பயிற்சி: வீடு தேடி வரும் யோகா!
பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வீட்டுக்கு வருவார். கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர ட்யூஷன் டீச்சரும் வீட்டுக்கு வருவார். யோகாசனம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் வீடு தேட


பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வீட்டுக்கு வருவார். கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர ட்யூஷன் டீச்சரும் வீட்டுக்கு வருவார். யோகாசனம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் வீடு தேடி வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சென்னையில் யோகாசனம் சொல்லித் தர ஆசிரியர்கள்...இல்லை...இல்லை...ஒரு குடும்பத்தினர் வீடு தேடி வருகிறார்கள். அந்த வித்தியாசமான குடும்பத்தின் தலைவர் கே.எஸ்.இளமதி. சென்னை புறநகர்ப் பேருந்துநிலையத்தின் எதிர்ப்புறத்தில் அரும்பாக்கம் ஜெய்நகரில் உள்ள அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
யோகாசனத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது?
மதுரைக்கு அருகே உள்ள வத்தலக்குண்டுதான் சொந்த ஊர். நான் சென்னைக்கு வந்து பத்திரிகைகளுக்கு வெளியிலிருந்து எழுதிக் கொண்டு இருந்தேன். நிரந்தரமான தொழிலோ வேலையோ இல்லாத சூழ்நிலை. மனதில் எப்போதும் குழப்பமும் வெறுப்பும் குடிகொண்டிருந்த நேரம். யோகாசனம் செய்தால் மனம் அமைதியாகும் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். அப்போதிருந்து யோகாசனம் கற்றுக் கொள்ள ஆசை வந்தது.
ஆனால் யோகாசனம் கற்றுக் கொள்வதற்காக கட்டணம் செலுத்த முடியாதநிலை இருந்தது. கடைசியில் நீண்டநாட்களுக்குப் பின் புரசைவாக்கத்தில் உள்ள "யோகாசன ஆலயத்தில்' டி.எஸ்.கல்யாணசுந்தரம் மாஸ்டரிடம் கற்றுக் கொண்டேன்.
பிறருக்குக் கற்றுக் கொடுப்பது பற்றி?
பத்திரிகை வேலைக்காக பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜைச் சந்திக்கச் சென்றேன். அவரிடம் நான் யோகா கற்றிருப்பதைச் சொன்னவுடன் அவர் ரொம்ப ஆர்வமுடன் தனக்குக் கற்றுத் தரச் சொன்னார். அதன் பிறகு அவர் தன் நண்பர் பலரிடம் என்னைப் பற்றிச் சொல்ல, நான் பலருடைய வீடுகளுக்குச் சென்று யோகா கற்றுத் தருவது வழக்கமாயிற்று.
நான் யோகா செய்வதைப் பார்த்த என் மனைவி சிவகாமியும் என்னிடம் யோகா கற்றுக் கொண்டார். என்னுடைய மகள் ப்ரியாவும், மகன் பாலாஜியும் குழந்தைகளாக இருக்கும்போதே யோகாசனம் கற்றுக் கொண்டார்கள்.
என்னிடம் யோகாசனம் கற்றுக் கொள்பவர்கள் பெரும்பாலும் ஓரளவு வசதியுள்ளவர்கள். தொழிலதிபர்கள், பெரிய அதிகாரிகள் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று கற்றுத் தருகிறேன். அவர்களுக்கு நேரம் முக்கியம். குறித்த நேரத்தில்ó அவர்கள் இடத்தில் இருக்க வேண்டும்.
நிறையப் பேர் யோகாசனம் கற்றுத் தருகிறார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?
பிற யோகா ஆசிரியர்களுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு என்றால், பிறர் யோகாசனத்தைச் செய்து காண்பித்து அதைப் போலச் செய்யச் சொல்வார்கள். ஆர்வமாய்க் கற்றுக் கொள்ள வருபவர்கள் அவர்கள் செய்வதைப் போலச் செய்ய முயற்சி செய்வார்கள். சிலருக்கு உடல் வளையாது. உடனே தனக்கு யோகாசனம் செய்ய முடியாது என்று ஒரு சில நாட்களிலேயே யோகாசனம் கற்றுக் கொள்வதை விட்டுவிடுவார்கள்.
ஆனால் நான் யோகா கற்றுக் கொள்பவரின் உடலின் தன்மைக்கேற்ப யோகாசனங்களைச் சொல்லித் தருகிறேன். அதுமட்டுமல்ல, அவருக்கு உடல் வளையவில்லை என்றால் வளைவதற்கு நான் உதவிசெய்கிறேன். கற்றுக் கொள்பவரைக் குனிய வைத்து, வளைத்து யோகாசனம் செய்ய வைக்கிறேன். இதனால் சில நாட்களிலேயே அவர்களுடைய உடல் யோகாசனம் செய்யத் தயாராகிவிடுகிறது.
பெண்கள் யோகாசனம் கற்றுக் கொள்ள வரும்போது நான் இதுபோலச் சொல்லித் தரமுடியாது என்பதால் பெண்ணே பெண்ணுக்குக் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதற்காக என்னுடைய மனைவியையும் கூடவே அழைத்துச் சென்றேன். என் மனைவி பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். யோகாசனம் கற்றுக் கொள்ளும் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு என்னுடைய மகனும் மகளும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இதற்காக நாங்கள் அதிகாலையிலேயே எழுந்துவிடுவோம். முதல் யோகா வகுப்பு அதிகாலை 5 மணிக்கே ஆரம்பமாகிவிடும். அந்த வீட்டில் முடித்துவிட்டு அடுத்த வீட்டிற்கு ஆறரை மணிக்குச் செல்வோம். அதற்கடுத்த கிளாஸ் எட்டு மணிக்கு ஆரம்பமாகும்.
அதற்குப் பின்பு காலை 10 மணிக்கு மேல் என் மனைவி மட்டும் யோகா கற்றுக் கொடுக்கச் செல்வார். வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் காலையில் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு அந்த நேரத்தில் கற்றுக் கொள்வார்கள்.
கடும் மழை அடித்தாலும், கொடிய பனி பெய்தாலும் நாங்கள் உரிய நேரத்தில் யோகாசனம் கற்றுக் கொடுக்கச் சென்றுவிடுவோம். அதுபோல அதிகாலையில் மூன்று மணிக்கே எழுந்து நான் செய்ய வேண்டிய யோகாசனங்களைச் செய்து முடிப்பேன். அதன் பிறகு பூஜை செய்துவிட்டுத்தான் யோகாசனம் கற்றுக் கொடுக்க வெளியில் கிளம்புவேன்.
நல்ல உடல்நலத்திற்காகத்தானே யோகாசனப் பயிற்சி?
யோகாசனத்தைப் பொறுத்த அளவில் உடல் ஆரோக்கியம் என்பதற்கு நான் இரண்டாமிடம்தான் தருவேன். மன அமைதிக்குத்தான் முதலிடம். மன அமைதியில்லாதவர்களின் மனதை அமைதிப்படுத்த யோகாசனம் உதவுகிறது. நான் இதுவரை காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, கை,கால் வலி என்று படுத்ததில்லை. டாக்டரிடம் போனதில்லை. காரணம் தொடர்ந்து யோகாசனம் செய்து வருவதுதான்.
யோகா என்றால் இணைதல் என்று சொல்லலாம். மனம், உடல் ஆகியவற்றின் இணைவுதான் யோகா. உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மனம் என்பது மூளையில் உள்ளது. சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்துவிடும்போது உடல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது.
அமெரிக்காவில் நோய்களைக் குணப்படுத்தும் முறை ஒன்று உள்ளது. "புராகிரசிவ் ரிலாக்சேஷன்'என்பார்கள் அதை. இந்த முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் டாக்டர் தாம்ஸன். உடல் நோய்களுக்கு முக்கியக் காரணம் மனமே என்ற அடிப்படையில் செய்யப்படும் அந்தச் சிகிச்சை முறையில் முதலில் தசைகளை அசைக்கச் சொல்வார்கள். பின்னர் அதற்கு அழுத்தம் கொடுக்கச் சொல்வார்கள். பின்பு தளர்ச்சி பெறச் சொல்வார்கள். அசைத்து, அழுத்தும் கொடுத்து, மெதுவாக ரிலாக்ஸ் பண்ணுகிற இந்த முறையில் யோகாசனத்தின் அடிப்படைகள் பொதிந்து கிடக்கின்றன.
உடலின் தசைகளை இறுக்கமாக்கி, பின்னர் அதை தளரவிடுவதால் மனம் புத்துணர்ச்சி பெருகிறது. யோகா என்பது உடற்பயிற்சி அல்ல. வேக வேகமாகச் செய்யும் உடற்பயிற்சியில் நீங்கள் எளிதில் களைப்படைந்து விடுவீர்கள். ஆனால் நிதானமாகச் செய்யும் யோகாசனப் பயிற்சியில் களைப்படைதலுக்கே இடமில்லை.
யோகாசனத்தை வயதானவர்கள் செய்ய முடியுமா?
யோகாசனத்தை எந்த வயதினரும் செய்யலாம். எங்களிடம் யோகாசனம் கற்றுக் கொண்ட 70 வயதுப் பாட்டிக்கு சர்க்கரை வியாதி இருந்தது. படுத்த படுக்கையாக அவர் இருந்தார். அவரைத் தினமும் படுக்கையில் இருந்து தூக்கி உட்கார வைத்து அவர் உடல்நிலைக்கு உகந்த யோகாசனங்களைச் சொல்லிக் கொடுத்தோம். சில மாதங்களிலேயே அவர் உடல்நிலை தேறிவிட்டது. இன்று அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கும் கூட கருவுற்ற நான்கு மாதங்களுக்கு மேல் யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் சில பெரிய டாக்டர்களே எங்களிடம் யோகாசனப் பயிற்சிக்காக வருகிற போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மருந்து மாத்திரைகளால் குணமாகாத பல உடல் நலப் பிரச்னைகளை யோகாசனத்தால் தீர்க்க முடியும் என்பதே உண்மை.
தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு ஹாலாசனம், சர்வாங்காசனம் போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்கிறோம். இதன்மூலம் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடு சீரடைகிறது.
எந்த யோகாசனப் பயிற்சியாக இருந்தாலும் தொடர்ந்து 6 மாதங்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் உடம்பு அதற்குச் செட் ஆகும்.
வீட்டிலும் வெளியிலும் ஏகப்பட்ட பிரச்னைகளால் டென்ஷன் ஏற்படுகிறது. அப்படி இருக்கும்போது யோகாசனம் செய்வதால் டென்ஷன் எப்படிக் குறையும்?
யோகாசனத்தைத் தொடர்ந்து செய்வதால் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலை அசைத்து, அதற்கு அழுத்தம் கொடுத்து பின்பு தளர்ச்சியடையும் இந்தப் பயிற்சிகளினால் உடலும் மனமும் அதற்குப் பழகிவிடுகிறது. வெளியில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அந்தப் பிரச்னைகளினால் மனஇறுக்கம் ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.
வீடு வீடாகச் சென்று யோகாசனம் கற்றுக் கொடுப்பதால் உங்களுடைய நேரம்தான் வீணாகிறது. கற்றுக் கொள்ள விரும்புபவர்களை உங்கள் இடத்திற்கு வரவழைத்துக் கற்றுக் கொடுக்கலாமே?
நீங்கள் சொல்வது உண்மைதான். அதற்குப் பெரிய இட வசதி வேண்டும். பெரிய இடத்தை வாங்குவதற்கோ, வாடகைக்கு எடுப்பதற்கோ தற்சமயம் வசதியில்லை. நிச்சயம் நீங்கள் சொல்கிறபடி யோகா வகுப்புகளை எடுக்கிற காலம் எங்களுக்கு வரும்.
படங்கள் : ஏ.எஸ். கணேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...