள் தாங்கள் ஆடுவதைப் பார்க்கும் வகையில் திரும்பும் பக்கமெல்லாம் அவர்கள் உருவம் தெரியும் வகையில் கண்ணாடிகளைப் பதித்தோம். தரையில் உயர்ந்த ரக விரிப்பு, கண்ணைக் கவரும் வண்ண அமைப்பு என நிறையச் செலவு செய்து அந்த ஸ்டுடியோவை உருவாக்கினோம். இப்போது மாணவர்கள் அதிகமாகிவிட்டதால் இடம் போதவில்லை. கூடுதலாக வேறு இடம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய ஸ்டுடியோவில் குழந்தைகளை விட்டுவிட்டு அப்படியே ஷாப்பிங் போய்விட்டு வரும் பெற்றோர்கள் அதிகம். ஷாப்பிங் முடிந்ததும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வருவார்கள். அதற்கு இப்போதுள்ள இடம் ரொம்ப வசதியாக இருக்கிறது.
நான் படித்தது ஹோட்டல் மேனேஜ்மென்ட். அப்புறம் எம்பிஏ ஃபினான்ஸ் படித்தேன். இது தொடர்பான வேலையைத்தான் நான் வேலை செய்யும் அமெரிக்கக் கம்பெனியில் செய்கிறேன். ஆனால் வீட்டிற்கு வந்ததும் என் உலகமே மாறிவிடுகிறது. பரதநாட்டிய ஆசிரியர், கர்நாடக சங்கீத ஆசிரியர், பள்ளி நிர்வாகி என்று அவதாரம் எடுக்கிறேன். இப்படிச் சமாளிக்க முடிவதற்குக் காரணம், நான் சென்னை மயிலாப்பூரில் லேடி சிவசாமி அய்யர் கேர்ள்ஸ் ஹையர் செகன்டரி ஸ்கூலில் படித்ததுதான். அந்தப் பள்ளியில் படிக்கும்போது மிக நன்றாக நாட்டியம் ஆடக் கற்றுக் கொண்டேன். அந்தப் பின்னணிதான் அமெரிக்காவில் துணிந்து டான்ஸ் கிளாஸ் எடுக்கக் காரணமாக இருந்தது.
நான் அமெரிக்காவுக்குச் சென்றாலும் சென்னையை மறந்துவிட முடியாது. சென்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நானும் எனது கணவர் நரேனும் திட்டமிட்டுள்ளோம். சென்னையில் உள்ள பொருளாதாரரீதியாக நலிவடைந்த குழந்தைகளுக்குக் கல்வி கற்க உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். உதாரணமாக ஒரு குழந்தையின் அப்பா ஆட்டோ ஓட்டுவார். அம்மா நான்கு வீடுகளில் பாத்திரம் கழுவுவார். அப்படிப்பட்டவர்களின் குழந்தைகள் படிப்பது கஷ்டம். அந்தக் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதென்று முடிவு எடுத்திருக்கிறோம். அதற்குக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க இங்குள்ள தன்னார்வ அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறோம். முதலில் குறைந்தது 50 குழந்தைகளுக்கு உதவ வேண்டும். அதன்பின் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோம்'' என்றார்.
படங்கள்: பி.விஜயகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...