வடசென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதி. குறுகலான சந்துகள் பலவற்றைக் கடந்து போனோம். "யோகாசன ஆலயம்' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்ததும் நமது கால்கள் தயங்கி நின்றன. உள்ளே நுழைந்தோம். அங்கே 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் சிலர் பூனை போல கத்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் புலி போல உறுமிக் கொண்டிருந்தார்கள். என்னதான் நடக்கிறது என்ற கேள்வியோடு அங்கிருந்த யோகாசன ஆலய மேலாளர் எஸ்.முருகேசபாண்டியனைப் பார்த்தோம்.
""ஒன்றுமில்லை. இது குழந்தைகளுக்கான யோகாசன வகுப்பு. குழந்தைகளிடம் யானை ஆசனம், பூனை ஆசனம், புலி ஆசனம் என்று சொல்லி சில ஆசனங்களைச் சொல்லித் தருகிறோம். அப்போது பூனை மாதிரி கத்து என்று சொல்வோம்'' என்கிறார் சிரிப்புடன்.
""சென்னையில் 1940 ஆம் ஆண்டு ஆரம்பித்ததுதான் இந்த யோகாசன ஆலயம். இதன் நிறுவனர் யோகமகா ரத்னா ஜி.எம்.ஸ்வாமி. இப்போது சென்னையில் புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, ஆவடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 4 இடங்களிலும், தமிழ்நாடு முழுக்க 17 இடங்களிலும் இதற்குக் கிளைகள் உள்ளன'' என்கிறார் தொடர்ந்து.
இது இயந்திரமயமான காலம். மனிதர்கள் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். யோகாசனம் செய்வதற்கு எல்லாம் நேரம் ஏது?
நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை. அதே சமயம் இக்காலத்தில் உடல்நலனிலும் மனநலனிலும் அக்கறையுடைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் பி.இ. படித்த பொறியாளர். இங்கு வருவதற்கு முன்பு மின்வாரியத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். காலை ஏழு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அப்போது கூட அதிகாலையிலேயே எழுந்து யோகாசனங்களைச் செய்து விட்டு அலுவலகம் செல்வேன். என்னைப் போலவே இப்போதும் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் யோகாசனம் கற்றுக் கொள்ள இங்கே வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
யார் யாரெல்லாம் யோகாசனம் கற்றுக் கொள்ள வருகிறார்கள்? எதற்காக வருகிறார்கள்?
ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதற்கொண்டு ஆண், பெண் இருபாலாரும் வருகிறார்கள். பொதுவாக உடல் நலத்தைச் சீர்படுத்துவதற்காகவே வருகிறார்கள். இதயக் கோளாறுகள், ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், மூட்டு வலி, முதுகுவலி உள்ளவர்கள் என உடலில் உள்ள பிரச்னைகளைச் சரி செய்து கொள்ள வருகிறவர்களே அதிகம்.
இதய நோய் உள்ளவர்களால் எல்லா ஆசனங்களையும் செய்ய முடியாதே? அவர்களுக்கு எப்படிச் சொல்லித் தருகிறீர்கள்?
யோகாசனம் தெரிந்த டாக்டர்களுடன் எங்களுக்குத் தொடர்புகள் உள்ளன. ஏதேனும் நோய் இருப்பதாகக் கூறிக் கொண்டு வருகிறவர்களை நாங்கள் டாக்டரிடம் அனுப்பி வைப்போம். டாக்டர் அவர்களைப் பரிசோதித்துவிட்டு இந்த இந்த ஆசனங்களை இவர்கள் செய்யக் கூடாது என்று எங்களிடம் சொல்லிவிடுவார். அதற்கேற்ப நாங்கள் யோகாசனங்களைச் சொல்லித் தருகிறோம். இப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி ஆசனங்களைச் சொல்லிக் கொடுப்பதால்,
பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகளில்லை.
பக்கவிளைவுகள் என்றால்?
நீங்கள் நினைப்பதுபோல ஆபத்தான பக்கவிளைவுகள் எவையும் ஏற்படாது. சிலருக்கு சர்க்கரை, சைனஸ் தொல்லைகள் இருக்கும். அவர்களுக்குச் சில ஆசனங்களைச் செய்தால் தலை சுற்றும். வஜ்ர ஆசனம் செய்யும்போது மூச்சுப் பயிற்சியும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் சிலருக்கு பேதி ஆகிவிடும். அதற்குக் காரணம் அந்த ஆசனம் உடலின் சூட்டை அதிகப்படுத்துவதே. சிலரைப் பார்த்தவுடன் அவர்களுக்குச் சூட்டு உடம்பு இருப்பது தெரிந்துவிடும். அவர்களுடைய தோல் வறண்டிருக்கும். ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு அடிக்கடி பேதியாகும். இவையெல்லாம் சூட்டு உடம்பின் அறிகுறிகள். சிலர் குண்டாக இருப்பார்கள். அவர்களுக்கு வளர்சிதை மாற்றம் குறைவாக இருக்கும். இவர்களுடைய உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். இப்படி உடம்பின் தன்மைக்கேற்ப ஆசனங்களில் எதை முதலில் செய்ய வேண்டும்? எதை இரண்டாவது செய்ய வேண்டும்? என்பதைக் கற்றுக் கொடுக்கிறோம்.
பெண்கள் எதற்காக யோகாசனப் பயிற்சிக்கு வருகிறார்கள்?
அதிக எடை போட்டவுடன் யோகாசனம் செய்து அதைக் குறைக்கலாம் என்று வருகிற பெண்களே அதிகம். ஒழுங்கான காலக்கெடுவுக்குள் மாதவிடாய் வராதவர்கள், குழந்தையில்லாத பெண்கள் போன்றோர் யோகாசனம் கற்றுக் கொள்ள வருகிறார்கள். இங்கே பெண்கள் யோகாசனம் கற்றுக் கொள்ளத் தனியிடமும், கற்றுத் தர பெண் பயிற்சியாளர்களும் இருப்பதால் யோகாசனம் கற்றுக் கொள்ள கூச்சப்படாமல் வருகிறார்கள்.
சிலருக்கு லேசாகக் குனிவதற்கே முடியாது. அவர்கள் எல்லாம் யோகாசனம் செய்வது எப்படி?
இப்போதெல்லாம் 7 வயதுக் குழந்தைகளில் சிலரின் முகுகெலும்பு வளைய மறுக்கிறது. அப்படியிருக்க பெரியவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். யோகாசனம் செய்ய வேண்டும் என்றால் உடம்பு நன்றாக வளைய வேண்டும். எனவே அதற்கேற்ப பயிற்சிகளைத் திட்டமிட்டுத் தருகிறோம். நின்று கொண்டு முதுகை வளைக்க முடியவில்லையா? அவர்களை முதலில் படுத்துக் கொண்டு முதுகை வளைக்கக் சொல்வோம். பின்பு உட்கார்ந்து கொண்டு முதுகை வளைக்கும் பயிற்சிகளைச் செய்வார்கள். இறுதியாக, நின்று கொண்டு முதுகை வளைக்கச் சொல்வோம். இப்படி படிப்படியாகப் பயிற்சிகளைத் தந்து அவர்களைத் தயார்ப்படுத்துகிறோம்.
யோகாசனங்களை எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? காலையில் மட்டும்தான் செய்ய வேண்டுமா?
யோகாசனம் செய்யும் போது வெறும் வயிற்றுடன் இருப்பது நல்லது. எனவே காலை 6 மணி முதல் 8 மணி வரை யோகாசனம் செய்ய உகந்த நேரம். ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெறும் வயிற்றுடன் யோகாசனம் செய்யக் கூடாது. எனவே அவர்கள் ஏதாவது திரவ உண்வுகளைச் சிறிது உட்கொள்ளலாம். காலை நேரங்களில் யோகாசனங்கள் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். மாலை நேரத்தில் வெறும் வயிற்றில் யோகாசனம் செய்யலாம். அப்படிச் செய்தால் இரவில் நன்றாகத் தூங்க முடியாது. ஏனென்றால் மாலையில் செய்த யோகாசனங்கள் உடல் இயக்கத்தைத் தூண்டிவிட்டிருக்கும். அதனால் தூக்கம் வரத் தாமதமாகும்.
யோகாசனங்களை எவ்வளவு நாட்கள் கற்றுக் கொள்ள வேண்டும்?
வாரத்திற்கு ஒருநாள் மட்டும் வந்து கற்றுக் கொள்பவர்கள் 52 வாரங்கள் வந்து கற்றுக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு 4 நாட்கள் வந்து கற்றுக் கொள்பவர்கள் மூன்று மாதங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் குறைந்தது 50 வகுப்புகளாவது வந்திருக்க வேண்டும். சிலர் ஆரம்பத்தில் ரொம்ப ஆர்வமாக இருப்பார்கள். சிறிதுநாட்களில் ஆர்வம் குறைந்து வரமாட்டார்கள். அவர்களுக்கு தொலைபேசி மூலம் பேசி நினைவுபடுத்துவோம். அதையும் மீறி வராதவர்களை என்ன செய்வது?
நாங்கள் யோகாசன வகுப்புகளை மூன்றுவிதமாகப் பிரித்து வைத்திருக்கிறோம். பேஸிக், அட்வான்ஸ், எக்ஸ்பெர்ட் என்ற அந்த மூன்று நிலைகளையும் கற்றுக் கொள்பவர் சுமார் 200 யோகாசனங்களைக் கற்றுக் கொள்ளலாம். சிலர் யோகாசனம் கற்றுக் கொள்வது சிரமம் என்று நினைப்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் நின்று கொண்டிருப்பதே யோகாசனம்தான். ஒரு காலில் நின்று மறுகாலை மடக்கியோ, தூக்கியோ செய்யும் போது அவை யோகாசனங்களாகின்றன.
உங்களுக்கு யோகாசனத்தின் மீது ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
எனக்குச் சொந்த ஊர் விருதுநகர். நான் பள்ளியில் படிக்கும்போது அங்கே ஒருவர் வந்து யோகாசனங்களை மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்தார். அதைப் பார்த்த எனக்கு யோகாசனங்கள் மீது கட்டுக்கடங்காத ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. சர்வாங்க ஆசனம் செய்ய வேண்டும் ரொம்ப ஆசைப்பட்டு அதைக் கற்றுக் கொண்டேன். 1974 இல் சென்னைக்கு வந்த பின்பு, யோகாசன ஆலயத்தில் சேர்ந்து எல்லா ஆசனங்களையும் முறைப்படி கற்றுக் கொண்டேன். யோகாசனங்களை முறையாகவும், பாதியில் விட்டுவிடாமலும் செய்து வந்தால் ஆஸ்த்துமா, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், முதுகு வலி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படாது. அப்படிப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் யோகாசனங்கள் செய்வதால் அவற்றிலிருந்து விடுபட்டுவிடலாம்.