கலை: வாலை இழுத்தால் தும்பிக்கை உயரும்
மாலை நேர வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் கூட்டம் குறைவாக இருந்த அந்தத் திருமணக் கூடத்தில் தூக்கம் வராமல் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். பெரியவர்கள் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அடங


மாலை நேர வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் கூட்டம் குறைவாக இருந்த அந்தத் திருமணக் கூடத்தில் தூக்கம் வராமல் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். பெரியவர்கள் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அடங்காத அந்தச் சிறுவர்களை தன்னருகே அழைத்தார் ஒரு முதியவர். அந்தச் சிறுவர்களும் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டு அவர் செய்வதை தங்களை மறந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெரியவரின் பெயர் - லஷ்மி நாராயணன்.
ஒரு கறுப்பு வண்ணக் காகிதத்தின் ஓரமாகக் கொஞ்சம் கிழிக்கிறார். காகிதத்தின் இறுதியில் விசிறி போல் கொஞ்சம் மடிக்கிறார். காகிதத்தின் தலைப் பகுதியில் முக்கோண வடிவில் கொஞ்சம் போல் மடிக்கிறார். என்ன ஆச்சரியம்? அவரின் கைகளில் இப்போது ஒரு காகம் இருந்தது! அதை அப்படியே ஒரு குட்டிப் பெண்ணின் கைகளில் கொடுத்தார் லஷ்மி நாராயணன். "ஹை....' எனக் கண்களை அகல விரித்தபடி அந்தக் காகிதக் காக்கையை கையில் வாங்கி சந்தோஷப்பட்டாள். இப்படி வாலை ஆட்டும் நாய், வால் பகுதியை இலேசாக இழுத்தால் தும்பிக்கையை உயர்த்தும் யானை, பிள்ளையாரும் மூஞ்சூரும், தேள், ஹெலிகாப்டர்... என ஒவ்வொன்றாகச் செய்து கொடுத்துக் கொண்டேயிருக்க, அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர் அந்தச் சிறுவர்கள்.
லஷ்மி நாராயணன் திருமணத்துக்குச் சென்றாலும் சரி, கோயிலுக்குச் சென்றாலும் சரி, ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தாலும் சரி அவரின் இந்தத் திறமைக்கு கட்டுப்பட்டு அவரைச் சுற்றி குழந்தைகள் கூட்டம் நிச்சயம் இருக்கும். அவரின் இந்தத் திறமைக்கு "ஓரிகாமி' என்று பெயர். இந்தக் கலையை பரப்புவதில் ஈடுபட்டு வரும் லஷ்மி நாராயணன் நம்மிடம் பேசியதிலிருந்து...
""கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிறு வயது முதலே காகிதங்களைப் பயன்படுத்தி சில உருவங்களைச் செய்து வந்தேன். இடையில் அந்தப் பழக்கம் விட்டுப் போனது. பணியிலிருந்து ஓய்வு கிடைத்த பிறகுதான் மீண்டும் காகிதத்தில் உருவங்களைச் செய்வதில் ஆர்வம் திரும்பியிருக்கின்றது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஜப்பான் தூதரகத்தின் சார்பாக கலாட்சேத்ராவில் ஓரிகாமி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கண்காட்சியில் நான் காகிதங்களைப் பயன்படுத்தி செய்த பல உருவங்களைக் காட்சிப்படுத்த அனுமதி கேட்டேன். கண்காட்சி முடிவதற்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது எனக்கு அனுமதி கிடைத்தது. அந்தக் கண்காட்சியில் நான் வைத்திருந்த காகிதத்தால் செய்த உருவங்களைப் பார்த்த, ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் படிக்கும் மாணவர்கள் அவர்களின் கல்லூரியில் என்னை ஒரு பயிற்சிப் பட்டறைக்கு அழைத்தனர்.
நாகேஸ்வர ராவ் பூங்காவிலும் குழந்தைகளுக்கு சில காலம் ஓரிகாமி பயிற்சி அளித்திருக்கிறேன். அக்ஷயா என்னும் மழலையர் பள்ளியிலும் நான் சில காலம் இந்தப் பயிற்சியை அளித்திருக்கிறேன். ஜப்பானில் இதை ஆரம்பத்தில் கிரிகாமி என்று அழைத்தனர். இதற்கு வீட்டில் நடக்கும் எந்த நல்ல விசேஷமாக இருந்தாலும் காகிதத்தை மடித்து அதைக் கொண்டே வீடெங்கும் அலங்காரம் செய்யும் கலை என்று அர்த்தம். இந்த வகை அலங்காரங்களைக் கொலு போன்ற விசேஷங்களுக்கும், வீட்டில் நடக்கும் திருமண விசேஷங்களுக்கும் செய்யலாம்.
பொதுவாக இந்தக் கலையை எட்டிலிருந்து ஒன்பது வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது எளிது; அவர்கள் கற்றுக் கொள்வதும் எளிது. அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு காகிதங்களை மடிப்பது, பிடிப்பது போன்ற விஷயங்களில் கை வாகாக ஒத்துழைக்கும். இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்கு அதிகம் காசு தேவைப்படாது. ஆனால் பொறுமையாகக் கற்றுக் கொள்ளவேண்டும். அந்தப் பொறுமை இந்தக் கால குழந்தைகளுக்குக் குறைவாக இருப்பதைப் பார்க்கின்றேன்.
என்னை அணுகும் பள்ளிகளுக்கும் குழுவாகக் குழந்தைகளுக்கு சொல்லித் தர நினைக்கும் தனியார் அமைப்புகளுக்கும் இந்தக் கலை குறித்த பயிற்சிப் பட்டறையை மிகக் குறைந்த செலவில் சொல்லித் தருவதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தக் கலைக்கான வண்ணக் காகிதங்களை லேண்ட்மார்க்கில் வாங்குகிறேன். ஓரிகாமி கலைக்குப் பிரத்யேகமாகப் பயன்படும் இந்தக் காகிதங்கள், ஆரோவில்லில் இயந்திர உதவியில்லாமல் கைகளால் தயாரிக்கப்படுபவை என்பது முக்கியமான விஷயம். இந்தக் காகிதங்கள்தான் பல மடிப்புகளை கொண்டுவருவதற்கு உகந்ததாக இருக்கும். இப்படிப்பட்ட காகிதங்கள் 40 ஷீட்கள் 140 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. குழந்தைகளின் கைத்திறனையும் மூளைத் திறனையும் ஒருங்கே அதிகரிக்கச் செய்யும் ஓரிகாமி கலையை ஆதரிக்கும் சமுதாயமாக நம்முடைய சமுதாயத்தை மாற்றவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன்'' என்றார் லஷ்மி நாராயணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...