சிறுகதை: கொலுசு

செண்பகத்தை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் சென்று மனநல மருத்துவரைப் பார்த்துவிட்டுத் திரும்பினான் கேசவன். மினி பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தார்கள். ஊமை வெயிலாய் காய்ந்து வியர்த்து உடம்பெல்லாம் கசகசத்தது. அவனுக
சிறுகதை: கொலுசு

செண்பகத்தை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் சென்று மனநல மருத்துவரைப் பார்த்துவிட்டுத் திரும்பினான் கேசவன்.

மினி பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தார்கள். ஊமை வெயிலாய் காய்ந்து வியர்த்து உடம்பெல்லாம் கசகசத்தது. அவனுக்குத் தாகம் எடுத்தது. சில்லுன்னு ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்தது. செண்பகத்திற்கு ரோஸ்மில்க் என்றால் கொள்ளை பிரியம்.

""ஏ...புள்ள... தண்ணி தாவமா இருக்குல்ல. ரோஸ்மில்க் குடிக்கிறியா?'' கேட்டான்.

அவனைத் திரும்பிக்கூட பார்க்காமல் ""வேணாம் போ. எல்லாத்தையும் நீயே குடி''

என்று சொல்லிவிட்டு சிறுபிள்ளைகள் கோபித்துக்கொண்டு போவது போல், அவனைவிட்டு முன்னே நடந்தாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. தனக்கும் எதுவும் வேண்டாமென அவளைத் தொடர்ந்தான்.

""என்ன கேசவா, டாக்டர் என்ன சொன்னாங்க? சரியாக்கிடலாம்னாங்களா?'' எதிர்ப்பட்ட உரக்கடை முதலாளி கேட்டார்.

""ஆமாம் அண்ணாச்சி. இன்னும் ரெண்டு நட வாங்க. கவுன்சிலிங் முறைல பேசி குணப்படுத்திடலாம்னாங்க'' என்றான்.

""ஆமாம் கேசவா... இது சின்ன அதிர்ச்சிதான். இதை குணப்படுத்திடலாம். கவலைப்படாத. சின்னபுள்ள மாதிரி துள்ளி திரிஞ்சிக்கிட்டிருந்தது. இப்ப எப்படி ஆயிருச்சி பாரு. அது ஆசை ஆசையா வளர்த்த பசுமாடே அதுக்கு எமனா வந்துருச்சி போல...'' வருத்தப்பட்டபடி சென்றார்.

இவர்கள் நின்று பேசுவதைக் கவனிக்காமல் அவள் முன்னே சென்றாள். எதிரே ஒரு பசு வேகமாக வர, அதனிடம் "ஏய்...லெட்சுமி... நீயா? நாந்தான் ஒன்னை கொன்னுட்டேனே. எப்படி வந்தே?'' என்று பேசிக்கொண்டே அதனிடம் செல்ல, அது நின்று அவளை முறைத்தது. சிறுவர்களைக் கண்டால் அது ஓடஓட விரட்டும். கொம்பைக் காட்டி மிரட்டும்.

சற்று பின்னால் வந்து கொண்டிருந்த கேசவன் இதைப் பார்த்து விட்டான். "அய்யோ.. அதனெதிரே போய் நிற்கிறாளே' என்று பதறி கீழே கிடந்த கல்லை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தான். அவன் வருவதைப் பார்த்து அது வேறு பக்கம் ஓடியது. செண்பகத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.

""என்னப்பா சொன்னாங்க?'' அவன் அம்மா அஞ்சம்மாள் கேட்டாள். டாக்டர் சொன்னதைச் சொன்னான்.

""எப்படி இருந்த புள்ள. யாரு கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ திருஷ்டி பட்டதுமாதிரி போயிருச்சே. லெட்சுமி லெட்சுமின்னு அந்த மாடே கதின்னு கிடப்பா. இப்ப அதால வந்ததுதான் எல்லாம். என்னமோ எல்லாத்துக்கும் நம்ம மாரியம்மாதான் தொண'' புலம்பினாள்.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, உள்ளே செண்பகம் ஆணியில் மாட்டியிருந்த சங்குமணியை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள். அது பசுமாட்டின் கழுத்தில் கட்டியிருந்தது.

"ஏய் செண்பகம் இத கழுத்துல போடக்கூடாதுன்னு எத்தினிவாட்டி சொல்றது..?'' அதட்டினான் கேசவன்.

""நீ வாங்கிக் குடுத்த கொலுசுதானே இது. மாட்டிக்கிட்டா என்னவாம்?''

""இது கொலுசும் இல்ல ஒரு மண்ணுமில்ல. அப்படியே இது கொலுசா இருந்தாலும் கழுத்துலயா போட்டுக்கிறது? கால்ல போட்டுக்கணும்'' என்றவாறு அவளிடமிருந்து அதைப் பிடுங்கி ஆணியில் மாட்டினான்.

""வரவர நீயும் அத்தையும் என்னெ திட்றீங்க. என்னோட லெட்சுமி மட்டும் இந்நேரம் இருந்தா ஒங்க ரெண்டு பேரையும் கொம்பாலயே முட்டியிருக்கும் தெரியுமா..?'' என்றபடி கண் கசக்கி அழுதாள்.

அவளை ஆதரவாய்ப் பற்றி படுக்க வைத்து தலை கோதி விட்டான். அவள், அவன் மடியில் சிறுபிள்ளையாய் முகம் புதைத்துக் கேவினாள்.

பக்கத்து கிராமத்தில்தான் செண்பகம் பிறந்து வளர்ந்ததெல்லாம். செண்பகம் பிறந்த போதே அஞ்சம்மாள் சொல்லிவிட்டாள். "அண்ணே.. இவதான் என்னோட மருமவ. என் பையன் கேசவனுக்குத்தான் குடுக்கணும். இப்பவே சொல்லிட்டேன். ஆமாம்...'' என்று அப்போதே அச்சாரமாய் குழந்தையின் கழுத்தில் தங்கச்சங்கிலி போட்டாள்.

செண்பகம் வளர்ந்து ஆளாகி கல்யாணத்திற்குத் தயாரானபோது, வெற்றிலை பாக்கு பூ பழத்தோடு சென்று பெண் கேட்டு பரிசம் போட்டாள். நடேசன் தன் சக்திக்குத் தகுந்தாற்போல் கல்யாணம் செய்து சீர் செய்து அனுப்பி வைத்தார்.

செண்பகம், மாமன் கட்டிய மஞ்சள் கயிற்றோடு புகுந்தவீடு வரும்போது பண்டம், பாத்திரம் கட்டில் மெத்தையோடு மட்டும் வரவில்லை. லட்சுமியையும் கூடவே கூட்டி வந்தாள். லட்சமி- அவள் அன்பையும் பாசத்தையும் கொட்டி ஆசை ஆசையாக வளர்த்த பசு.

ஒரு சமயம், பக்கத்து வீட்டுக்காரருக்கு மாடு வாங்குவதற்காக சந்தைக்குப் போனபோது அங்கே இந்தக் கன்றைப் பார்த்தார் நடேசன். மூன்று வயசு கன்றுக் குட்டியாய் வெள்ளை வெளேர் என்று லட்சணமாய் நின்றிருந்தது. அது நின்ற தோரணையும் முதுகுச் சுழியும் நெற்றிப் பரப்பும் அவரை ஈர்த்தது. அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென நினைத்தார். கூட வந்தவரிடம் பணம் கேட்டு, அந்தக் கன்றை வாங்கி வந்தார்.

வீட்டுக்கு வந்ததும் செண்பகம் அதைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொஞ்சினாள். லட்சுமி என்று பெயரிட்டாள். அப்போது முதல் அவளுக்குத் தோழியாய் அது அவளையே சுற்றிச் சுற்றி வந்தது.

ஒரு மணி வாங்கி அதைக் கறுப்புக் கயிற்றில் மாட்டி அதன் இரு பக்கங்களிலும் வெண் சங்கை கோர்த்து அதன் கழுத்தில் கட்டிவிட்டாள். கிணிகிணியென்று ஒலியெழுப்பிக் கொண்டு அது அசைந்து வரும் அழகைக் கண்டு பூரித்துப் போவாள் செண்பகம். லட்சுமி என்று குரல் கேட்டால் போதும் அது எங்கேயிருந்தாலும் ஓடி வந்து அவள் முன் நிற்கும்.

உற்றத் தோழியாய் அவளுடன் கூடவே அதுவும் வளர்ந்தது. கன்று ஈன்றது. செண்பகம் வளர்ந்து ஆளாகி மாமனுக்கு வாக்கப்பட்டதும், லட்சுமியைப் பிரிய வேண்டும் என்ற துக்கம் எழுந்தது அவளுக்குள். அதைப் புரிந்து கொண்ட நடேசன், "நீ ஆசையாய் வளர்த்த பசு, அத்தை வீட்டுக்குப் போறப்ப கூடவே கூட்டிட்டுப் போ தாயி..'' என்று அவளுடன் அனுப்பி வைத்தார்.

அந்த லட்சுமிதான் இன்று உயிரோடு இல்லை.

இங்கு வந்த பிறகு ஒரு தடவை கன்று ஈன்றது. பசுவும் கன்றும் நன்றாகத்தான் இருந்தது. போன சித்திரை மாதத்தில் ஊரெல்லாம் கோமாரி நோய் தாக்கியது. லட்சுமியும் செத்துப் பிழைத்தது. அப்போதிலிருந்தே அது தன் சுயத்தையும் பலத்தையும் இழந்துவிட்டது. அடிக்கடி படுத்துக் கொண்டது.

மனிதருக்குப் புதிது புதிதாய் நோய் வருவதுபோல் அதுக்கு என்ன வந்ததோ, சரியாக தீனி தின்னாமல் தண்ணீர் குடிக்காமல் கிடந்தது. நாளுக்கு நாள் இளைத்து எலும்பும் தோலுமாய் உருமாறியது.

இப்போது உள்ளூரில் மாட்டாஸ்பத்திரி கிடையாது. ஒரு வருடத்திற்கு முன் மந்திரி வந்து திறந்து வைத்தார். டாக்டர் டவுனிலிருந்து பைக்கில் வருவார். அவர் கூடவே அவருடைய உதவியாளரும் வருவார். ஒன்பது மணிக்கு வந்து பனிரெண்டு மணிக்குப் போய்விடுவார்கள். கிராம மக்களுக்கு செüகரியமாகத்தான் இருந்தது. எல்லாம் ஏழெட்டு மாதங்கள்தான். வரவர மாமியார் கழுதை போலானார் என்பது போல், அந்தக் கழுதையும் தேய்ந்து கட்டெறும்பானது போல் டாக்டர் வருவது நின்று போனது. உதவியாளர் மட்டும் வந்து கொண்டிருந்தார். பிறகு அவரும் நின்றுவிடவே, ஆஸ்பத்திரி அனாதையானது. இப்போது அந்த இடம் புதர் மண்டிக் காடாய்க்கிடக்கிறது.

கால்நடைகளுக்கு ஏதாவதொன்று என்றால் மூன்று மைல் தூரத்திலிருக்கும் டவுனுக்குப் போகவேண்டும். அப்படி போக முடியாதவர்கள் உள்ளூர் வைத்தியரிடம்தான் காட்ட வேண்டும். சதாசிவம் கைராசியான அந்தக் காலத்து வைத்தியர்தான். இருப்பினும் இந்தக் காலத்தில் புற்றீசல்போல் புதிது புதிதாகப் புறப்படும் நோய்களுக்கு எதைக்கண்டு வைத்தியம் பார்ப்பார்.

வைத்தியரை அழைத்து வந்து காட்டினாள் செண்பகம். மாட்டைப் பார்த்தார். கண்ணைப் பார்த்தார். நாக்கைப் பார்த்தார். மூலிகைச்சாறும் ஏதோ சூரணம் என்று கோலி சைஸில் நான்கு உருண்டைகளையும் கொடுத்துச் சென்றார். ஒன்றும் பலனில்லை.

தொழுவத்தில் கட்டிக்கிடக்கும் லட்சுமியைப் பார்த்துப் பார்த்து அழவே ஆரம்பித்து விட்டாள் செண்பகம். சரியாக சாப்பிடுவதுமில்லை. அவள் நிலைமையைப் பார்த்து கேசவனுக்கே என்னவோ போலிருந்தது. அந்தப் பசுமீது அவள் எப்படி பாசம் வைத்திருந்தாள். பழகி வந்தாள் என்பதை திருமணத்திற்கு முன்னமேயே பார்த்தவன் தான் அவன். அவளுடைய வருத்தமும் துக்கமும் நியாயமானதுதான் என்பதை உணர்ந்தான்.

மறுநாளே ஒரு பார வண்டியில் மாட்டை ஏற்றி டவுனுக்கு ஓட்டிச் சென்றான். டாக்டர் சோதித்துப் பார்த்தார். உதடு பிதுக்கினார்.

"மக்காத குப்பைன்னு சொல்லுவாங்களே பிளாஸ்டிக், பாலிதின் பை, இது மாதிரியான பொருளையெல்லாம் சாப்பிட்டிருக்கு. அதெல்லாம் செரிக்காம வயித்துலேயே கிடந்து புண்ணாகியிருக்கு. மாடும் நம்மள மாதிரிதானே. என்ன.. அதுக்கு வயிறு பெரிசு.. அவ்வளவுதான். மனுஷனுக்கு கேன்ஸர் வர்ற மாதிரி இதுக்கு இப்படியொரு நோய். இன்னும் ஒரு வாரம் இருந்தாலே அதிகம்' என்று சொல்லி ஒரு ஊசி போட்டு சில மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

டாக்டர் சொன்னதை அப்படியே சொன்னால் செண்பகம் தாங்க மாட்டாள் என்பதை உணர்ந்து, ""மருந்து மாத்திரை குடுத்திருக்கார் செண்பகம். நாலு நாள் கழிச்சி ஒரு நட வரச் சொல்லியிருக்கிறார். குணப்படுத்திடலாம்னார்'' என்று அப்போதைக்கு சொல்லி வைத்தான் கேசவன்.

மறுநாள் மத்தியானம் கேசவனைப் பார்க்க அவன் கூட்டாளி பழனிச்சாமி வீட்டுக்கு வந்தான். வெயில் நேரமாக இருந்ததால் செண்பகத்தை கூப்பிட்டு மோர் கொண்டு வரச் சொன்னான் கேசவன்.

""அப்புறம்... என்ன விஷயம்... என்னைத் தேடி வந்திருக்கே?'' என்றான் கேசவன்.

""சும்மாத்தான்... இந்தப் பக்கம் போனேன். அப்படியே உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்'' செண்பகம் இரண்டு டம்ளரில் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.

""நேத்து மாட்ட ஏத்திகிட்டு ஆஸ்பத்திரி போனதா கேள்விப்பட்டேன். என்ன சொன்னார் டாக்டரு...'' என்றார் பழனிச்சாமி.

மாட்டைப் பற்றி பேச்சு எழுந்ததும் உள்ளே சென்ற செண்பகம் கதவோரம் நின்று அவர்களின் பேச்சைக் காது கொடுத்தாள்.

""அது ஒண்ணும் தேறாதுன்னுட்டார்பா. இன்னும் நாலு நாள்கூட தாங்காதுன்னுட்டார்...''

""அடப்பாவமே உன் பொஞ்சாதி எவ்வளவு ஆசையா வளர்த்த மாடு. ஒரு குழந்தையை வளர்க்கிற மாதிரி வளர்த்துச்சின்னு நீயே அடிக்கடி சொல்லியிருக்கியே..''

""ஆமாம். அதுக்கு என்ன செய்யறது. சீக்குன்னு வந்து படுத்தா ஒரு நாளைக்கு போக வேண்டியதுதானே. செண்பகத்தை நெனைச்சாதான் பாவமாயிருக்கு. இன்னும் நாலு நாள்ள அது சாவப் போவுதுன்னு தெரிஞ்சா அவளால தாங்கமுடியாது..''

உள்ளே கதவோரமாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த செண்பகத்துக்கு திக்கென்றது. "அய்யோ என் லட்சுமி செத்துடுமா?' உள்ளுக்குள் கதறினாள். ஓடிச் சென்று தொழுவத்தில் கட்டியிருந்த லட்சுமியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். கழுத்தில் கட்டியிருந்த மணி மெல்ல ஒலியெழுப்பியது.

அன்றிரவு, தாங்கமாட்டாமல் மாமனிடம் கேட்டேவிட்டாள் செண்பகம். ""உண்மைய சொல்லு மாமா, டாக்டர் என்ன சொன்னாரு?'' அவன் ஏதேதோ சொல்லி மழுப்பப்பார்த்தான்.

""தெரியும். எனக்கு எல்லாம் தெரியும். நீயும் பழனிச்சாமியும் பேசிக்கிட்டிருந்ததை நானும் கேட்டேன்.'' என்று சொல்லி கண் கலங்கினாள்.

"ஆமாம் புள்ள என்ன செய்யறது?' என்று சொல்லி அவனும் வருத்தப்பட்டு அவளைச் சமாதானப்படுத்தினான். ஆனால் மறுநாள் அவன் சொன்னதைக் கேட்டுத்தான் காளியாய் கத்தினாள் செண்பகம்.

""புள்ள... எப்படியும் ரெண்டு நாள்ல இல்ல மூணு நாள்ல மாடு செத்துப் போவத்தான் போவுது. யாருக்கும் உபயோகமில்லாம மண்ணுக்குப் போறதைவிட அத வித்து காசாக்கிடலாம் புள்ள. வர்ற காசுல உன் பழைய கொலுச மாத்தி புதுசு பண்ணிடலாம். என்ன சொல்ற'' என்றான்.

""என்ன மாமா சாவக்கிடக்கிற மாட்ட யாரு வாங்குவா...?'' என்றாள் புரியாமல்.

""வளர்க்கறதுக்கு யாரும் வாங்க மாட்டாங்க புள்ள. அடி மாட்டுக்கு வித்துடலாம். பக்கத்து ஊருக்கு நாளைக்கு லாரி வருதாம். இங்கயும் ரெண்டு மாடு வெலைக்கு போவுதாம். அதோட இதையும் சேத்து குடுத்திடலாம். அப்ப எட்டாயிரத்துக்கு வாங்குன மாடு இப்ப எட்டு நூறுக்கு போனா கூட லாபம்தான் புள்ள. செத்தா மண்ணுலதான் போட்டு பொதைக்கப் போறோம். ஏதோ குடுக்கிற காசுல உன் பழைய கொலுசை மாத்திடலாம். நீயும் லட்சுமியோட ஞாபகமாக மாட்டிக்கலாம் புள்ள'' நைஸôகப் பேசினான்.

அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள். பார்த்தும் இருக்கிறாள். லாரியில் ஏற்றி நெருக்கி கட்டி கொண்டு போவதை, கேரளா, ஆந்திரா பக்கம் கொண்டு போய் அதை வெட்டி கூறு போட்டு விற்பார்களாம். தோலை உறித்து வெளிநாட்டுக்கு அனுப்புவார்களாம்...''  அதை நினைக்கவே செண்பகத்துக்குத் துக்கமாய் இருந்தது.

""அய்யோ என் லட்சுமிக்கு இந்த கதியா வரவேண்டும். கூடாது. அது செத்தாலும் இங்கேயே சாகட்டும். வீட்டுக் கொல்லையிலேயே புதைத்து விடுகிறேன். அங்கு போய் அது சித்ரவதைப்பட்டு சாகக் கூடாது'' என்று திடமான முடிவுடன் ஒரு காரியம் செய்தாள்.

அவள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அகிலா டீச்சர் காந்திஜியைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.

""கருணை உள்ளம் கொணடவர்தான் காந்திஜி என்றாலும் அவரும் ஒரு தடவை ஒரு உயிரை கொலை செய்யச் சொல்லியிருக்கிறார். சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியைச் சுட்டுக் கொன்றுவிடும்படி சொல்லியிருக்கிறார் அண்ணல் காந்தி. ஏன்...? ஒரு உயிர் கண்ணெதிரே கஷ்டப்படுவதைக் காண அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை..'' என்று டீச்சர் சொன்னது மீண்டும் மீண்டும் அவள் உள்ளத்துள் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தது. "நாம் ஏன் செய்யக்கூடாது? அதாவது பச்சிளம் கன்று. இது ஆண்டு அனுபவித்து வயதானது. அடிமாடாய் போய் பலியாவதற்குப் பதில் இங்கேயே சாவட்டும்' ஒரு முடிவுடன் எழுந்தாள்.

அரளிக் கொட்டையை அரைத்து அன்றிரவு லட்சுமிக்கு கொடுத்தாள். கொஞ்சம் தீவனத்துடன் சேர்த்து வாய்க்குள் வைத்து ஊட்டினாள். இரவு உறங்கவில்லை அவள். தான் செய்தது சரியா? தவறா? என்ற குழப்பத்திலேயே புரண்டு கொண்டிருந்தாள்.

விடிந்தது. தொழுவத்திற்கு சென்று பார்க்கவே பயந்தாள். இறந்து கிடக்கும் லட்சுமியைப் பார்க்கவே அவளுக்கு மனசு பதை பதைக்கும். சேசவன்தான் முதலில் எழுந்து சென்றான். பதினொரு மணிக்கெல்லாம் லாரி வரும். மாட்டை ஏற்றி அனுப்ப வேண்டும். அதற்குள் மாட்டுக்கு ஏதாவது தீனி வைக்கலாம் என்று போனான். அங்கே லட்சுமி கிடந்த கிடப்பைப் பார்த்து அதிர்ச்சியானான்.

""ஏ புள்ளே...செண்பகம்...'' சத்தம் போட்டுக் கூப்பிட்டான்.

செண்பகம் வந்து பார்த்தாள். வாயில் நுரை தள்ளி தலை தொங்கி இறந்து கிடந்தது. பார்த்தவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். கண் சிமிட்டாமல் விழி உயர்த்தி பார்த்தாள்.

""மாமா ..மாமா..நானே என் லட்சுமியைக் கொன்னுட்டேன் மாமா...'' என்று அழுதாள்.

லட்சுமியின் உடம்பைத் தடவிக் கொடுத்தாள். சடெடென அதன் கழுத்தில் கட்டியிருந்த, மணியைக் கழற்றி தன் கழுத்தில் போட்டுக் கொண்டு, ""அய்.. கொலுசு! மாமா கொலுசு வாங்கித்தரேன்னியே. இதானா அது? நல்லாருக்கு மாமா'' என்றவள் வீட்டுக்குள் ஓடினாள். ""அத்தை... அத்தை தோ பாரு மாமா எனக்கு கொலுசு வாங்கிக் கொடுத்திருக்காரு...''

அவளுக்கு அன்றைக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான்! அப்படி இப்படியென்று நான்கு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இன்னும் சரியாகவில்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. விரைவில் குணப்படுத்திவிடலாம் என்று தஞ்சாவூர் டாக்டர் சொல்லியிருக்கிறார். கேசவன் நம்பிக்கையோடு இருக்கிறான். நம்பிக்கைதானே வாழ்க்கையின் ஆதாரம்.

கருணையின் அடிப்படையில் செய்த கொலைதான் என்றாலும், அது கொலைதானே! பாவ காரியம்தானே! அதனால்தான் அவள் செய்த பாவத்திற்கு தண்டனையாக சிறிது நாள் பைத்தியமாக நடமாடட்டும் என்று ஆண்டவன் விட்டு விட்டானோ என்னவோ... எனினும் கருணையே வடிவமான இறைவன், அவளைக் கைவிடமாட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com