கலை: கலைவளர்க்க களம் அமைப்போம்!
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட ஆங்கில குறும்படம் அது. லைட்டிங் மற்றும் கேமிரா சார்ந்த விஷயங்களில் தனித்து நிற்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரைச் சந்திக்கிறார்.


லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட ஆங்கில குறும்படம் அது.
லைட்டிங் மற்றும் கேமிரா சார்ந்த விஷயங்களில் தனித்து நிற்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரைச் சந்திக்கிறார். தனது வாழ்வில் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதையும் ஒரு சில தினங்களே உயிரோடும் இருக்க போவதை தெரிந்துகொள்ளும் அதிர்ச்சியூட்டும் வினாடி அது. பதற்றப்படாமல் அடுத்து அவர் செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிடுகிறார். அதன்படி தனது மனைவியின் நண்பரை சந்தித்து மனைவிக்கு ஒரு புதுவாழ்வும் விளையாட்டுப் பருவத்தைக்கூட கடக்காத தனது மகளுக்கு ஒரு தந்தையாக இருக்கும்படி வேண்டுகிறார். ஒருவழியாக அவரை ஒப்புக்கொள்ள வைக்கிறார். மனைவியிடம் இந்த விஷயத்தைத் தெரியப்படுத்துகிறார்.
அதுநாள் வரை மனைவி, மகளுக்காக நேரத்தை ஒதுக்காதவர். அன்று இரவு மகளின் அறைக்குச் சென்று மகளை அழைத்துக் கொஞ்சி மகிழ்கிறார். தான் வாழ்ந்த நாட்களில் மகளிடம் விளையாட நேரம் ஒதுக்காமைக்காக வருந்துகிறார். ""இனி உனக்கு ஒரு நல்ல தந்தை கிடைப்பார்'' என்றபடி அறையைவிட்டு வெளியேறுகிறார். மகள் தந்தைக்கு அன்பாக ஒரு புறா இறகை பரிசாக தருகிறார். அடுத்தநாள் காலை படுக்கையைவிட்டு எழும் மகளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
ஜன்னல் அருகே தந்தை வைத்துச் சென்ற பார்பி பொம்மையைப் பார்த்து மகிழ்ந்தபடி தந்தையைத் தேடுகிறார். ஆனால் தந்தையோ கடற்கரை லைட்ஹவுஸ் அருகாமையில் மகள் கொடுத்த புறா இறகை கையில் பிடித்தபடி இறந்து கிடக்கிறார். அப்படியே முடிகிறது அந்தப் படம். ""அட் வாட்ர்ஸ் எட்ஜ்'' என்னும் இக்குறுப்படத்துக்கு கதை, வசனம், சினிமோட்டோகிராஃபியுடன், இயக்கியுள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த
சினிமோட்டோகிராபர் குப்புராஜ் கிருஷ்ணராஜ் (28).
நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் காட்சித் தொடர்பியல் துறையில் பயின்ற மாணவர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்த குறும்படம் இது.
குறும்படங்கள் என்று எவற்றைச் சொல்கிறோம்?
20 நிமிடங்களுக்கு மிகாமல் இருப்பது குறும்படம், ஆபாசம், வன்முறை இல்லாமல் பெரிய கருத்துக்களைக் குறுகிய நேரத்தில் எதார்த்தம் மீறாமல் உருவாக்கப்படுபவை குறும்படங்கள். பெரிய பொருட்செலவுகள் வைக்காத ஒரு கதையை எழுதி அதை சீன் மற்றும் ஷாட்டாக பிரித்து, நம்மிடம் இருக்கும் சிறிய வீடியோ கேமிரா அல்லது வாடகைக்கு ஒரு கேமிராவை எடுத்துப் படப்பிடிப்பு செய்யலாம்.
பின்னர் கல்யாண கேசட் எடிட் செய்பவர்களிடம் கொடுத்தாலும் போதும் அவர்கள் உதவியுடன் படத்தொகுப்பு செய்யலாம். தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுகொண்டு செய்தால் இன்னும் சிறப்பாக அமையும்.
இப்படியான ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
கோவையில் "களம்' என்று குறும்பட அமைப்பை நடத்தி வருகிறோம். எங்களுடன் இரண்டு முறை சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் உள்ளனர். "வெள்ளித்திரை' திரைப்படத்தின் இயக்குநர் விஜி, திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன், இயக்குநர் ராஜ்மோகன், ஓவியர் ஜீவா, எழுத்தாளர் பாமரன், என பலர் எங்களுக்கு உதவியாக உள்ளனர். ஆலோசனை வழங்குகின்றனர்.
எங்கள் அமைப்பில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஓர் அரங்கைத் தேர்வு செய்து எதார்த்தமான, சிறந்த ஒலி, ஒளி அமைப்புகள், மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட தேர்வு செய்யப்பட்ட தமிழ், மலையாளம், வங்கமொழி மட்டுமின்றி சர்வதேச திரைப்படங்களை காண்பித்து கலந்துரையாடுவோம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குறும்பட பயிற்சி பட்டறைகள் நடத்துகிறோம். கல்லூரிகளுக்குச் சென்று ஆபாசம், வன்முறையற்ற நல்ல படங்களைக் காண்பிக்கிறோம் அதிகளவில் கொங்கு மண்டலத்தில் பல்வேறு கல்லூரிகளில் குறும்பட பயிற்சிப் பட்டறைகள் நடத்துகிறோம்.
குறும்படங்களுக்கு மக்களிடையே உள்ள வரவேற்பு பற்றி ?
வெளிநாடுகளில் குறும்படங்களுக்காகவே தனியாக திரையரங்குகள் உள்ளன. குறும்படங்களுக்கு தற்போது இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல குறும்பட அமைப்புகள் இயங்கி வருகின்றன. நாங்கள் வாரம் ஒருமுறை கிராமப்புறங்களுக்குச் சென்று குறும்படங்களைப் புரஜெக்டர் மூலம் போட்டுக் காண்பிப்போம்.
கலந்துரையாடலில் மக்களின் கருத்துக்களைக் கேட்கும் போது வியப்பாக இருக்கும். ""வன்முறை, கலாசார சீரழிவு, 5 பாட்டு அதிலும் ஒரு அரை குறை ஆடையுடனான குத்தாட்டம் எல்லாம் முடிந்தவுடன் கடைசியில் போலீஸ் வரும்'' என்று ஊரகப் பகுதி மக்கள் வழக்கமான சினிமாவை விமர்சிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
பொழுதுபோக்கான விஷயமாக இருந்தாலும் அது சரியானதாக இருக்க வேண்டும் என்கின்றனர். குறும்படங்கள் பார்ப்பதை விரும்புகின்றனர். பலர் எங்கள் அமைப்பில் உறுப்பினராகிக் குறும்படங்களை இயக்கியுள்ளனர்.
உங்கள் இலக்கு என்ன?
நல்ல எதார்த்தமான தற்போதைய சூழலுக்கு ஏற்ற மாறுபட்ட சினிமாவை உருவாக்குவது. கல்லூரிகள் தோறும் குறும்பட பயிற்சி நடத்தி வருகிறோம். குறும்பட போட்டிகள் நடத்தி அதன் மூலம் நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கொண்டு ஒரு குழுவை உருவாக்கி வருகிறோம். மாவட்டம் தோறும் களத்தில் உறுப்பினராக உள்ள படைப்பாளிகளைக் கொண்டு உருவாக்கும் குழுக்களுக்குத் திரைப்பட வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம். சினிமா துறையில் நுழையும் அடுத்த தலைமுறை தரமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு.
உங்களுக்கு சினிமா தொழில்நுட்பம் எப்படி தெரியும்?
சிறுவயது முதலே சினிமா ஆர்வம் அதிகம். கோவை ஜிஆர்டி கல்லூரியில் காட்சித் தொடர்பியல் முடித்தேன். பின்னர் லாஸ்ஏஞ்சலீஸில் உள்ள நியூயார்க் ஃபிலிம் அகாதமியில் சினிமா தொழில்நுட்பம் பயின்றேன். குறிப்பாக சினிமாட்டோகிராஃபி பாடப் பிரிவில் முதல் மாணவனாகத் தேர்வு பெற்றேன். "பள்ளிக்கூடம்', "பெரியார்' உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன்.
காட்சித் தொடர்பியல் மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை?
அறிவுரை ஒன்றுமில்லை. ஆலோசனை உண்டு. தயவு செய்து உங்கள் ரசனைகளை மாற்றி மாறுபட்ட கோணத்தில் யோசியுங்கள், ஆபாசம். வன்முறையைத் தவிர்த்து விடுங்கள். சர்வதேச படங்களில் இருந்து காட்சிகளை எடுக்காதீர்கள். சுயமாகச் சிந்தியுங்கள், நிறையப் புத்தகங்கள் படியுங்கள், நல்ல தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள், சிறு சிறு குறும்படங்களை எடுத்துக் கொண்டே இருங்கள். அது காலப்போக்கில் உங்களைத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கச் செய்யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...