பயிற்சி: பாமரரும் படம் எடுக்க முடியும்!
சினிமா எடுக்க ஆசைப்படாதவர் யார்? ஆனால் எல்லாராலும் சினிமா எடுக்க முடியாது. சினிமா எடுக்க லட்சக்கணக்கில் அல்ல; கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. சினிமா எடுக்கும் ஆசையை மனதின் மூலையில் மறைத்து வைத்துக


சினிமா எடுக்க ஆசைப்படாதவர் யார்? ஆனால் எல்லாராலும் சினிமா எடுக்க முடியாது. சினிமா எடுக்க லட்சக்கணக்கில் அல்ல; கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. சினிமா எடுக்கும் ஆசையை மனதின் மூலையில் மறைத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வடிகாலாக குறும்படங்கள் எடுக்கக் கற்றுக் கொடுக்கிறார் "நிழல்' திருநாவுக்கரசு. இதுவரை தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் 2 ஆயிரத்து 500 பேருக்கு மேல் அவரிடம் பயிற்சி பெற்று குறும்படம் எடுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ""பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள்தாம் காட்சி ஊடகத்திற்குள் புக முடியும் என்ற நிலை மாறி பாமரரும், விவசாயிகளும் கூட குறும்படம் எடுக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது'' என்கிறார் அவர். "நிழல்' என்ற காட்சி ஊடகத்திற்கான இதழைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வரும் அவரை சென்னை ராணி அண்ணாநகரில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம்.
""1980 இலிருந்து குறும்பட, ஆவணப்பட விழாக்கள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவற்றைப் பார்க்கும் வழக்கம் எனக்கிருந்தது. அப்போதெல்லாம் தமிழில் குறும்படங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. பிற மொழி பேசுபவர்கள் இதற்காக என்னிடம் கிண்டலாகப் பேசியதும் உண்டு. ஆனால் இந்த நிலை படிப்படியாக மாறியது. 2000- இல் நாற்பது குறும்படங்களைத் தொகுத்து லண்டனில் உள்ள தமிழர் யமுனா ராஜேந்திரனுக்கு அனுப்பி வைத்தேன். அவர் அங்குள்ள தமிழர்களுக்குப் போட்டுக் காண்பித்தார். இது அங்கே பரவலான வரவேற்பைப் பெற்றது.
அதற்குப் பின்பு "பாரிஸ் நண்பர்கள் வட்டம்' என்ற அமைப்பு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்தக் குறும்படங்களைத் திரையிட்டுக் காட்டியது. அவர்கள் இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை முக்கியமான குறும்படங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பரிசாகக் கொடுத்தோம்.
அதற்குப் பின்பு ஆவணப் பட வரலாறு எழுதலாம் என்று அதற்கான நூல்களைத் தேடினால் கிடைக்கவேயில்லை. கொல்கத்தா நூலகத்தில் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் ஓர் ஆங்கிலப் புத்தகத்தைச் சொன்னார்கள். அதுவும் கூட அவ்வளவு சிறப்பாக இல்லை. பின்பு கடுமையான முயற்சிக்குப் பின்பு "சொல்லப்படாத சினிமா' என்ற நூலைக் கொண்டு வந்தோம். குறும்படம், ஆவணப் படங்களைப் பற்றித் தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தக்க புத்தகமாக அது இன்று வரைக்கும் உள்ளது.
அப்போது திருப்பூர் பாரதிவாசன் குறும்படம் எடுப்பவர்களுக்காகப் பயிற்சிப் பட்டறை நடத்தினால் என்ன என்று கேட்டார். முதன்முதலில் அவிநாசி அருகே உள்ளே காசிப்பாளையத்தில் 2004-ஆம் ஆண்டு குறும்படப் பயிற்சிப் பட்டறை நடத்தினோம். பின்பு கோவையில் 3 நாள் பயிற்சிப் பட்டறை நடத்தினோம். இதுவரை 20 மாவட்டங்களில் சுமார் 2500 பேருக்கும் மேல் பயிற்சி அளித்திருக்கிறோம்.
சினிமாவைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இயக்குநர் பாலு மகேந்திரா கடந்த 25 வருடங்களாகச் சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. சினிமாவைக் கற்றுக் கொடுக்கும் அரசுக் கல்லூரியில் வெறும் 60 பேருக்கே ஒவ்வொரு வருடமும் கற்றுத் தருகிறார்கள். இதனால் காட்சி ஊடகத்தைக் கற்றுத் தரும் தனியார் கல்லூரிகள் தமிழ்நாடு முழுக்கப் பெருகிவிட்டன. விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மீடியா என்று பல பெயர்களில் இந்தக் கல்வி அளிக்கப்படுகிறது. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பயின்று வெளிவருகிறார்கள். காட்சி ஊடகத்தைக் கற்க வேண்டும் என்ற ஏக்கம் இருப்பதையே இது பிரதிபலிக்கிறது.
ஆனால் சில தனியார் கல்லூரிகளில் காட்சி ஊடகம் கற்பதற்காக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் இந்தப் படிப்புகளை வசதியுள்ளவர்களால் மட்டுமே கற்க முடிகிறது.
நகர்ப்புறங்களிலும், கிராமப்பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இந்தக் காட்சி ஊடகக் கல்வி எட்டாக் கனியாகவே இருக்கிறது. சாதாரண, பாமர மனிதர்களிடம் கூட கலை உள்ளமும், படைப்பாற்றலும் இருக்கிறது. அவற்றை அவர்கள் வெளிப்படுத்த பயிற்சியும், வாய்ப்பும் இல்லாமல் முடங்கிப் போய் விடுகிறார்கள். எனவே பாமர மக்களுக்கும் இந்தக் காட்சி ஊடக் கல்வி சென்றடைய வேண்டும் என்று விரும்பினோம். அதனால்தான் மக்கள் வாழக் கூடிய சிறு நகரங்கள், கிராமப் பகுதிகளுக்கு நாங்களே போய் குறும்படப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறோம்.
சாதாரண மக்கள் மட்டும் எங்கள் பயிற்சிப் பட்டறைக்கு வருவதில்லை. மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் எனப் பணிபுரிபவர்களும் கூட வருகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தின் அடியாழத்தில் பொங்கித் தளும்பும் படைப்பாற்றலை வெளிப்படுத்த எங்களிடம் அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.
எங்களுடைய பயிற்சிப் பட்டறை ஒரு வாரம் நடைபெறுகிறது. முதல் நாளில் இருந்தே காட்சி ஊடகம் பற்றிய தியரியும், நடைமுறைப் பயிற்சியும் சேர்ந்தே தருகின்றோம். ஒவ்வொரு நாளும் உலகப் புகழ் பெற்ற குறும்படங்கள், ஆவணப் படங்கள், திரைப்படங்களை மாணவர்களுக்குப் போட்டுக் காண்பித்து நல்ல குறும்படம் எது, நல்ல ஆவணப்படம் எது, நல்ல திரைப்படம் எது என்று அடையாளம் காட்டுகிறோம். லைட்டிங், கேமரா கோணம், எடிட்டிங், உட்பட பல பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம். பயிற்சியின் கடைசிநாளில் அவர்களுடைய கையில் கேமராவைக் கொடுத்து படம் எடுக்கச் சொல்கிறோம். அப்படி எடுத்தப் படங்களை எடிட் பண்ணி குறுந்தகடாக அவர்களுடைய கையிலேயே கொடுத்துவிடுகிறோம். அதாவது எதுவும் தெரியாமல் வரும் ஒருவர் குறும்படம் எடுக்கக் கற்றுக் கொண்டுவிடுகிறார். ஏனென்றால் எங்களுடைய பாடத்திட்டம் மிக எளிமையானது. நடைமுறை சார்ந்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இதே போன்ற பாடத்திட்டத்தை வைத்துத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இந்தப் பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் மிகத் திறமையானவர்களாக உருவாகிறார்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால் குறும்படம், ஆவணப்படம், திரைப்படம் பற்றிய நல்ல அறிமுகத்தை எங்களுடைய பயிற்சிப் பட்டறை அவர்களுக்குத் தருகிறது என்று உறுதியாகச் சொல்வேன்.
இப்போது தொலைக்காட்சி, திரைப்படம், குறும்படம், ஆவணப்படம், விளம்பரப்படங்கள், பண்பலை வானொலி என ஊடகங்களின் வளர்ச்சி அதிகம். எங்களிடம் குறும்படப் பயிற்சி பெற்றவர்கள் கேமரா மேனாகவோ, எடிட்டராகவோ, நடிகர்களாகவோ, விளம்பரப் படம் எடுப்பவர்களாகவோ ஆகிவிடுகிறார்கள். இது நல்ல வேலை வாய்ப்பு தரும் ஒரு துறையாக உள்ளது.
இது தவிர உலகில் ஒரு மாதத்தில் சுமார் 150 குறும்படப் போட்டிகள் நடைபெறுகின்றன. இணையதளத்தைப் பார்த்தீர்கள் என்றால் இது தொடர்பான தகவல்கள் வெள்ளம் போல் கொட்டுகின்றன. குறும்படம் எடுப்பவர்கள் இந்தப் போட்டிகளுக்கு அனுப்பி வைத்தால் லட்சக்கணக்கில் விருது பெறும் வாய்ப்பு உள்ளது. குறும்பட குறுந்தகடுகள் இப்போது புத்தகக் கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கின்றன.
குறும்படப் பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றவர்கள் எடுக்கும் குறும்படங்கள் வழக்கமான திரைப்படத்திலிருந்து பெரிய அளவில் மாறுபடுகின்றன. காட்சிகளை எடுக்கும் முறையில் உண்மை வாழ்க்கையை மிகவும் நெருங்கி உள்ளன குறும்படங்கள். மக்களின் பிரச்சினைகள், உணர்வுகள், அவர்கள் படுகிறபாடுகள் எல்லாம் குறும்படங்களில் பதிவாகிவிடுகின்றன. கனவு உலகத்தையோ, மாய உலகத்தையோ குறும்படங்கள் சித்திரிப்பதில்லை. எனவே இது மக்களுக்கான கலையாக உள்ளது. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கலையாக உள்ளது. இதுவரை காட்சி ஊடகங்களில் பேசப்படாத பல விஷயங்கள் குறும்படங்களில் இப்போது பேசப்படுகின்றன.
குறும்படம் எடுக்க அதிகம் செலவு ஆவதில்லை. குறைந்தது 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் போதும். கோடிக்கணக்கில் கொட்டி எடுக்கும் திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது வெறும் தூசு. ஆனால் குறும்படங்கள் காட்டும் உலகமும், பேசும் மொழியும் மிகுந்த ஆற்றலுள்ளவை.
குறும்படம், திரைப்படம், ஆவணப்படம் தொடர்பான 10 புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறோம்.
என்னுடைய இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக பாலுமணிவண்ணன், சி.ஜே.ராஜ்குமார், ஈரோடு லிங்காஷ் செழியன், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பி சோழன், சுரேஷ்வரன், எடிட்டர் செந்தில் உட்பட பலர் இருந்து வருகிறார்கள் '' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...