முகங்கள்: மின்மினிகளுக்கு முகவரி தருபவர்!
உங்கள் ஊரில் முத்துசாமி...முத்துசாமி என்று ஒருவர் டீக்கடையில் வேலை செய்து கொண்டிருப்பார். அவர் நன்றாகப் பாடுவார். இது உங்கள் ஊர் ஆட்களுக்கு மட்டும் தெரியும். அவருக்கு மேடையேறவோ, சினிமாவில், சீரியலில்


உங்கள் ஊரில் முத்துசாமி...முத்துசாமி என்று ஒருவர் டீக்கடையில் வேலை செய்து கொண்டிருப்பார். அவர் நன்றாகப் பாடுவார். இது உங்கள் ஊர் ஆட்களுக்கு மட்டும் தெரியும்.
அவருக்கு மேடையேறவோ, சினிமாவில், சீரியலில் பின்னணி பாடவோ இதுவரை வாய்ப்புக் கிடைத்ததே இல்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இல்லை. அதற்கு அவர் இதுவரை எந்த முயற்சியும் செய்தது இல்லை.
சினிமாவில் பாட என்ன செய்ய வேண்டும்? யாரைப் பிடிக்க வேண்டும்? என்றெல்லாம் முத்துசாமிக்குத் தெரியாது.
தானுண்டு தன் டீக்கடை வேலையுண்டு என்றிருக்கும் முத்துசாமிக்கு திடீரென்று இளையராஜா இசையமைப்பில் பாடுவதற்குச் சான்ஸ் வீடு தேடி வந்துவிடும் என்று சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா?
நிச்சயமாக நம்பமாட்டீர்கள். ஆனால் இனி நீங்கள் நம்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.
உலகம் முழுவதும் உள்ள பாடகர்கள் முதல் மாடர்ன் ஆர்ட் வரைபவர்கள் வரை கலைத்துறை சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்கு இனி வாய்ப்புகள் வீடு தேடி வரப் போகிறது. அதற்கான ஒரு மேடையை ஒருவர் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
ஆம். அவர் மனோரஞ்சன். கேரளத்தின் மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த அவர் இப்போது vfindu.com என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணைய தளத்தின் மூலம் தான் வாய்ப்புகள் பல நலிந்த கலைஞர்களுக்கும் தேடி வரப் போகின்றன.
இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சென்னைக்கு வந்திருந்த மனோரஞ்சனைச் சந்தித்துப் பேசினோம்.
எதற்காக இந்த இணைய தளத்தை ஆரம்பித்தீர்கள்?
""நிறையப் பேர் இப்போது இணையதளம் தொடங்குகிறார்கள். வித்தியாசமாக ஓர் இணையதளத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு உடனே வறுமைப்பட்ட ஏழைக் கலைஞர்களுக்கு உதவும்படி அதில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
இப்படிப்பட்ட இணையதளம் ஒன்றைத் தொடங்கக் காரணம் இருக்கிறது. நான் 20 வருடங்களுக்கு முன்பு விளம்பரப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது விளம்பரப் படங்கள் எடுப்பதற்கு லொகேஷனைத் தேடியலைவேன். திறமையான ஆர்ட்டிஸ்ட்கள் கிடைக்காமல் திண்டாடுவேன்.
திறமையான ஆர்டிஸ்ட்களைப் பற்றிய தகவல்களைத் தரும் ஓர் ஏற்பாடு இருந்தால் எளிதாக ஆர்ட்டிஸ்ட்களைக் கண்டறியலாம் அல்லவா? என்று அப்போதே தோன்றும். இது ஒரு காரணம்.
பல ஆண்டுகளாக கேரளத்திலும் சரி, வேறு இடங்களிலும் சரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அரைகுறையாகச் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த வாய்ப்புகள் இவர்களைப் பற்றித் தெரிந்தவர்கள் மூலமாக மட்டுமே இவர்களுக்குக் கிடைக்கின்றன. எனவே பல சமயங்களில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பார்கள். இவர்களைப் பற்றிய எல்லாத் தகவல்களும் ஓர் இணைய தளத்தில் இருந்தால் வெளி ஊர், வெளிமாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கூட இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லவா? எனவே இந்த இணைய தளத்தை ஆரம்பித்தேன்.
யாரெல்லாம் இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்ள முடியும்?
கலைத்துறை சார்ந்த யாராக இருந்தாலும் இதில் தங்களுடைய தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். மிமிக்ரி கலைஞர்கள், மேஜிக் நிகழ்ச்சி நடத்துபவர்கள், மேக் அப் கலைஞர்கள், பாடகர்கள், திரைக்கதை எழுதுபவர்கள், மாடலிங் செய்பவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், கதை, கவிதை, பாடல் எழுதுபவர்கள், திரைப்படங்களில் நடிக்கும் மிருகங்களைச் சப்ளை செய்பவர்கள், திரைப்படங்கள் எடுக்கத் தங்கள் குடிசையை வாடகைக்கு விடுபவர்கள் அல்லது பெரிய பங்களாவை வாடகைக்குத் தருபவர்கள் என கிரியேட்டிவ் துறையில் உள்ள யாராக இருந்தாலும் தங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் இந்த இணைய தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.
உங்கள் இணைய தளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைக் கலைஞர்கள் பதிந்து வைத்துக் கொண்டால் வாய்ப்புக் கிடைக்கும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
உதாரணமாக, இப்போது தமிழ்நாட்டில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிங்கப்பூர், மலேசியாவிற்கு மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப் பலர் சென்று வருகிறார்கள். ஆனால் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் ஏற்கனவே அங்கே இசை நிகழ்ச்சி நடத்தியவர்கள்தாம் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு மட்டும்தான் அங்குள்ளவர்களுடன் தொடர்பு இருக்கும். ஆனால் பல திறமையானவர்கள் இப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைக்காமல் இங்கே தவித்திருப்பார்கள். அவர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் எதுவும் இருக்காது. என்னுடைய இந்த இணைய தளத்தின் மூலம் இங்குள்ள பல திறமையானவர்களை வெளிநாட்டவர்கள் தெரிந்து கொள்ள முடியும். வெளிநாட்டவர்கள் நிகழ்ச்சிகள் நடத்தும்போது இவர்களைத் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்புகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இதில் பங்கேற்க நமது நாட்டில் இருந்து புகழ்பெற்ற கலைஞர்களே அங்கே போய் வந்து கொண்டு இருக்கிறார்கள். புதியவர்கள் அங்கே போக முடிவதில்லை. காரணம் இவர்களைப் பற்றி அங்குள்ளவர்களுக்குத் தெரியாது. எனது இணைய தளத்தின் மூலம் வெளியுலகுக்கு அதிகம் தெரியாத, பல திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.
ஒருவர் தன்னைப் பற்றிய என்னென்ன விவரங்களை உங்களுடைய இணைய தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ள முடியும்?
எங்களுடைய இந்த இணையதளத்தில் ஒருவர் தன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ஒரு பாடகர் தனது பெயர், முகவரி, தொலைபேசி எண்கள், தான் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, வெளிவந்த ஆல்பங்களின் எண்ணிக்கை என்று தன்னைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் பதிந்து வைத்துக் கொள்ளலாம். கூடவே தான் பாடிய பாடல்களின் ஆடியோவையும் இதில் இணைத்துக் கொள்ளலாம்.
அது போல ஓவியர் தன்னைப் பற்றிய விவரங்களுடன் கூட, தனது ஓவியங்களையும், ஓர் எழுத்தாளர் தன்னுடைய புத்தகங்களின் அட்டை மற்றும் சில பக்கங்களையும் இதில் இணைக்கலாம்.
மாடலிங் செய்பவர்கள், நடிகர்கள், மிமிக்ரி செய்பவர்கள்,மேஜிக் செய்பவர்கள், நாட்டியமாடுபவர்கள் என்று நிகழ்த்து கலைகளில் ஈடுபடுபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களுடன் தங்களுடைய வீடியோ க்ளிப்பிங்குகளை இதில் இணைத்துவிடலாம்.
இதன் மூலம் உலகின் எல்லா இடங்களிலும் இருந்து இந்த இணைய தளத்தைப் பார்ப்பவர்களின் கவனத்தை இவர்கள் கவர்ந்து விடுகிறார்கள்.
உலக அளவில் இப்படிப்பட்ட இணையதளத்தை தொடங்க வேண்டிய தேவை என்ன?
இப்போது எல்லாத்துறைகளும் உலக அளவில் வளர்ந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் எதுவும் சுருங்கிவிடுவதில்லை. எனவே இந்த இணைய தளத்தைப் பார்க்கிறவர்கள் வெளிநாட்டிலோ, நம் நாட்டில் பிற மாநிலங்களிலோ இருக்கலாம். அவர்கள் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்த நினைக்கும் போது பரதநாட்டிய கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. ஓர் இசை ஆல்பங்கள் தயாரிப்பவர் புதிதாக ஓர் ஆல்பம் வெளியிட வேண்டும் என்று நினைக்கும்போது பாடகருக்கும், இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இணையதளத்தைப் பார்க்கும் ஒரு பதிப்பாளர் ஒரு புத்தகம் வெளியிட நினைக்கும்போது இந்த இணையதளத்தைப் பார்த்து ஓர் எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்து அவரைத் தேடிப் பிடித்துப் புத்தகம் எழுதச் சொல்ல முடியும். ஒரு திரைப்பட இயக்குநர் தனது படப்பிடிப்புக்கான லொகேஷன் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் போது இந்த இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ள லொகேஷன் படங்களையும் அவற்றின் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களையும் அறிந்து உடனே தொடர்பு கொள்ள முடிகிறது.
இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்ள இப்போது எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். இப்போது பிரபலமாக உள்ள கலைத்துறை சார்ந்த எல்லாரும் இந்த நட்சத்திரங்களைப் போன்றவர்கள். ஆனால் மின்மினிப் பூச்சிகளைப் போல ஒளிவிட்டுக் கொண்டு பல திறமையானவர்கள் உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் ஒருநாள் நிச்சயமாக நட்சத்திரமாக ஒளிர வேண்டியவர்கள். அதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மின்மினிப் பூச்சிகள் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த இணைய தளத்தை ஆரம்பித்திருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரப் படங்கள் எடுத்தவன் என்பதால் இந்த இணையதளத்தைப் பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ள விளம்பரப் படங்களையும் எடுத்திருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...