சந்தோஷமாக வாழ்வது மிகவும் கடினமானதாக இருப்பது ஏன் தெரியுமா? அது மற்றவர்களை சந்தோஷப் படுத்துவதின் மூலம்தான் சாத்தியப்படுகிறது'. மற்றவரை சந்தோஷப்படுத்தும் இந்த 94 வயது முதியவரைப் பார்த்தபோது இந்தப் பொன்மொழிதான் ஞாபகம் வந்தது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த 94 வயது ஹோமியோபதி மருத்துவர் ஜோசப். தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தையும் பல்வேறு மதத்தினருக்கு நன்கொடையாக அளித்து உயில் எழுதி வைத்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சி, பல் சிகிச்சையில் பயிற்சி, ஹோமியோபதி மருத்துவத்தில் தேர்ச்சி எனப் பல்வேறு துறைகளில் ஜோசப் தேர்ச்சி பெற்றார். 1947-ல் பொள்ளாச்சியில் பிளேக் நோய் தாக்கிப் பலர் உயிரிழந்தனர். இதற்குச் சிகிச்சையளிக்கப் பயந்து அப்போது அரசு மருத்துவர்கள் சென்றுவிட்டனர். அதனால் இப்பகுதி மக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போதைய புரவிபாளையம் ஜமீன்தாரின் வேண்டுகோளை ஏற்று பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் நோய் தாக்கிய மக்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக டாக்டர் ஜோசப் சென்றார். அன்றிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் அவரின் சேவையைப் பற்றி அவருடைய வார்த்தைகளில்...
""முதல் நாள் ஒரு நோயாளிக்குச் சிகிச்சையளித்து விட்டு மீண்டும் அடுத்த நாள் வடக்கிபாளையம் சென்றேன். நான் சென்ற வீட்டின் அருகே ஓர் இளைஞரின் உடலை எடுத்து வந்தனர். அந்த வீட்டுக்குச் சென்று, "ஏன் நோய் தாக்கிய விவரத்தைச் சொல்லவில்லை?' என்று கேட்டேன். "டாக்டருக்குத் தருவதற்கு ஒரு ரூபாய்கூட இல்லாததால்தான் சொல்லவில்லை' என்றனர். கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் ஒருவரின் உயிர் பிரிந்த வேதனை என்னை மிகவும் தாக்கியது.
இந்தச் சமயத்தில் இறைவனைப் பிரார்த்தித்தபோது கிராமங்களுக்குச் சென்று பணிவிடை செய் என்று கடவுள் உத்தரவிட்டதாகத் தோன்றியது. புரவிபாளையம் சென்று ஜமீன்தாரிடம் இடம் கேட்டேன். அவரும் இடம் தந்தார். கடந்த 1947-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி வடக்கிபாளையத்தில் கிரேஸ் மெடிக்கல் ஹால் என்ற மருத்துவமனை துவக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் என் தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகியோர். பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோர்க்கும் சிகிச்சைக்கு யாரும் பணம் பெற மாட்டார்கள். அதுபோல உங்களிடமும் பணம் பெற மாட்டேன். வசதி படைத்தவர்கள் நன்கொடை தாருங்கள்' என்று கூறி மருத்துவமனையைத் தொடங்கினேன்'' என்றார் ஜோசப்.
இந்தச் சமயத்தில் சேவை செய்ய விருப்பமுள்ள மணமகளைத் தேடினார் ஜோசப். ஆனால் மத்திய அரசு உத்தியோகத்தில் இருந்த பெண்ணுக்குச் சேவை செய்ய விருப்பமில்லை. ஆனால் 6 மாதம் கழித்து அதே பெண் இவரைத் திருமணம் செய்து கொண்டு சேவை செய்யச் சம்மதித்தார் குஞ்சம்மாள் ஜோசப். திருமணத்துக்குப் பின் ஹோமியோபதியில் குஞ்சம்மாளும் பட்டம் பெற்றார்.
குழந்தைகள் படிப்புக்காக இருவரும் பொள்ளாச்சிக்குக் குடிவந்தனர். வடக்கிபாளையம் மற்றும் பொள்ளாச்சி என இரு இடங்களிலும் கணவன், மனைவி இருவரும் கிளினிக் நடத்தினர். கடந்த 1959-ல் பொள்ளாச்சி ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் துவங்கியதில் இருந்து இன்றுவரை டி.டி.ஜோசப்தான் தலைவர்.
""கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது ரூ.5 லட்சம் செலவாகும். ரூ.3 லட்சம் தந்தால் போதும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இறைவன் அருளால் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அதனால் ரூ.3 லட்சத்தை ஏழைகளுக்கு வழங்க நினைத்தேன். இந்தத் தொகையில் ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு வீடு, கிறிஸ்தவ சகோதரிக்குத் திருமணம், இந்து சகோதரர் படிப்புக்கு உதவி என ரூ.3 லட்சத்தை வழங்கினேன்.
பொள்ளாச்சியில் ஹோமியோபதி மருத்துவ சங்கத்துக்கெனத் தனிக் கட்டடத்தை அரிமா சங்க உதவியுடன் கட்டினேன். மருத்துவ முகாம்கள் நடத்த நிரந்தர வைப்புத் தொகையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்துள்ளேன். இது தவிர, பொள்ளாச்சி அருகே நல்லூரில் ஏழை மாணவர்கள் 15 பேருக்காக ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வருகிறேன். என் காலத்திற்குப் பிறகு நலக் காரியங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என எண்ணினேன். இதற்காக வேண்டி உயில் ஒன்றையும் எழுதியுள்ளேன். என் மகன் ராஜன் ஜோசப்பை அழைத்து உனக்கு என்ன சொத்து வேண்டும் என்று கேட்டேன். "வீடு ஒன்று மட்டும் தனக்குப் போதும்' என்றான் என் மகன். பிற சொத்துகள் அனைத்தையும் பொள்ளாச்சியில் உள்ள 2 கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கும், ஆதரவற்றோர் இல்லத்துக்கும் எழுதி வைத்துள்ளேன்.
இப்போதும் தினமும் கிளினிக்குக்கு வரும் நோயாளிகளிடம் ஆலோசனைக் கட்டணம் எதுவும் பெறுவதில்லை. மாதம் ஒருமுறை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமை நடத்தி வருகின்றேன். மாதத்துக்கு சுமார் 300 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை பெறுவோருக்கு ஆலோசனை, மருந்து என அனைத்தும் இலவசம்'' என்றார், இந்த வயதிலும் உழைத்து அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் டாக்டர் ஜோசப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


