

குழந்தைகளின் கற்பனைக்கு கட்டுப்பாடு ஏது? பார்வையில் படுபவற்றை எல்லாம் தூரிகையில் நிரப்பிவிடத் துடிக்கும் சுதந்திரத்தின் ஆளுமை, இந்த இளம் பிஞ்சுகளின் கைகளில் வழிகிறது.
"இப்படித்தான் இருக்க வேண்டும், இதுதான் விதி' என்ற சட்டதிட்டங்கள் எதுவுமில்லாமல் இயல்பாய் பிறந்த கோடுகளில் மிளிர்கின்றன ஷில்பா, ஷிகா சகோதரிகளின் ஓவியங்கள்.
ஷில்பா படிப்பது 8-ஆவது. ஷிகா படிப்பது 5-ஆவது. கேரள மாநிலம் திருவனந்தபுரம்தான் சகோதரிகளின் சொந்த ஊர்.
இரண்டரை வயதிலேயே தூரிகை பிடிக்கத் துவங்கிவிட்டார் ஷில்பா. அவரைப் பார்த்து ஓவியத்தின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் ஷிகா. இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார்கள். தேசிய, மாநில விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு குழந்தைகள் தின விழாவுக்காக கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் இவர்களது ஓவியக் கண்காட்சி கோவையில் 5 நாட்கள் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற இவர்களின் முதல் ஓவியக் கண்காட்சி இது.
விதவிதமான இயற்கைக் காட்சிகளும், கடவுளர் உருவங்களும், குழந்தைகளின் உலகமுமாக வித்தியாசமான வண்ண ஓவியங்கள் பார்வையாளர்கள் நெஞ்சை அள்ளின.
""எனக்கு இயற்கைக்காட்சிகள், பறவைகள், பூக்கள் என்றால் ரொம்பவும் இஷ்டம்...'' என்கிறார் ஷில்பா. அவரது ஓவியங்களில் பெரும்பாலும் அதுபோன்ற காட்சிகளே இடம்பெற்றுள்ளன.
""மனிதர்கள், உறவுகள் பற்றி வரைவது எனக்கு நிரம்பப் பிடிக்கும்...'' என்கிறார் ஷிகா, மழலைக் குரலில். இவரது ஓவியங்களில் மழை பிரதானமாய் இடம்பிடித்துள்ளது. ஊசி முனையாய் இறங்கும் மழையின் ஈரத்தில் மனிதர்களின் செயல்பாடுகளை இயல்பாய் தீட்டியிருக்கிறார் ஷிகா.
ஓவியப் போட்டிகளில் பங்கேற்கவும், வெற்றி பெற்ற போட்டிகளுக்காக பரிசு வாங்கவும் வேண்டி தில்லி, சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளத்தின் பல பகுதிகளுக்கும் சென்றிருக்கிறார்கள் சகோதரிகள்.
""எந்த ஊருக்குப் போனாலும், அங்கு காணும் காட்சிகளை காகிதத்தில் சிறைப்பிடித்து விடுவார்கள். நேரம் கிடைத்தால், அப்போதே ஓவியமாக வரைந்து விடுவார்கள். இல்லாவிட்டால், அவுட்லைனை மட்டும் வரைந்துவிட்டு, வீட்டிற்கு வந்து முழு ஓவியத்தையும் நிறைவு செய்து விடுவார்கள்....'' என்கிறார் இக் குழந்தைகளின் தந்தை சிவராமன்.
திருவனந்தபுரத்திலுள்ள கிளிமானூர் அரண்மனை, கவரியார் மாளிகை, கொல்லத்தில் உள்ள ஓம்சிரா, குதுப்மினாரின் ஒரு பகுதி சுவர் என்று சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களின் ஓவியங்கள் ஒருபுறம் என்றால், கண்களை உருட்டியபடியே வெண்ணெய் தின்னும் கண்ணன், காய்கறிச் சந்தை, வயலில் வேலை செய்யும் பெண்கள், குழந்தைகளின் விளையாட்டுத் திடல், படகு சவாரி, சுதந்திர தின கொண்டாட்டம், நதிகளின் ஊடே அமைந்த வீடுகள் என்று விரிகின்றன ஓவியங்கள்.
வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், ஸ்கெட்ச் பென், பென்சில் என்று எல்லாப் பொருட்களையும் உபயோகித்திருக்கிறார்கள்.
ஓவியத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததற்காக 2007-ம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் விருதும் ஷிகாவுக்குக் கிடைத்திருக்கிறது. மத்திய அரசு வழங்கும் இந்த விருதில் ஒரு சான்றிதழும், ரொக்கப் பரிசு ரூ.10,000-மும் அடங்கும்.
ஓவியத்தைத் தவிர, ஓய்வு நேரத்தில் கவிதைகள் எழுதுவதும் ஷிகாவின் பொழுதுபோக்கு. தான் எழுதிய கவிதைகளை "கிளிக் கொட்டாரம்' (கிளியின் அரண்மனை) என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.
"கிளிக் கொட்டாரத்திலுள்ள' 19 கவிதைகளையும் தன் இனிமையான குரலில் அழகாகப் பாடிக் காட்டுகிறார் ஷிகா.
""கர்நாடக இசையும் கற்று வருகிறாள்'' என்று பெருமிதமாகக் குறிப்பிடுகிறார் அவரது தாயார் லேகா.
தங்கைக்கு சற்றும் சளைத்தவரில்லை அக்கா ஷில்பா. ஓவியத்துக்காக மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்பு பெற்றிருக்கிறார் இந்த சுட்டி. 20 வயது வரை இந்த ஸ்காலர்ஷிப் இவருக்குக் கிடைக்குமாம். அரசு சார்பில் அவ்வப்போது பல இடங்களில் நடைபெறும் ஓவியக் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கேற்று வருகிறார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஷில்பா வரைந்த ஓவியம் கேரள மாநில அரசின் விருதை தட்டி வந்துள்ளது. சங்கு முத்திரையுடன்கூடிய அந்த அரசு விருது இவருக்கு 2008-ல் வழங்கப்பட்டது. சிக்குன்குனியா பற்றி விழிப்புணர்வை ஊட்டும் வகையில் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய அனிமேஷன் படம் ஒன்றையும் எடுத்திருக்கிறார் இவர். மத்திய அரசின் பாலஸ்ரீ விருதுக்காக விண்ணப்பித்திருக்கிறார்.
அக்காவும், தங்கையும் படிப்பிலும் சளைத்தவர்களல்ல. அதிலும் ஷிகா, மிகச் சிறந்த மாணவிக்கான விருது பெற்றவர்.
""பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதால் இவர்களின் கற்பனைத் திறன் வளர்கிறது. பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்பதால், மற்ற குழந்தைகளுடன் கலந்து பழக வாய்ப்புக் கிடைக்கிறது. மற்றவர்களின் கலைத் திறனைக் கண்டு ரசிக்க முடிகிறது. அதுவே அவர்களுக்கு ஊக்கமாகவும் அமைகிறது'' என்கிறார்கள் சிவராமனும், லேகாவும்.
கண்காட்சிக் கூடத்தில்கூட கையில் பிரஷ்ஷை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு காட்சியை தீவிரமாக வரைந்து கொண்டிருந்த குழந்தைகள், தங்களின் வருங்கால லட்சியம் குறித்து மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
""டாக்டர் பிளஸ் ஆர்ட்டிஸ்டாக வேண்டும் என்பது என் விருப்பம்...'' -இது ஷிகா.
""ஃபேஷன் டிசைனராக வருவது என் லட்சியம்...'' -இது ஷில்பா.
வாழ்த்துக்கள் குழந்தைகளே. வண்ணம்போல் வாழ்வு!.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.