எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் சந்தித்தால் என்ன நடக்கும்? பெரிய சண்டைதான் என்று எல்லாரும் நினைப்போம். நவநாகரிகப் பின்னணியில் புனையப்படும் "கிரைம்' நாவல் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையும், கிராமியப் பின்னணியில் கதை புனையும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனும் அகவை எண்பதைத் தாண்டியவர்கள். அவர்கள் இருவரும் அண்மையில் சந்தித்துப் பேசினர். பேசிய இடம்: புதுவை
லாசுப்பேட்டையில் உள்ள கி.ராஜநாராயணனின் இல்லம். கி.ரா.வின் வீட்டு மாடிப்படிகளில் சிரமப்பட்டு
ஏறிச் சென்ற புஷ்பா தங்கதுரையை இன்முகத்துடன் வாசலில் நின்று வரவேற்றார் கி.ரா. தனது இடைசெவல்
கிராமத்துப் பண்பு மாறாமல். பெரியவர்கள் இருவர் வழக்கமாகச் சந்தித்துக் கொண்டால் விசாரிக்கும் உடல்நல விசாரிப்புகளுக்குப் பின்பு, இருவரும் தங்களுடைய நினைவுகளை மலரவிட்டனர்.
புஷ்பா தங்கதுரை: நான் சின்ன வயசிலே பாளையங்கோட்டையில படிச்சேன். எனக்கு ரெண்டரை வயசு இருக்கும். அப்பா செத்துப் போயிட்டார். எங்க அப்பா வச்சிட்டுப் போன சொத்தை அவருடைய சகோதரர்களும், சகோதரிகளும் சாப்பிட்டாச்சு. நான் எஸ்.எஸ்.எல்.சி. வந்தப்ப சொத்து எதுவுமில்லாம ஜீரோ ஆயிட்டேன். எங்க அம்மா வீட்டு வேலை செஞ்சு சாப்பாடு போட்டாங்க. படிக்கும் போது அஞ்சாம் கிளாஸ்லேயே இங்கிலீஷ்ல மூணு டென்ஸ் சொல்லிக் கொடுத்துடுவாங்க. அஞ்சாம் கிளாஸ் முடிச்ச உடனேயே நான் இங்கிலீஷ்லேயே கதை எழுதியாச்சு. அந்தக் காலத்திலே ஸ்கூல் இன்ஸ்பெக்ஷனுக்கு ஃபாரீனர்ஸ்தான் வருவாங்க.
கி.ரா.: நீங்க முதன் முதலாக எழுதின கதை எது?
புஷ்பா: நான் கதை எழுதினதை அவுங்கள்லாம் பாத்து அதிசயப்பட்டு, அதை பெரிய போர்டுல எக்சிபிஷன்மாதிரி வச்சாங்க. இதில்ல எல்லாம் எனக்கு என்கரேஜ் ஆயி ஒரு கதை எழுதி சி.சு.செல்லப்பாவிடம் கொடுத்தேன். அப்ப நான் எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிட்டு ஏதாவது வேலை பார்க்கணும்னு மெட்ராஸ் வந்துட்டேன். கையிலிருக்கிற காசு செலவழிஞ்சு போயிருச்சு. ஒரு வேளைதான் சாப்பாடு. அப்புறம் அதுவுமில்லாமப் போயிருச்சு.
போனவுடனே நீங்க நம்புவீங்களோ, மாட்டீங்களோ 13 நாள் சாப்பாடே கிடையாது சார். அப்ப காந்தி நடத்திய ஹரிஜன் பத்திரிகையெல்லாம் ரெகுலரா படிப்பேன். அவர் சொல்றதையெல்லாம் கேட்டுண்டேயிருப்பேன். அவர் சுதந்திரம் வர்ற வரைக்கும் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்லிண்டிருந்தார். "காந்தி நீங்க 21 நாள் உண்ணாவிரதம் இருப்பீங்க. 22 வது நாள்ல நீங்க சாப்பிடலாம்னு தெரியும். அந்த நினைப்பே உங்களை வாழ வச்சிடும். ஆனால் எனக்கு அப்படியில்ல.
அடுத்தநாளு சாப்பாடு எப்ப கிடைக்கும்கிறது தெரியாது' ன்னு நினைச்சுக்குவேன். அப்ப செல்லப்பாவிடம் ஒரு கவிதையைக் கொடுத்தேன். காலைக் கதிரவனை எதிர்பார்க்கிறதுக்காக மொட்டு அவிழும் என்று ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தேன். கதையும் கொடுத்தேன். இரண்டு மாசம் கழித்து செல்லப்பா வீட்டுக்குப் போனேன். டே... உன் கதை வந்திடுச்சிடுடா என்றார். நான் பார்க்கலையே என்றேன். கதை வந்த பத்திரிகையைக் காண்பிச்சார். ஆனால் என்னால் அதை என்ஜாய் பண்ண முடியலை. முதல் கதை வந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியலை. நான் கஷ்டப்படுறேன்னு தெரிஞ்சவுடனே அவர் ஒரு ரூபாயோ, ரெண்டு ரூபாயோ கொடுத்தார். அந்தக் காலத்தில ரெண்டரை அணா சாப்பாடு. வடை, பாயசத்தோடு சாப்பாடு. ஆனால் ஒரு ரூபாய் கிடைக்கிறது கஷ்டம். நாலாணா கிடைக்கிறதே கஷ்டம். அப்ப அவர் கொடுத்த அந்த ஒரு ரூபாய் பெரிய விஷயம். நீங்க எழுத ஆரம்பிச்சது எப்படி சார்?
கி.ராஜநாராயணன்: நான் எழுத ஆரம்பிச்சதே முப்பது வயதிலேதான். அதுக்கு முன்னாடி நான் செஞ்சுக்கிட்டிருந்ததெல்லாம் நண்பர்களுக்குக் கடிதம் எழுதுறதுதான். கு.அழகிரிசாமி பக்கத்து வீட்டுக்காரன். இன்னொருத்தர், முத்துசாமின்னு பேர். ஹிண்டு காலேஜ்ல பி.ஏ. படிச்சிக்கிட்டிருந்தார். நிறையப் புத்தகங்கள் கொண்டுவருவார். வங்க நாவல்கள் அத்தனையும். தாகூரிலிருந்து... பக்கிம் சந்திரர், சரத் சந்திரர், காண்டேகர் எல்லாம் படிச்சேன். அதுக்கப்புறம் ஹிந்தியில பிரபலமான எழுத்தாளர்கள் முல்க் ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ், ஆர்.கே.நாராயணனின் ஸ்வாமியும் அவருடைய நண்பர்களும் படித்தேன். என்னுடைய பழக்கமான எழுத்தாளர்கள் அத்தனை பேரும் முதன்முதலில் படிச்சது எதுன்னு கேட்டா, ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார். இவர்களைப் படிக்காம வந்ததே கிடையாது.
காண்டேகர் படிச்சதுக்கப்புறம், மொழிபெயர்ப்புகள் எது வந்தாலும் படிச்சிடுவேன். அப்புறம் நேரே ரஷ்ய நாவல் போயிட்டேன். எட்டயபுரம் ரங்கன்னு ஒருத்தர். அவர் வந்து பிரெஞ்சில வந்த மாபசான் கதைகளைத் தொகுப்பா கொடுத்திருக்கிறார். எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் என்னை உருவாக்கினது இவுங்கதான். அப்பக் கூட கதை எழுதணும்னு நினைக்கலை. கதை எழுதணும்னு தோணலை. நீண்ட நாளைக்கப்புறம், ஆனந்தவிகடன்ல ஒரு போட்டி நடத்தினாங்க. அதில் கல்கி ராஜேந்திரன் மூணாவது பரிசு. ஜெக சிற்பியன் இரண்டாவது பரிசு வாங்கினார். நரிக்குறவர்களை வச்சு எழுதின கதை அது.
ஃபர்ஸ்ட் பிரைஸ் யாருக்குக் கிடைச்சுச்சுதுன்னா, பிள்ளையாரை உடைச்சதைப் பத்திக் கதை எழுதினவருக்கு. அது அந்தக் காலத்திய அரசியலுக்காக வந்தது. பெரியார் அப்ப பிள்ளையாரை உடைச்சார் இல்லியா? இரண்டாவது கதைதான் பெஸ்ட் கதை. அந்தப் போட்டிக்கு "கதவு' கதையை அனுப்பிச்சேன். மூணாவது பரிசு கூடக் கிடைக்கலை.
அப்போது தாமரை பத்திரிகை வெளிவந்தது. அதுக்கு ரகுநாதனை ஆசிரியராப் போடுறதா இருந்துச்சு. அந்தநேரம் ஜீவானந்தம் எலக்ஷன் வேலையாச் சுத்திக்கிட்டிருந்தார். எங்க வீட்ல வச்சு ரெண்டு பேரும் சந்திச்சு அதப் பத்தி பேசுறதா இருந்துச்சு. அதனால ரெண்டு நாளைக்கு முன்னதாகவே ரகுநாதன் எங்க வீட்டுக்கு வந்துட்டார். அப்ப என் அலமாரியப் புரட்டுறப்ப கதை மாதிரி ஒண்ணை எழுதி வச்சிருந்தேன். மாயமான்கிற பேர்ல. அரசாங்கம் உற்பத்தியைப் பெருக்கறதுக்காக 400 ரூபாய் கடன் தருது. அந்தக் கடன் வாங்கி நஷ்டப்பட்டு ஒரு விவசாயி தன் நல்ல நிலத்தை வித்திடுறான். தாமரையில் அந்தக் கதையைப் போடுறதா ரகுநாதன் சொன்னார் ஆனால்
ஜீவானந்தம் தாமரைக்கு ஆசிரியரானார்.
ரகுநாதன் அந்தக் கதையைச் சரஸ்வதிக்கு அனுப்பி வச்சார். அது அதில வந்தது. அதை ஜீவானந்தம் படிச்சிட்டு, தாமரையின் இரண்டாவது இதழ் பொங்கல் மலரா வருது. அதுக்குக் கதை வேணும்னு கேட்டார். கதவு கதையை அனுப்பிச்சேன். அது வெளியே வந்ததுதான் தாமதம், சுந்தரராமசாமியிட்ட இருந்து லெட்டர் வந்துச்சு. கிருஷ்ணன் நம்பி பாராட்டி எழுதினார். அப்படி தெரியாத ஆட்களிடம் இருந்தெல்லாம் பாராட்டு வந்துச்சு. எல்லாரும் எழுது எழுதுன்னு சொன்னாங்க. அதுக்காக எழுதினேனே தவிர, ஓர் எழுத்தாளர் ஆகணும்னு நினைச்சு எழுதலை.
பு.த.: ஆரம்பத்தில் மேனாட்டில் கிளாசிக்கல் கதையெல்லாம் விக்டோரியன் இங்கிலீஷ்ல எழுதுவாங்க. அதற்குப் பின்னால மாறுபட்ட கதைகள் எழுதினாங்க. கிரைம் கதைகள் எல்லாம் எழுதினாங்க. இப்ப கிரைம் ஸ்டோரிஸ் எழுதுறதைக் கிண்டல் பண்றாங்க. செக்ஸ் ஸ்டோரி எழுதுறதாச் சொல்றாங்க. ஆனால் ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி எல்லாம் என்ன செஞ்சாங்க? எல்லாரும் கிரைம்தான் எழுதினாங்க. நான் அவரோட நாவல் ஞானபூமிங்கறதை என் பதினெட்டாவது வயசில படிக்கிறேன். அது முழுக்க முழுக்க கிரைம்நாவல்தான். அதை ஈஸியாப் படிக்க முடிஞ்சது.
கி.ரா.: நான் ரொம்பக் குறைச்சலாத்தான் எழுதியிருக்கேன். கதைகள் ஒரு எண்பது இருக்கும். நாவல்ன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது. நாவல் அப்படின்னு எடுத்துக்கிட்டா கோபல்ல கிராமம்னு ஒரு நாவல் எழுதினேன். அது தெலுங்கு மக்கள் ஆந்திராவிலிருந்து புறப்பட்டு எப்படி ஒரு கிராமம் அமைக்கிறாங்கன்னு எழுதினேன். வாசிச்சுவிட்டு எல்லாரும் சொன்னாங்க, இது ஒரு நாவலே கிடையாது. இதில் கதாநாயகன் கிடையாது. கதாநாயகி இல்லை. வில்லனும் கிடையாது. கதையே இல்லை. இது என்ன நாவல்னு கேட்டாங்க.
கடைசியா என்னிடத்தில் நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டாங்க. அதுக்கு நான், இந்த மாதிரி ஒரு விஷயம் நான் எழுதியிருக்கேன். நீங்க நாவல் இல்லைன்னு சொல்றீங்கள்ல அப்ப அது என்ன? அது என்னன்னு சொல்லணும்மில்ல? நாவல் இல்லைன்னா இதை என்னன்னு சொல்றீங்க?ன்னு கேட்டேன்.
அப்புறம் குழந்தைகளை வச்சு "பிஞ்சுகள்'ன்னு குறுநாவல் பண்ணினேன். அதுக்கு இலக்கியச்சிந்தனை பரிசு கிடைச்சது. அத வாங்குறதுக்காகப் போனேன். போன வருஷமே கோபல்ல கிராமத்துக்குப் பரிசு கொடுக்கறதா இருந்துச்சு. ஆனா கமிட்டியில உள்ளவங்க அதை நாவலே இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால அத இப்பத் திருத்திட்டோம். நாவல்ங்கிறதுக்குப் பதிலா நல்ல இலக்கியப் புத்தகத்துக்குப் பரிசுன்னு மாத்திட்டோம் அப்படின்னு இலக்கியச் சிந்தனை அமைப்பாளர் ப.லட்சுமணன் சொன்னார். அதனால இந்தக் குழந்தைகள் நாவலுக்குக் கிடைச்சது.
ஆனால் இப்ப என்ன தெரியுமா? இத்தனை ஆண்டுகள் கழிச்சு - கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள்ஆகிப் போச்சு - சுந்தரராமசாமி காலமாயிட்டார். சுந்தரராமசாமி ஆரம்பிச்சு வச்ச பத்திரிகை, பதிப்பகத்தை அவர் பையன் நடத்துறார். அவர் ஒருநாள் கடிதத்தில் கேட்கிறார்: நாங்க வந்து கிளாசிக்கல் நாவல்கள் வரிசை தமிழில் தொடங்குறோம். அதில் முதல்ல உங்களுடைய கோபல்ல கிராமம் நாவலைப் போடப் போறோம். அதுக்கு உங்க பெர்மிஷன் வேணும் என்றார். அப்பா வந்து நாவலே இல்லைன்னு சொன்னார். இப்ப வந்து கிளாசிக்கல் நாவல் வரிசையில நம்பர் ஒண்ணா இருக்கு என்கிறார் அவர் பையன்.
அதுக்கப்புறம் அதன் இரண்டாவது பகுதி ஆனந்தவிகடன்ல கோபல்ல கிராமத்து மக்கள் தொடரா வந்தது. அதுக்காகத்தான் சாகித்திய அகாடமி கிடைத்தது.
கரண்ட்ன்னு ஒரு சிறுகதை. ஓம்பூரி, தீப்தி நாவல் இவுங்கள்லாம் நடிச்சு ஹரிஹரன் டைரக்ட் பண்ணி இந்தியில் படமா வந்திருக்கு.
அந்தக் காலத்தில பிரிட்டிஷ்காரங்க படிப்பில நம்மள கெட்டிக்காரங்களா மாத்தினாங்க சார். அஞ்சாம் வகுப்பில டிஸ்டிரிக்ட் ஜியோகிரபி சொல்லிக் கொடுப்பாங்க. டிஸ்டிரிக்க விட்டு வெளியே போகமாட்டாங்க. டிஸ்டிரிக்டைப் பற்றி மட்டும்தான் போட்ருப்பாங்க. அதனால கோவில்பட்டி உள்பட எல்லா ஊர்களோட சமாச்சாரமும் தெரிஞ்சிடும் சார்.
பு.த.: நான் ரியல் ஸ்டோரிஸ் எழுதினதைப் பற்றிச் சொல்றேன். அப்போது ரியல் ஸ்டோரிஸ் எல்லாம் வெளிநாடுகளில் எழுதிக்கிட்டிருந்தாங்க. தமிழில் அப்படி வரவில்லையேன்னு நெனைச்சேன். அப்ப ஆசிரியர் சாவியின் பழக்கம் கிடைச்சது. அவரும் நானும் வெளியூரெல்லாம் போவோம். அப்போ ஹைதராபாத் போயிருந்தோம். அங்கு ஓர் ஐபிஎஸ் ஆபிஸர். தமிழர். சீனிவாசன்னு பேர். ஜெயில்ல போய் கைதிகள் லைஃப் பற்றிக் கேட்டு எழுதலாமான்னு அவரிட்ட கேட்டேன்.
அதற்கு அவர் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். தூக்கில் போடப்போகிற கைதிகளைப் பற்றி எழுதினேன். ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது அதில் ஒரு கதை. அதைத்தான் சினிமாவாக எடுத்தார்கள். அந்தக் கதை எழுதும்போது ஆரம்பத்தில ரொம்ப எதிர்ப்பு இருந்தது. அதில 24 கதைகள் எழுதினேன். அந்த நேரம் சாவி, ""ரெட் லைட் ஏரியா போய்க் கேட்டு எழுதுங்க''ன்னு தடாலடியாகச் சொன்னார். மும்பையில் ஃபோரஸ் ரோடு பகுதியில் உள்ள ரெட் லைட் ஏரியாவுக்குப் போய் எழுதினேன். நிறைய கதைகள் வர ஆரம்பிச்சிச்சு. இதுவும் ஃபேமஸ் ஆயிடுச்சு.
இதுபோல நிறைய உண்மைக் கதைகள் எழுதினேன். குருட்டாம்போக்கில எனக்கு ரொம்பப் புகழ் கிடைச்சது. இந்தக் கதைகள் எழுதறப்போதான் எஸ். வேணுகோபாலன் என்கிற என் பேரை மாத்தி வச்சுக்கலாமான்னு ஆசிரியர் சாவிட்ட கேட்டேன். சரின்னார். புஷ்பா தங்கதுரைன்னு பேர் வச்சேன். புஷ்பாவுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. தங்கதுரைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. இந்தப் பேர் தமிழ்நாடு முழுக்க ஃபேமஸ் ஆயிடுச்சு. "என் பெயர் கமலா'வைப் பார்த்துட்டு நெறையப் பேர் என் கதையை எழுதுங்கன்னு லெட்டர் போடுவாங்க.
கி.ரா.: நான் செக்ஸ் கதைகள் வெளியிடும்போது கடுமையான எதிர்ப்பு வந்தது. தேரில் சிற்பங்கள் இருக்கு. கோயிலில் சிற்பங்கள் இருக்கு. கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கு. இதை எல்லாம் ஏன் வச்சான்? மக்கள் பார்க்கும்படி தேரைத் தெருவில் இழுத்துட்டு வர்றான்? எது ஆபாசம்? ஆபாசம்னா எப்படிக் கோயிலுக்குள் போச்சு? அப்படீன்னு கேட்டேன். "அது பெரியவர்கள் அப்படி பண்ணிருக்காங்க'ன்னு சொன்னார்கள். அதுக்குப் பதிலா நான் சொன்னேன்: இந்தக் கதைகள் நான் பண்ணலை. வாழ்க்கையில இருக்கு என்றேன்.
பொதுவாக செக்ஸ் கதைகள் எழுதுகிறவர்களின் கதை, மற்ற விஷயங்கள் மக்களிடம் இருந்து வரலை. நான் திரட்டியது மக்களுடைய கதைகள். அவுங்களுடைய மொழியில் இருந்து வருது. அதான் செக்ஸ் கதைகள் எழுதுகிறவர்களுடைய கதைகளுக்கும் நான் எழுதிய செக்ஸ் கதைகளுக்கும் உள்ள வித்தியாசம்.
நீங்க, நான் ரெண்டு பேரும் திருநெல்வேலி. அந்தக் காலத்து திருநெல்வேலி பத்தி உங்களுக்கு ஞாபகம் இருக்கா...?
பு.த. : அப்பல்லாம் மதுரைத் தமிழ் எங்களுக்குப் பிடிக்காது. மருதை குருதை ஓட்டுறான்பாங்க. அப்ப எல்லாம் 20 மைல் சுற்றளவுக்குத்தான் கல்யாணம் நடக்கும். அந்தக் காலத்தில பிரிட்டிஷ்காரங்க படிப்பில நம்மள கெட்டிக்காரங்களா மாத்தினாங்க சார். அஞ்சாம் வகுப்பில டிஸ்டிரிக்ட் ஜியோகிரபி சொல்லிக் கொடுப்பாங்க.
படிக்கிறவங்க டிஸ்டிரிக்ட் விட்டு வெளியே போகமாட்டாங்க. டிஸ்டிரிக்டைப் பற்றி மட்டும்தான் போட்ருப்பாங்க. அதனால கோவில்பட்டி உள்பட எல்லா ஊர்களோட சமாச்சாரமும் தெரிஞ்சிடும் சார். இந்தக் கோயில் அங்க இருக்கு... அந்தக் கோயில் இங்க இருக்குன்னு எல்லாச் சமாச்சாரங்களும் தெரிஞ்சிடும். நீங்க பாண்டிச்சேரிக்கு எப்படி வந்தீங்க சார்?
கி.ரா.: நான் இங்க வந்த கதையைச் சொல்றேன். இங்குள்ள புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வேங்கட சுப்பிரமணியன் வரச் சொன்னார். அவர் அமெரிக்காவில் படிச்சவர். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் நாட்டுப்புறவியல்துறை இருக்கு. அதனால் இங்கே அவர் நாட்டுப்புறவியல் தொடங்க நினைச்சார். என்னுடைய தாத்தா சொன்ன கதைகள்னு ஒரு புஸ்தகம்.
அதுக்கு நான் நீண்ட முன்னுரை எழுதியிருக்கேன். அதை அவர் படிச்சிருக்கார். நாட்டுப்புறவியல் தொடங்கும்போது என்னைக் கூப்பிட்டார். நான் படிக்காதவன். எனக்கு அதைப் பற்றி ஒண்ணும் தெரியாது. படிப்பாளிகள் மத்தியில வந்து என்னால ஒண்ணும் செய்ய முடியாது. நான் வரமாட்டேன்னுதான் சொன்னேன். பிடிவாதமாக் கூப்பிட்டார். அதுக்கு முன்னால க.நா.சு. அங்க கெஸ்ட் லெக்சரரா இருந்தார். இது சம்பந்தமாக எனக்கும் அவருக்கும் நிறையக் கடிதப் போக்குவரத்து இருந்தது.
அது புத்தகமாகக் கூட வந்தது. அவர் நிறைய விஷயங்கள் சொன்னார். பேராசிரியராக உங்களை ஆக்குறேன். நிறையச் சம்பளம் கொடுக்கிறோம். என்னென்ன வசதியெல்லாம் செஞ்சு தரணுமோ அதையெல்லாம் செய்ஞ்சு தர்றோம்னார். அதுக்குப் பின்னாலதான் பேராசிரியரா வந்து சேர்ந்தேன்.
ஒரு ஸ்கீம் எடுத்துப் பண்ணணும்னு நினைச்சோம். வட்டார வழக்குச் சொல் அகராதி திரட்டுறது. நாட்டுப்புறக் கதைகள் திரட்டுறது என்று சொன்னார். முதல்ல நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டினோம். இருநூறு கதைகள் திரட்டினோம். எனக்குக் கீழ் இரண்டு உதவியாளர்கள். ஸ்டெனோ என்று எல்லாம் கொடுத்தார்.
திரட்டிய கதைகள் அத்தனையுமே விறகு வெட்டிகளைப் பற்றிய கதைகள்.
இந்த நாட்டுப்புறக் கதைகளுக்குள் ஆழமாகப் போகும்போது என்ன தெரியும் என்றால், இந்த மக்கள், இந்தப் பகுதியில் என்னவாக இருந்தார்கள்? பெண்கள் என்னவாக இருந்தார்கள்? என்ன தொழில்களெல்லாம் இருந்தன? என்று அந்தக் கதைகள் சொல்லுது. மக்களைப் பற்றி நிறைய அந்தக் கதைகள் சொல்லுது. இப்படித் தமிழ்நாடு பூராவுமே நான் கதைகளைத் திரட்டியிருந்ததால் நிறையத் தெரிந்திருக்கலாம். நீங்கள் வரலாற்று நாவல் எழுதியிருக்கிறீங்களே?
அந்தக் காலத்தில பிரிட்டிஷ்காரங்க படிப்பில நம்மள கெட்டிக்காரங்களா மாத்தினாங்க சார். அஞ்சாம் வகுப்பில டிஸ்டிரிக்ட் ஜியோகிரபி சொல்லிக் கொடுப்பாங்க. டிஸ்டிரிக்க விட்டு வெளியே போகமாட்டாங்க. டிஸ்டிரிக்டைப் பற்றி மட்டும்தான் போட்ருப்பாங்க. அதனால கோவில்பட்டி உள்பட எல்லா ஊர்களோட சமாச்சாரமும் தெரிஞ்சிடும் சார்.
பு.த.: ஆமாம். ஹிஸ்டாரிகல் நாவல் எழுதுறதுக்கு வந்தேன் ஸ்ரீவேணுகோபாலன் என்கிற பெயரில். நான் ஒருநாள் கன்னிமாரா லைப்ரரியிலே புக் எடுக்கப் போனேன். உலக இலக்கியங்கள் எல்லாம் அங்க உக்கார்ந்திருக்கும். கே.சீனிவாசாச்சாரின்னு பெரிய ஹிஸ்டோரியன் சார். அவர் எழுதின புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். ஸ்ரீரங்கத்தைப் பத்தி எழுதின புத்தகத்தைப் படித்தேன்.
இப்படி ஹிஸ்டரி படிக்கும்போது சேர, சோழ, பாண்டியனைப் பற்றியெல்லாம் படித்தேன். ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றியும் படிச்சேன். அதப்பத்தி எழுதினதுதான் திருவரங்கன் உலா. இதைத் தொடர்ந்து மதுராவிஜயம் நாவலையும் எழுதினேன். அது திருவரங்கன் உலாவின் மூன்றாவது, நாலாவது பகுதி. இபின்பதூதா லைஃப் முழுக்கப் படிச்சுத்தான் எழுதினேன். உங்கள் நாட்டுப்புறக் கதை அனுபவங்களைச் சொல்லுங்க சார்?
கி.ரா.: நான் பொக்காஷியோவின் டெக்கமரான் கதைகள் படிச்சிருக்கேன். அது தமிழ்நாட்டில் உள்ள செக்ஸ் கதைகள் போல இருந்தது, ஆச்சரியமாக இருந்தது. அது என் மனசுக்குள்ள ரொம்ப நாளா இருந்தது. நாட்டுப்புறக் கதைகள் மக்கள் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கிறது. நான் முதல்ல நாட்டுப்புற பாடல்களைத் திரட்ட ஆரம்பிச்சேன். பின்பு கதைகளைத் திரட்ட ஆரம்பிச்சேன்.
அது பத்துத் தொகுப்புக் கொண்டுவந்திருக்கேன். பாலியல் கதைகளைத் திரட்டி அதையும் புத்தகமாகக் கொண்டு வந்தேன். நான் செக்ஸ் கதைகள் எழுதலை. மக்களிடம் உள்ள செக்ஸ் கதைகளைத் தேர்ந்தெடுத்து, சேகரித்துத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
நாட்டுப்புறக் கதைகளில் நிறைய இருக்கு.
குழந்தைகளுக்கான கதைகள் இருக்கு. குழந்தைகள் குழந்தைகளுக்குச் சொல்கிற கதைகள். குழந்தைகளுக்குப் பெரியவங்க சொல்ற கதைகள். மக்கள் சபையில் சொல்ற கதைகள். தனியாகச் சொல்ற கதைகள். பள்ளியறைக் கதைகள். ராஜாக்களைப் பற்றிய கதைகள். பேய்களைப் பற்றிய கதைகள். வனாந்திரங்களைப் பற்றிய கதைகள். மனுஷனுடைய வாழ்க்கையில் எத்தனை வகைகள் இருக்குதோ அத்தனை வகைகளிலும் அந்தக் கதைகள் இருக்கு.
நான் ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனேன். இது கவனிக்கப்படணும். மக்கள் பேசுகிற மொழி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விதமாய் மாறும். பச்சிலைகளின் பெயர்கள் மாறும். செக்ஸ் வார்த்தைகள் கூட மாறும். பல்வேறுவிதமான கதைகளைத் தொகுத்திருக்கிறேன்.
மொழியின் பூர்விகம் பற்றி ஆராயப் போனால் நிறைய அருமையான வார்த்தைகள் கிடைக்கும். நான் வட்டார வழக்குச் சொல் அகராதி போட்டிருக்கேன். சாகித்திய அகாடமியிலிருந்து ஒரு தொகுப்பு வந்திருக்கு. கரிசல் காட்டு எழுத்தாளர்களை எல்லாம் திரட்டி ஒரு தொகுப்புக் கொண்டு வந்தோம். ஓரே வட்டாரத்திற்குள்ள எழுதக் கூடிய எழுத்தாளர்களைத் திரட்டி ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கோம். நாட்டுப்புற இயலுக்குன்னு "கதை சொல்லி' பத்திரிகை கொண்டு வந்திருக்கோம்.
பு.த.: உங்களுக்கு ஒண்ணு தெரியுமா சார்? இசையில் நான் அந்தக் காலத்தில் ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.
ராஜரத்தினம் தோடியை 3 மணி நேரம் தொடர்ந்து கேட்ருக்கேன் சார். எங்க ஊர் பாளையங்கோட்டையில் மராத்திக்காரங்க இருப்பாங்க. அதில் ஒரு பெரிய பணக்காரர். அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு ராஜரத்தினம் கச்சேரி. தோடியை 3 மணி நேரம் வாசிச்சார். அதுக்குள்ள விடிய ஆரம்பிக்குது. பூபாளம் வாசிக்க ஆரம்பிச்சார். அதை மறக்கவே முடியாது சார்.
கி.ரா.: எனக்கு எப்படி இசை ஈடுபாடு வந்தது என்று கேட்டால், எங்க கிராமத்தில உள்ள பஜனை மடத்தில நாங்க சனிக்கிழமை தோறும் பஜனை பாடுறது, அப்புறம் மார்கழியிலே தெருக்களில நாங்களே பாடிட்டு வருவோம், இங்க மூணு திருவிழாக்கள் நடக்கும். பெரிய நாதஸ்வரக் கச்சேரிகள். வெளியூர்க்கெல்லாம் நாதஸ்வரக் கச்சேரி கேட்கப் போவோம். சங்கரன் கோவில், கோவில்பட்டி, கடம்பூர் இந்த இடங்களில் எல்லாம் நடக்கும் நாதஸ்வரக் கச்சேரிகளை விடாமல் கேட்போம். காருக்குறிச்சி பிரமாதமாகப் பாடுவார்.
அவர் நாதஸ்வரத்தை நிறுத்திவிட்டு அவர் பாடப் போயிருந்தால் எந்த அளவுக்குப் போயிருப்பாரோ சொல்ல முடியாது. அதே மாதிரி ராஜரத்தினமும் பிரமாதமாகப் பாடுவார். விளாத்திகுளம் சாமின்னு ஒருத்தர். அவர் காடலூர் ஜமீன்தார். ஜமீன்தாரை எல்லாரும் சாமி சாமின்னு கூப்பிடுவாங்க. அதனால அவர் சாமிகள் ஆனார்.
மத்தபடி காவி கீவி எல்லாம் கட்னது கிடையாது. அவருக்கு மூணு பெண்டாட்டி, ஒரு வைப்பாட்டி. அவர் இசையை முறையாகப் படிச்சவர் அல்ல. நம்முடைய வித்வான்கள் ஓர் இடத்தில் பாடினால் அதே மாதிரிதான் அடுத்த இடத்திலும் பாடுவார்கள். விளாத்திகுளம் சாமி அப்படிச் செய்யலை. ஏன்னா அவர் முறையாக ஒரு வாத்தியாரிட்டயும் படிக்கலை.
அவர் ஒரு ராகத்தைப் புதுமாதிரியாத் தொடங்குவார். ஸ்வரம் பிசகாது. ராக ஆலாபனை பண்ணுவார். மேல் சட்சமத்தை ஆதார சுருதியாக வச்சுக்கிட்டு அதுக்கு மேல பாடுவார். அதுக்குத் தொண்டை ஒத்துக்கும். கீழேயும் மேலேயும் அவர் போகிற இடங்கள் இருக்கே... அது வந்து வித்தை. இந்தக் கற்பனைகள் இருக்கே, ஸ்வரங்கள் போடுறது, ராகங்களை அடுக்குறது, கொண்டு போறது இதெல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
எல்லாரும் ஒரு கேள்வி கேட்பாங்க. இசையில் உங்களுக்கு நிறைய ஈடுபாடு இருக்கு. இசைப் பாத்திரங்கள் உங்கள் கதைகளில் வரலையே, நாவலில் வரலையேன்னு கேட்பாங்க. அது வராததுக்குக் காரணம், அந்த மனிதர்கள் அங்க வாழலை. தஞ்சை மாவட்டத்துல தி.ஜானகிராமன் கதைகளிலே நிறைய விஷயங்கள் வருது அப்படீன்னு கேட்டால், அந்த மனிதர்கள் அங்க வாழ்ந்தாங்க. ஆகவே அந்தப் பாத்திரங்கள் வரும். நான் அப்படிப் பாத்திரங்கள் கொண்டு வந்தா செயற்கையா இருக்கும்.
பு.த.: நீதிக் கதைகள் எல்லாம் இந்தியாவில் இருந்துதான் போயிருக்குது சார். ஈசாப் நீதிக் கதைகள் என்று ஒரே ஒரு நீதிக்கதை மட்டுமேதான் உலகத்தில் உண்டு. அதையும் இந்தியாவில் இருந்து திருடி எழுதினதாச் சொல்லுவாங்க. உலகத்திற்கு இந்தியாவிலிருந்து ஏகப்பட்ட சமாச்சாரங்கள் போயிருக்கு. நான் செக்ஸ் கதை எழுதறதாச் சொல்றாங்க, வாழ்க்கையில ஒன்பது ரசங்கள் இருக்கு சார். அதில் செக்ஸýம் ஒன்று. கம்பரசம்னு சொல்றாங்களே... கம்பரே எவ்வளவு செக்ஸ் எழுதியிருக்கார் தெரியுமா? இன்னும் ஒண்ணு தெரியுமா சார்? உலகத்திலே மிருகங்களைப் பேச வச்சது இந்தியாதான். வேற நாட்டில கிடையாது.
கி.ரா.: நாட்டுப்புறக் கதைகளின் மகிமையைச் சொல்றேன். பிரான்சில் ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு நோய் வந்தாச்சு. என்ன நோய்ன்னு தெரியலை. எல்லாரும் கைவிட்டாச்சு. படுக்கையில படுத்துட்டான். அன்னம், தண்ணீர் ஒண்ணும் கிடையாது. அப்படியே கிடந்தான். பேசுனா காது கேட்குது. ராஜான்னு கூப்பிட்டா முழிச்சுப் பாக்கிறார். மந்திரி நெருங்கிய நண்பன். மந்திரி மட்டும் உட்கார்ந்திருந்தான். ராஜாவுக்கு செக்ஸ் கதைகள் பிடிக்கும். மந்திரி ராஜாவுக்கு ஒரு அப்பட்டமான செக்ஸ் கதை சொல்றான். முடிச்சவுடனே இன்னொரு கதை சொல்றான்.
இப்படி ரெண்டு, மூணு கதை சொன்னவுடனே ராஜா என்னைக் கொஞ்சம் நிமிர்த்தி வை என்கிறான். அப்புறம் ரெண்டு கதை சொன்னவுடன் தண்ணீர் கேட்டான். இன்னும் சில கதைகள் கேட்டவுடனே பசிக்கிற மாதிரி இருக்குன்னான். சாப்பாடு தர்றாங்க. அப்புறம் எந்திரிச்சி உட்கார்கிறான். மெதுவா நடக்கிறான். இப்படி நூறு கதைகள் சொல்லி அவனை எழுந்து நடக்க வைத்துவிடுகிறான் மந்திரி.
அப்படிச் சொன்னது "நூறு கதைகள்'ன்னே புத்தகம் வந்திருக்கு. காஷ்மீரில ஒரு ராணி. அவள் மகனை இழந்த புத்திர சோகத்தில் இருக்கிறாள். அதிலிருந்து அவள் மீண்டுவர முடியவில்லை. ஒரு கதைசொல்லி வந்து நிறையக் கதைகள் சொல்கிறான். அந்தக் கதைகள்தான் கதாசாகரம். இந்தக் கதைகள் விந்தைகள் செய்யும். வைத்தியம் செய்யும்.
பு.த.: நான் இங்க வந்தவுடனே நம்மளப் போட்டு ஏதாவது கண்டபடி கேட்டுருவீங்க. அல்லது ஏன் இப்படிப் பண்றீங்கன்னு கேட்பீங்கன்னு நினைத்தேன். ஆனால் கிட்டத்தட்ட வெவ்வேறு சாயலிலே நீங்களும் என்னை மாதிரி இருக்கிறீங்க. அதனால உங்களுக்கு ஈக்குவலாச் சொல்லலை. செக்ஸ் கதைகள் எழுதிறதுக்கு உங்களுக்கு அப்ரூவல் நடந்திருக்கு. ஆனால் எனக்கு அது கிடைக்காமல் போயிருக்கு.
ரொம்ப சந்தோஷம் சார். இங்க வரும்போது சண்டை கிண்டை வந்திடும்னு நினைச்சேன்.
கி.ரா: எதுக்குச் சண்டை? படிப்பு இருக்கிறவன்தான் சண்டை போடுவான். படிப்பாளிகள்தான் சண்டை போடுவார்கள். நாங்க படிப்பாளிகள் அல்ல. பட்டம் வாங்கின படிப்பாளிகள் அல்ல. எங்களுடைய கல்வி வேற மாதிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.