தன்னை உருவாக்கிய சமூகத்திற்கு, ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலின் அடிப்படையில் தொடங்கப்பட்டு, இன்று சமூகத்திற்கு தன்னை அடையாளம் காட்டி வருகிறது ஆயக்குடி மக்கள் மன்றம்.
மாநில அளவில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 24 பேரை வெற்றிபெறச் செய்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த மக்கள் மன்றம்.
பழனியில் இருந்து திண்டுக்கல் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆயக்குடி பேரூராட்சி.
இந்த கிராமத்தைச் சேர்ந்த படிக்காத இளைஞர்களான ஆனந்தன், சண்முகம் ஆகியோர் நற்பணி இயக்கம் ஆரம்பித்து, சமுதாயத் தொண்டு செய்ய வேண்டும் என நினைத்தனர்.
இந்தக் கருத்தை, இதே கிராமத்தில் படித்து அரசு வேலைகளில் உள்ள பி. ராமமூர்த்தி, ஜி. முருகேசன், கே. பெரியதுரையிடம் தெரிவித்தனர். பின்னர், அனைவரும் சேர்ந்து சமூகப் பணியாக கல்விப் பணி செய்வதே சிறந்தது எனத் தீர்மானித்து, அரசுப் பணி போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் ஆயக்குடி மக்கள் மன்றம்.
2005 ஆம் ஆண்டில், தலைமை செயலகப் பணிக்கான போட்டித் தேர்வில் மாணவர்களைப் பங்கேற்க வைத்தனர்.
இந்த மையத்தின் மூலம் 50 மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர். ஆனால், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
நம்பிக்கையற்றுப் போனதால், இந்த முறை ஒரே ஒரு மாணவர் மட்டுமே, பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டார். அவர் வெற்றிபெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணித் தேர்வில் 65 பேரை தயார் செய்து அனுப்பியதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 24 பேர் வெற்றி பெற்றனர்.
இதன்மூலம் இம்மன்றத்தின் பெயர் மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில், இம்மையத்தின் மூலம் தேர்வு எழுதிய 120 பேரில், 10 பேர் தேர்ச்சி பெற்றனர்.
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 108 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த சாதனைகள் குறித்து, ஆயக்குடி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பி. ராமமூர்த்தி கூறியதாவது:
""சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற நோக்கில் மக்கள் மன்றத்தை ஆரம்பித்து எங்களது சொந்த செலவில் தேர்வுக்குத் தேவைப்படும் பாடங்களை தயார் செய்து, மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். முற்றிலும், இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி வகுப்புகள் நடத்தும் நாங்கள் அனைவரும் அரசுப் பணியாளர்கள் என்பதனால் ஞாயிற்றுக்கிழமைஒரு நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கான வகுப்பறைகளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் வழங்கி வருகிறார்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் மக்கள் மன்றத்தின் பெயரை பிரபலப்படுத்தி விட்டது.
இதனால் சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, விழுப்புரம், தென்காசி என மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாணவர்களும், இப்போது பயிற்சி வகுப்பிற்கு வரத் தொடங்கி விட்டனர்.
இதனால், வகுப்பறையில் போதிய இடம் இல்லாமல் வாயில், ஜன்னல்களுக்கு வெளியே நின்றபடியே மாணவர்கள் படிக்கும் நிலை உருவாகி உள்ளது. போதிய இடவசதி இல்லாததால், தேர்வு தொடங்கும் சமயத்தில், மாணவர்கள் வந்தால் போதும் என்று கூறும் நிலை உள்ளது.
பயிற்சி வகுப்புகளுக்காக மாணவர்களிடம் கட்டணமோ, மையத்தை நடத்துவதற்கு யாரிடமும் நன்கொடைகளோ வசூலிப்பது இல்லை.
சென்னையில் உள்ள பயிற்சி மையத்தின் மூலம் பயின்று அரசுப் பணி கிடைத்ததால் பிறருக்கும் அரசு வேலை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.'' என்றார்.
உங்களிடம் படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்கிறீர்கள்.. படித்து அரசு வேலையில் சேர்ந்த பின்பு நன்கொடை எதுவும் எதிர் பார்க்கிறீர்களா? என்றோம்.
""அரசுப் பணியில் சேர்ந்த பின்னர் லஞ்சம் வாங்காமல், நாடி வருபவர்களிடம் கனிவாகப் பேசி அவர்களின் குறைகளைக் களைய வேண்டும் என்பதே, எங்கள் மாணவர்களிடம் நாங்கள் கேட்கும் குருதட்சணை'' என்றார் பி.ராமமூர்த்தி பளீரென சிரித்தபடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


