ஆலயம்: கேட்ட வரம் தரும் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர்
திருநெல்வேலி மாவட்டம்,குற்றாலத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மறக்காமல் வந்து வணங்கி செல்லுமளவிற்கு மிகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில்.நினைத்தது நடப்


திருநெல்வேலி மாவட்டம்,குற்றாலத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மறக்காமல் வந்து வணங்கி செல்லுமளவிற்கு மிகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில்.நினைத்தது நடப்பதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் இக்கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
ராமாயண காவியத்தில் "சுயம்பிரபை தீர்த்தம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள தீர்த்தக்கரையில் (கிஷ்கிந்தாபுரம்-கிருஷ்ணாபுரம்) இந்த கோவில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
கோவில் ஸ்தல வரலாறு : ஸ்ரீ ராமர் காரியமாக, ஸ்ரீ அனுமார் மற்றும் வானர வீரர்கள் சீதையை தேடிக்கொண்டு தட்சிண தேசத்திற்கு வந்தனர்.சீதையைத் தேடி, தேடி களைப்பு அடைந்த அவர்களுக்கு பசி-தாகம் ஏற்பட்டது.களைப்புடன் ரிஷிபிலத்திற்கு வந்த அனுமாரும்,வானர வீரர்களும் அங்குள்ள குகை ஒன்றிலிருந்து அன்னங்களும்,வெள்ளை நாரைகளும், பலவிதமான பறவைகளும் உடல் நனைந்து வருவதைக்கண்டனர்.
குகைக்குள் தணணீர் இருக்குமென்று கருதிய அனுமாரும்,வீரர்களும் அந்த ரிஷிபிலத்திற்குள் நுழைந்தனர்.உள்ளே நதி,குளங்கள்,மாட மாளிகைகள்,கோபுரங்கள் இருப்பதை அவர்கள் கண்டனர்.
அந்த இடத்தில் ஒரு தவமுது மகளான சுயம்பிரபையைக்கண்டனர்.அந்த சுயம்பிரபையை வணங்கிய அனுமார்,குகைக்குள் இருப்பதற்கான காரணத்தினை கேட்டார்.(தற்பொழுதும் இந்த குகையும்,சுயம்பிரபை குளமும் உள்ளது).
சுயம்பிரபையும் தனது வரலாற்றினை கூறினாள்.பண்டைய நாளில் மயன் என்ற பேராற்றல் உடையவன் இருந்தான்.மாயை செய்வதில் வல்லவன். விசுவகருமானாகிய மயன்,தன் மாயையால் இந்த அழகிய பட்டணத்தினை படைத்தான்.பிரம்ம தேவரிடம் பெற்ற தவத்தின் பலனால் ஹேமை என்ற தெய்வப்பெண்ணுடன் இந்த பட்டணத்தில் இருந்தான்.
இந்த விபரத்தினை நாரதர் மூலம் அறிந்த இந்திரன்,மயனை அம்பினால் தாக்கினான்.இதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு இந்திரன் அவதியுற்றான்.தேவர்கள் இது குறித்து முறையிடவே, மகாதேவன் அகண்ட காவிரியை குகைக்குள் ஏவிவிட்டார்.
அதில் ஸ்நானம் செய்த இந்திரனும் பாவம் நீங்கி தேவலோகம் சென்றடைந்தான்.அன்று முதல் இந்த தீர்த்தத்தினை காவல் செய்ய என்னை வைத்து விட்டனர்.ராமர் காரியமாக அனுமார் இங்கு வரும் பொழுது,இதனை அவரிடம் ஒப்படைத்து விட்டு தேவலோகம் வரலாம் என பிரம்மதேவர் என்னிடம் கூறியுள்ளார்.அதன்படி நீங்கள் (அனுமார்) இன்று முதல் இந்த தீர்த்தத்தினை பாதுகாத்து வரவும் என்று சுயம்பிரபை கூறினாள்.
ஆனால்,ராவணன் என்ற அரக்கன் சீதையைக் கவர்ந்து சென்றுள்ளான்.சீதையை தேடி ராமரிடம் ஒப்படைக்கும் வரை நாங்கள் இங்கு தங்க முடியாது.சீதையை ராமரிடம் ஒப்படைத்து விட்டு,ராமர்,லட்சுமணர்,சீதை யுடன் இந்த வழியாக வரும்பொழுது இந்த ஸ்தலத்தினை ஆள்கிறோம் என அனுமார் கூறி சீதையைத் தேட கிளம்பினார்.
பின்னர் சீதையைக்கண்டு,யுத்தம் முடிந்து புஷ்பக விமானத்தில் ராமர்,லெட்சுமணர்.சீதை.ஆஞ்சநேயர் ஆகியோர் கிஷ்கிந்தா பகுதிக்கு வந்த பொழுது, தீர்த்தங்கள் மற்றும் மாளிகைகள் அவர்களது பின்னால் வருவதைக்கண்டு ராமர்,அனுமாரிடம் விபரம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து,அயோத்தியில் ராமருக்கு பட்டாபிஷேகம் முடிந்தவுடன்,கிருஷ்ணாபுரம் வந்து ஸ்ரீ அனுமாரை எந்திரங்கள் எழுதச்செய்து பிரதிஷ்டை செய்தார்.ராம தரிசனம் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என அனுமார் கூறியதால் ஸ்ரீ ராமர்,சீதை,லட்சுமணர் ஸமேதரராக அனுமார் அருகிலேயே கோவில் கொண்டார்.
கோவிலுக்கு செல்லும் வழி : குற்றாலம்-மதுரை மார்க்கத்தில்,கடையநல்லூருக்கு மிக அருகில்,கிருஷ்ணாபுரம் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில்,வயல்களுக்கு நடுவில் பசுமைச்சூழலில் அமைந்துள்ளது இதன் கூடுதல் சிறப்பு.
இக்கோவிலுக்கு செல்ல கிருஷ்ணாபுரத்தில் இருந்து ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.கோவில் அருகே வரை கார்,வேன் செல்லுவதற்கான வசதியும்,நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் பக்தர்கள் நடந்து செல்வதையே விரும்புகின்றனர்.
தினமும் ஏராளமானோர் இங்கு வந்து சென்றாலும், சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.இக்கோவிலின் மிக முக்கிய விழாவான அனுமத்ஜெயந்தி மற்றும் அகண்டராம ஜெபம் ஆகியன ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சனி மற்றும் பிற விழா நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் காலை 12 மணி வரையிலும் பின்பு மாலை 4 முதல் 7 வரையிலும் நடை திறந்திருக்கும். இக்கோவிலின் பல்வேறு ஆன்மீகப்பணிகளிலும் ஆஞ்சநேயதாசர்கள் அரும்பணி புரிந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...