வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பயிற்சி: மக்கு என்று உலகத்தில் யாருமே கிடையாது!

பொதுத் தேர்வுகள் முடிந்து முடிவுகள் வரும் நேரம். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் முகத்தில் பெருமிதம். அடுத்து என்ன படிப்பது? எந்தக் கல்லூரியில் சேர்வது? எந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்புகள் அதிகம்? எ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:27 am

ந. ஜீவா

பொதுத் தேர்வுகள் முடிந்து முடிவுகள் வரும் நேரம். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் முகத்தில் பெருமிதம். அடுத்து என்ன படிப்பது? எந்தக் கல்லூரியில் சேர்வது? எந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்புகள் அதிகம்? என்று அவர்கள் தேடலில் இறங்கிவிடுவார்கள். அவர்களின் உலகம் வேறு.

ஆனால், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள்?

நண்பர்களும், பெற்றோரும் வார்த்தைகளால் கொல்ல, என்ன செய்வது என்று திசைதெரியாமல் நிற்கும்நிலை. தேர்வில் தோல்வியடைந்ததால் வாழ்க்கையே முடிந்துபோனதைப் போல எண்ணம்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை கடந்த 32 ஆண்டுகளாக விதைத்து வருகிறார் சீமான்.

அவர் நடத்தும் டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பவர்கள் எல்லாரும் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இன்று வரை பொய்த்துவிடவில்லை.

தோல்வியடையும் மாணவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்று அவரிடம் கேட்டோம். அவர் நம்மிடம் கூறியதிலிருந்து...

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா டிவிஎஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்தார். எனது பள்ளிக் கல்வி பள்ளியில் போடும் மதிய உணவை நம்பியே இருந்தது. ராயப்பன்பட்டியிலும், உத்தமபாளையத்திலும் பள்ளிக் கல்வியை முடித்தேன். மதுரை நாகமலைப் புதுக்கோட்டை எஸ்விஎன் கல்லூரியில் புகுமுக வகுப்பு. பின்னர் சிவகங்கை ராஜா துரைசிங்கம் மெமோரியல் கல்லூரியில் பி.எஸ்ஸி. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் முதுகலை தமிழும், அரசியல் விஞ்ஞானமும் படித்தேன்.

படித்து முடித்தவுடன் வேலையெதுவும் செய்யாமல் இருக்கப் பிடிக்கவில்லை. "கலைவாணி ட்யூஷன் சென்டர்' என்ற பெயரில் வெறும் 30 ரூபாய் மூலதனத்தில் ட்யூஷன் சென்ட்டரைக் கம்பத்தில் ஆரம்பித்தேன். அப்போது உத்தமபாளையம் பள்ளியில் படித்துப் பெயிலான 13 பேர் மொத்தமாக என் ட்யூஷன் சென்ட்டரில் வந்து சேர்ந்தார்கள். என்னிடம் படித்த அந்த 13 பேரும் பாஸ் செய்துவிட்டார்கள். இதனால் எனது ட்யூஷன் சென்ட்டர் பெயரை அவர்களே சீமான் 100 க்கு 100 டுடோரியல் என்று மாற்றிவைத்துவிட்டார்கள். வெற்றி நிச்சயம். தேறாவிடில் பணம் வாபஸ் என்று அவர்களே விளம்பரம் வேறு செய்துவிட்டார்கள். இதனால் எனது டுடோரியலின் புகழ் பரவ ஆரம்பித்தது.

அதனால் எனது டுடோரியல் உத்தமபாளையம், தேவாரம், சின்னமனூர் ஆகிய இடங்களிலும் தொடங்கப்பட்டது. அப்போது 15 பேர் என்னிடம் வேலை பார்த்தார்கள்.

சென்னையில் எப்போது ஆரம்பித்தீர்கள்?

எனக்கு அப்போது சினிமா ஆசை வந்துவிட்டது. 1985 என்று நினைக்கிறேன். பாரதிராஜா "மண்வாசனை' படம் எடுக்க எங்களூருக்கு வந்திருந்தார். நான் என் சினிமா ஆசையை அவரிடம் சொன்னேன். அவர் என்னைச் சென்னைக்கு வரச் சொன்னார்.

நானும் சென்னைக்கு வந்து பாரதிராஜா வீட்டுக்குப் போனேன். அங்கிருந்தவர்கள் அவரைச் சந்திப்பதற்கு என்னை அனுமதிக்கவில்லை. இருந்தாலும் நான் சென்னைக்கு வருவதை நிறுத்தவில்லை. சினிமாத்துறையில் எனக்கு இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் நண்பரானார். அந்த நட்பினால் இளையராஜா, கங்கை அமரன் போன்றோர் நண்பர்களானார்கள்.

நான் தியாகராய நகர் மேட்லி ரோடில் தங்கியிருந்த இடத்தில்தான் முதன்முதலாக டுடோரியல் ஆரம்பித்தேன். என்னைத் தேடி சென்னைக்கு வரும் நண்பர்களுக்கு வேலை தருவதற்காகவும் இன்னும் பல இடங்களில் கிளைகள் ஆரம்பிக்க வேண்டியதாகிவிட்டது. சென்னையில் புரசைவாக்கம், மயிலாப்பூர், அம்பத்தூர், பாரிமுனை ஆகிய பகுதிகளில் டுடோரியல் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் கல்வியில் அவ்வளவு திறமையானவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்களை வெற்றியடையச் செய்தது எப்படி?

என்னிடம் பயின்ற மாணவர்கள் இதுவரை ஒருவர் கூடப் பெயிலாகவில்லை. பொதுவாக தேர்வில் தோல்வியடைந்து வரும் மாணவர்களை எல்லாரும் மக்கு என்றுதான் நினைக்கிறார்கள். உண்மையில் 100 சதவீதம் மக்கு என்று யாருமே உலகத்தில் கிடையாது.

என்னிடம் படிப்பதற்காக வரும் மாணவரின் திறனை அறிய அவரிடம் "நான் சாப்பிட்டேன்' என்று எழுதச் சொல்வேன். அவர் "நன் சப்பிட்டேன்'"நான் சப்பிட்டேன்' என்றோ தவறாக எழுதினால், அவர்கள் பாஸôகச் சிறிது காலம் ஆகும் என்று தெரிந்து கொள்வேன். சரியாக எழுதிவிட்டால் அவர் உடனே பாஸ் செய்துவிடுவார் என்று தெரிந்து கொள்வேன். அதுபோல ஆங்கிலத்தில் "I am going to school' என்று தவறில்லாமல் எழுதிவிட்டால் அவர் பாஸôகிவிடுவார் என்று சொல்லிவிடுவேன்.

ஒரு மாணவர் பாடங்களை எவ்வளவு நன்றாகப் புரிந்து கொள்கிறார் என்பதைவிட, படித்த பாடங்களைத் தேர்வில் எவ்வளவு நன்றாக எழுதுகிறார் என்பதைப் பொறுத்தே மதிப்பெண்கள் கிடைக்கின்றன. எனவே மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற தவறில்லாமல், விரைவாக எழுதத் தெரிந்து இருக்க வேண்டும். அதனால்தான் அவர்களை எழுதச் சொல்லிப் பார்ப்பேன்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும்போது அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சொல்லித் தர வேண்டும். அதற்கு முதலில் மாணவர்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பேசி அவர்களுடைய கவனத்தைக் கவர வேண்டும். மாணவர்களுக்குச் சினிமாதான் ரொம்பப் பிடிக்கிறது என்றால் அதைப் பற்றி முதலில் பேசி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து அப்புறம் பாடத்தை அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.

தமிழ் மனப்பாட பகுதி பாடல்களை இளையராஜா இசையில் ஒரு மாணவர் மிக எளிதாக மனப்பாடம் செய்துவிடுவார்.

பாடத்தைப் பாடமாகச் சொல்லக் கூடாது. எது மாணவர்களுக்குப் பிடிக்கிறதோ, அதைச் சொல்லி அதோடு சேர்த்து மாணவர்களுக்குப் பாடம் சொல்ல வேண்டும். எனது அனுபவத்தில் இதை நான் பலமுறை சோதித்துப் பார்த்திருக்கிறேன்.

மாணவர்களின் தேர்வுக்கு முந்தைய 9 மணி நேரம் மிகவும் முக்கியமானது. அந்தக் கடைசி நேரத்தில் அவர்கள் எவ்வளவு படிக்கிறார்களோ அதுதான் அவர்களுடைய வெற்றிக்குத் துணை நிற்கும். எனவே ஸ்டடி ஹாலிடேஸ் என்று படிப்பதற்காக லீவு விடக் கூடாது.

ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களை அப்படியே வகுப்பில் வாசிக்கக் கூடாது. பாடப் புத்தகங்களை முதலில் ஆசிரியர் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு தனது மொழியில் அதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். பத்தாம் வகுப்பின் புவியியல், வரலாறு புத்தகம் 260 பக்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெறும் 30 பக்கத்தை மிக நன்றாகப் படித்தாலே ஒரு மாணவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியும். ஆனால் எந்த 30 பக்கத்தைப் படிப்பது என்பது முக்கியமானது.

மாணவர்கள் தேர்வில் தோல்வியடைவதற்கு இன்னொரு காரணம், நமது கல்வியில் பலவிஷயங்கள் அன்றாட வாழ்க்கைக்குப் பயனில்லாமல் இருக்கின்றன. அல்ஜீப்ராவில் நீங்கள் படித்த (a+b)2=a2+b2+2ab என்பது எத்தனை தடவை உங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்பட்டிருக்கிறது? என்ஜினியர் கட்டுவதைவிட அதிகம் படிக்காத கொத்தனார்கள் சிலர் நல்ல வீடுகளைக் கட்டிவிட முடிகிறது. அப்படியானால் கல்வியின் பயன் என்ன? என்று கேள்வி எழுகிறது. இதனாலேயே பல மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கம்ப்யூட்டர் கல்வி வந்தவுடன், படித்தவுடன் வேலை கிடைத்துவிடுகிறது. படித்தது வேலைக்குப் பயன்படுகிறது. எனவே மாணவர்கள் ஆர்வமாகப் படிக்கிறார்கள்.

எனது டுடோரியலில் படிக்க வெளியூரில் இருந்தெல்லாம் மாணவிகள் வந்து தங்கிப் படிக்க ஆரம்பித்தனர். அவர்கள் தங்குவதற்காக சரஸ்வதி பவனம் என்கிற பெயரில் பெண்கள் தங்கும் விடுதிகளை ஆரம்பித்தேன். பின்பு அதுவே இன்று 11 இடங்களில் இருக்கிறது.

டுடோரியல் ஆகட்டும், பெண்கள் விடுதியாகட்டும் நிர்வகிப்பது கடினமானது அல்லவா? எப்படி நிர்வாகம் செய்கிறீர்கள்?

நான் ஓர் இடத்தில் வேலை செய்தால் எனக்கு என்ன சம்பளம் வேண்டும் எதிர்பார்ப்பேனோ அந்தச் சம்பளத்தை என்னிடம் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். அதுபோல திறமையானவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுத்து ஊக்குவிப்பேன். ஆனால் இந்த நிர்வாக விஷயங்களை எல்லாம் என்னைவிட என்னுடைய மனைவி ஜெயந்தி சீமான் நன்றாகக் கவனித்துக் கொள்கிறார். என்னைவிடத் திறமையான நிர்வாகி அவர். அவருடைய உதவி இல்லாவிட்டால் என்னால் பல காரியங்களைச் சாதித்திருக்க முடியாது.

சினிமா ஆசை?

சினிமாத்துறையில் ஆர்வம் எனக்கு அதிகம் என்பதால் நானே படங்களைத் தயாரிப்பது, படங்களை வாங்கி விநியோகிப்பது என்று பலவிதங்களில் செயல்பட்டு வருகிறேன். "புரிந்தும் புரியாமலும்', "அனுபவிராஜா அனுபவி' ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறேன். இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் "எதையும் தாண்டுவேன்' படத்தின் கதை,வசனம், பாடல்கள், இயக்கம், தயாரிப்பு எல்லாம் நான்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.