

கோடை தொடங்கவுள்ள நிலையில் மாவடுவும் மாங்காயும் கிடைக்கத் தொடங்கிவிடும். மாமரமும் அதில் கிடைக்கும் மாவடுவும், மாங்காயும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்று கேள்விப்படுகிறேன். அதனைப் பற்றிய ஆயுர்வேத குறிப்புகள் எவை?
ஏழுமலை, நாகப்பட்டினம்.
மாமரத்திற்குச் சமஸ்கிருதத்தில் ஆம்ர: என்று பெயர்.
மிகவும் புராதன மரங்களில் ஒன்றாகிய மாமரம் நம்நாட்டிலிருந்துதான் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது. மாமரத்தின் வேர், பட்டை, பிசின், இலைக் கொழுந்து, பச்சை இலை, பழுத்த இலை, பூ, பிஞ்சு (வடு), காய், பழம், பிஞ்சின் பருப்பு, கொட்டையின் பருப்பு ஆகிய ஒவ்வொரு பகுதியும் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. முற்றிய மரத்தின் கட்டைகள் பலகைகள் செய்வதற்கு உபயோகமாகிறது. சுருக்கமாகச் சொன்னால், மாமரத்தைப் போல் ஓர் அம்சத்திலும் வீணாகாத மரம் அரிது.
மாங்கொழுந்து - மதுமேஹம் எனப்படும் நாட்பட்ட சர்க்கரை வியாதிக்கு நல்லது.
இலை - ரத்த மூலத்திற்கு நல்லது.
பழுத்த இலை - தீப்புண் வேக்காட்டில் உபயோகம்.
பூ - நீர்ப்பேதியிலும் சீத பேதியிலும் நல்லது.
உலர்ந்தபூ - உலர்ந்த பூவை வீட்டில் புகைபோட கொசுவின் தொல்லை குறையும்.
மாவடு - மாவடுவின் காம்பை நீக்கி, ஊசியால் குத்தி சிறிய துளைகளிட்டு, உப்பு நீரில் ஊறப்போட்டு வெயிலில் உலர்த்தி உபயோகிக்க தீவிரமாய்ப் பசியுண்டாகும். ருசியின்மையைப் போக்கி, நாக்கில் ருசி கோளங்களைத் திறந்துவிடும். சிலருக்குச் சாப்பிட்டவுடன் பேதியாகும். அந்த உபாதையை மாவடு குணப்படுத்தும்.
பிஞ்சின் பருப்பும், கொட்டை முற்றிய காயின் பருப்பும், பெரும்பாடு, இரத்த மூலம், சீதபேதி, நாட்பட்ட நீர் பேதி போன்றவற்றைக் குணப்படுத்தும் அருமருந்தாகும்.
தனி மாம்பிசினைக் கால் வெடிப்புகளில் பூச, விரைவில் குணம் கிடைக்கிறது.
எலுமிச்சம் பழம் போல், பச்சை மாங்காயினால் சித்ரான்னம், ரஸம், சாம்பார், குழம்பு எல்லாம் சமைக்கலாம். நல்ல ருசியாக இருக்கும். பித்தத்தினால் ஏற்படும் உடற்சூடு குறையும், தோல் சீவிய பச்சைக் காயைத் துண்டங்களாக நறுக்கி தக்கபடி உப்பிட்டு உலர்த்தி அப்படியே உபயோகிக்க மாங்காயின் நல்ல குணங்கள் குறையாமல் பலனைத் தரும். ஆனால் அதிகம் மிளகாய் காரம் சேர்த்த மாங்காய் ஊறுகாய் வகைகளான ஆவக்காய், தொக்கு மாங்காய் போன்றவற்றில் மாங்காயின் சொந்தகுணம் அதிகம் இருக்க முடியாது. இந்த ஊறுகாயை மிதமாய் உணவு ருசிக்குத் தொட்டுக் கொள்ள உபயோகிக்கலாமே தவிர அதிகம் சாப்பிடக் கூடாது.
தோல் சீவிய பச்சைக் காயைத் துண்டங்களாக அரிந்து அப்படியே நல்ல வெயிலில் உலர்த்தி சுக்காய்க் காய்ந்த பிறகு இடித்துச் சிறு கண் சல்லடையில் சலித்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் சேர்த்த பச்சடி, பருப்பு ரஸம், சாம்பார் தயாரிக்க, புளிக்குப் பதில் இந்த மாங்காய்ப் பொடி சேர்த்துச் செய்யலாம். இது ஒரு நல்ல சத்துள்ள உணவு. மிளகு, சீரகம், உப்பு தகுந்தபடி சேர்த்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.