நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேவை: பிறருக்கு உதவுபவர்தான் உண்மையான மனிதப் பிறவி!

தான் யார், எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் இந்த சமூகத்தில் சுற்றித் திரியும் மனநிலை சரியில்லாதவர்கள் ஏராளம். இந்த அவசர உலகில் இவர்களை பற்றிக் கவலைப்பட நம்மில் யாருக்கும் நேரம் இ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:44 am

எம். ஆனந்த்

தான் யார், எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் இந்த சமூகத்தில் சுற்றித் திரியும் மனநிலை சரியில்லாதவர்கள் ஏராளம். இந்த அவசர உலகில் இவர்களை பற்றிக் கவலைப்பட நம்மில் யாருக்கும் நேரம் இல்லை.

உடைகள் கிழிந்து, தலை முடியில் அடை அடையாய் சடைவிழுந்து, உடல் முழுவதும் அழுக்கு, கரியும் ஆக்கிரமித்து துர்நாற்றத்துடன் சாலையில் கிடந்த ஒரு மனநிலை சரியில்லாதவரை தூக்கி மினரல் வாட்டர் கொடுத்து கொண்டிருந்த ஓர் இளைஞரைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தோம்.

சார் நீங்கள் யார்? இத்தனை பேர் கண்டுகொள்ளாத போது நீங்கள் மட்டும்...?

என் பெயர் மகேந்திரன். இவர்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? அரிதிலும் அரிது மானிடப் பிறவி. நாம் வாழும் காலத்தில் மனிதநேயத்துடன் வாழவேண்டும். இது போன்ற விஷயம் நம் கண்ணில் பட்டு அது நம் மனதை வருத்தினால் வருத்தப்பட்டுவிட்டு அதைக் கடந்து செல்வது மனிதத்தன்மையல்ல. மனிதப் பிறவியாகப் பிறந்துவிட்டு மனிதத்தன்மையில்லாமல் நடமாடிக் கொண்டிருக்கிறோம். அய்யோ என்று ஓர் உயிர் துடிக்கும்போது ஓடிச் சென்று உதவுபவர்தான் உண்மையான மனிதப் பிறவி. நான் சேவை செய்யவில்லை மனிதப் பிறவியாக நடந்து கொள்ள முயல்கிறேன். நம் வீட்டில் உள்ள நம் பெற்றோர்களை இந்த நிலையில் இருப்பதாக ஒரு நிமிடம் கண்களை மூடி நினைத்தால் போதும், நம்மை அறியாமலேயே உதவும் உணர்வு தானாகப் பிறந்துவிடும்.

ஒவ்வொரு முறையும் யாருக்காவது உதவும் போது அவர்களை உங்கள் உறவினர்கள் போல நினைத்துப் பார்த்து உதவுவீர்களா?

ஆம். காரணம் எனக்கு மூன்று அக்கா ஓர் அண்ணன். எனது இரண்டாவது அக்கா மனநிலை சரியில்லாதவர். எனது மூன்றா வது அக்காவின் மகனும் மனநிலை பாதிக்கப்பட்டவர். ஒருமுறை எனது அக்கா சாக்கடையில் விழுந்துவிட்டார். அப்போது வயதான அம்மா மட்டுமே உடன் இருந்தார். அவரால் தனியாக அக்காவை மீட்க முடியவில்லை. பல பேர் பார்த்துவிட்டு உச்சுக் கொட்டி சென்றனர். ஒரே ஓர் ஆட்டோ ஓட்டுநர் மட்டும் மிகுந்த சிரமத்துக்கிடையே அக்காவை மீட்டு சாக்கடை சேற்றைக் கழுவி வீட்டில் சேர்த்தார்.

நமக்கு இக்கட்டான நிலையில் இருக்கும் போது யாராவது உதவ முன்வர மாட்டார்களா என்று எதிர்பார்ப்பு நமக்கு ஏற்படுவதைப் போல் அடுத்தவர்களுக்கும் வரும். நம் அனைவருக்கும் உணர்வுகள் ஒன்றே.

மனநிலை சரியில்லாதவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் செய்கிறீர்கள்?

உடையிலேயே மலம் கழித்து தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளக்கூட தெரியாத உறவினர்களால் கைவிடப்பட்டு சாலையில் கிடப்பவர்களுக்கு நான் முன்னுரிமைக் கொடுக்கிறேன். அவர்களை அழைத்துச் சென்று குளிக்கவைத்து நல்ல உடைகளை கொடுத்து உணவு சாப்பிட வைத்து மருத்துவரிடம் அழைத்துச் சென்று உடல் நிலையைப் பரிசோதித்து அவர்களை அன்பாலயம் போன்ற இல்லங்களில் வைத்து பராமரிக்கிறேன். கோவை வடவள்ளி அன்பாலயம் மறுவாழ்வு இல்லம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சிலர் தங்களுடன் பை வைத்திருப்பார்கள் அதில் எதாவது விலாசம் இருந்தால் அவர்கள் உறவினர் விலாசத்தை தேடுவேன். கிடைக்கும் பட்சத்தில் அவர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடன் அழைத்துச் செல்ல வழிவகை செய்வேன்.

வயதான பெற்றோர்களை வீதியில் விடுபவர்கள் மனம் திருந்தியிருக்கிறார்களா?

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை அழைத்துச் சென்று முதியோர் இல்லங்களில் வைத்துப் பராமரித்தாலும் பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளுடன் இருப்பதையே விரும்புகின்றனர். திருப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தனது தொன்னூறு வயது தாயாரை சாலையில் அமர்ந்து கடலை விற்கும் வேலைக்கு திண்டுக்கலுக்கு அனுப்பிவிட்டார். அவரது மகளை அழைத்து விசாரித்தபோது வீட்டில் வைத்து பராமரிக்க முடியவில்லை என்றார். அவருக்கு அறிவுரை வழங்கி தாயை அவருடன் அனுப்பிவைத்தேன். சில மாதங்களுக்கு பின் அந்த மூதாட்டி இறக்கும் தருவாயில் இருப்பதாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் தகவல் வந்தது. "நீண்டநாளாக இழுத்துக் கொண்டிருக்கிறார், எல்லோரும் வாயில் பால் ஊற்றினோம். உயிர் பிரிய மறுக்கிறது'' என்றார் அவரது மகன்.

நான் சென்று பால் ஊற்றிய உடனே உயிர் பிரிந்தது. நான் அழுவதைப் பார்த்து அவரது மகன் தனது தவறை உணர்ந்து கதறி அழுதார்.

வேறு என்ன செய்கிறீர்கள்? உங்கள் வீட்டில் இதற்கு ஆதரவு கிடைக்கிறதா?

வெளிமாநிலங்களில் இருந்து மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றுவிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன். பலர் நல்ல நிலையில் குணமடைந்துள்ளனர். பதினைந்து வருடங்கள் கழித்து ஒருவர் கர்நாடகாவில் உள்ள அவருடைய உறவினருடன் சேர்த்துவைத்துள்ளேன். சற்று குணமடைந்து வருபவர்களை பூங்கா, கோயில், சினிமா, பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வேன். இலவச மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் செல்வேன். நோய்வாய்ப்பட்டு சாலையில் கிடப்பவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்து அவர்களை நானே சென்று கவனித்துக் கொள்வேன். மிகவும் வயதான நிலையில் இறந்தபோன இருபத்தைந்து பேரை காவல்துறைக்கு தகவல் கொடுத்து முறைப்படி அடக்கம் செய்துள்ளேன். எனது தந்தை பழனிசாமி ஒரு பாத்திர வியாபாரி. காலில் செருப்புக்கூட போடாமல் அந்தக் காசை மிச்சம் பிடித்து அடுத்தவர்களுக்கு செலவு செய்து மகிழ்பவர். என்னைப் பாராட்டி ஊக்கம் கொடுப்பார். எனது மனைவி கலைச்செல்வி இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் சங்கோஜப்படுபவர். தற்போது அவரும் என்னைப் புரிந்துகொண்டார். எந்தவித எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. என்ன செய்வது? எல்லோருக்கும் மனநிலை ஒரே மாதிரி இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.