அண்ணன், தம்பி இருக்க மூத்த, இளைய சகோதரர் ஏன்? பிழையற்ற தமிழ் அறிவோம்! - 21

மங்கையர்க்கரசியும் அங்கயற்கண்ணியும், தேநீரும் ஐந்நூறும் - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
தமிழ் அறிவோம்
தமிழ் அறிவோம்Pandia Rajan
Published on
Updated on
2 min read

சகோதரர் எனும் சொல்லுக்கு உடன்பிறந்தவர் என்பது பொருள். சக + உதரர் (உதரம் - வயிறு) ஒரே வயிற்றில் பிறந்தவர் சகோதரர். தனித் தமிழில் உடன் பிறந்தார். இது பொதுச்சொல். ஆனால் தமையன், தமக்கை, தம்பி, தங்கை எனும் சொற்கள் அமைந்த தமிழின் சிறப்பு என்னே?

 தம் + ஐயன் - தமக்கு மூத்தவன் - தமையன் (அண்ணன்)

 தம் + அக்கை = தமக்கை - தமக்கு மூத்தவள் - அக்கா

 தம் + பின் = தம்பி எனத் திரிந்தது. தம்பின் பிறந்தவன் - தம்பி

 தம் + கை = தங்கை - தமக்குச் சிறியவள் - தங்கை

 (கை எனும் சொல் சிறிய எனும் பொருளில் வந்தது.)

 இப்படியெல்லாம் ஆங்கில மொழியில் சொல்லிட முடியுமா? அங்கு brother என்பதோடு ஒட்டுச் சொற்களை இணைக்க வேண்டும். younger brother, elder brother என்றிவ்வாறு குறிப்பிடுகிறோம். நந்தமிழில் ஒவ்வொரு நிலைக்கும் தனித் தனிச் சொற்கள் இருக்கும்போது, ஆங்கில மொழியின் தாக்கம் காரணமாக இளைய சகோதரர், மூத்த சகோதரர் என்று தமிழர்கள் பேசுவது சரியா?

குழந்தைப் பருவம் என்று சொல்லுகிறோம். இந்தக் குழந்தைப் பருவத்திலேயே பத்துப் பிரிவுகளைக் கண்டவர்கள் தமிழர்கள். பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகை அறிவீர்கள். ஆண்பால் பிள்ளையாயின் 1. காப்புப் பருவம் 2. செங்கீரைப் பருவம், 3. தாலப் பருவம் 4. முத்தப் பருவம் 5. சப்பாணிப் பருவம், 6. அம்புலிப் பருவம், 7. வருகைப் பருவம், 8. சிற்றில் பருவம், 9. சிறுதேர்ப் பருவம். 10. சிறுபறைப் பருவம் என்றும், பெண்பால் பிள்ளைத் தமிழாயின், இறுதி மூன்றும் மாறுபட்டு, 8. கழங்கு (தட்டாங்கல்), 9. அம்மானை, 10. ஊசல் (ஊஞ்சல்) என்றும் பகுத்துப் பிரித்தவர்கள் தமிழர்கள்.

பெண்களின் பருவத்தையும், வயதிற்கேற்ப ஏழு பருவங்களாகப் பிரித்தனர். அவை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பன (ஏழு வயதில் தொடங்கி நாற்பது வயது வரை). இவை பற்றியெல்லாம் விரிக்கிற் பெருகும். இந்த அளவே போதும் எனக் கருதுகிறேன்.

 எழுத்துப் பிழைகள்

சொற்களின் பொருள் பற்றிய சிந்தனையின்மையால் ஊடகங்களில் பற்பல எழுத்துப் பிழைகளை அவ்வப்போது செய்து வருகிறார்கள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மங்கையர்கரசி என்று பெயர் எழுத்தில் காட்டப்பட்டது. மங்கையர்க்கு+அரசி= மங்கையர்க்கரசி என்று சரியாக எழுதத் தோன்றவில்லை போலும். ஒரு செய்தித்தாளின் இணைப்பு வார இதழில் அங்கயர்க்கண்ணி என்று எழுதியிருந்தார்கள். அம்+கயல்+கண்ணி= அங்கயற்கண்ணி என்றாகும். அழகிய மீன் போன்ற கண்களுடையாள் என்பது பொருள். கயற்கண்ணியைக் கயர்க்கண்ணி ஆக்குதல் அழகா?

 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்' என்று ஒரு நிகழ்ச்சி எழுத்தில் காட்டப்பட்டது. தேனீர் எனில் தேன் கலந்த நீர் (இனிய நீர்) என்று பொருள். இச்சொல் தேநீர் என்றிருத்தல் வேண்டும். தே(யிலை) + நீர் = தேநீர் ஆனது. இன்னும் சரியாகச் சொன்னால் tea என்பதன் தமிழ் ஒலி தே. இதனோடு நீர் சேர்த்துத் தேநீர் என்று டீயைச் சொல்லுகிறோம்.

இவ்வாறே காஃபியைக் காப்பி என்றுரைத்தல் சாலும். மூக்கைத் தலையைச் சுற்றிப் பிடிப்பதுபோல், மாட்டுக் குளம்பின் வடிவில் (பிளவுபட்டு) காப்பிக் கொட்டை இருப்பதால் அதனைக் குளம்பி எனல் சரியானதுதானா? விவரம் தெரியாதவர் இதனைக் குழம்பி என்றுரைத்துக் குழப்பிவிடுகிறார்கள்.

படித்தவர்களும் ஐந்நூறு என்னும் சொல்லை ஐநூறு என்றெழுதுகிறார்கள். இதழ்களில் வருகின்ற கவிதைகளில் கதைகளில் இச்சொல்லைப் பலமுறை பார்க்க நேர்கிறது. ஐந்து + நூறு = ஐந்நூறு ஆதல் இலக்கண நெறி. 'ஐ! நூறு' என்று வியத்தல் பொருளில் ஐநூறு விளங்குகிறது. ஐ - நூற்றை விட்டு இனி, ஐந்நூற்றைப் பிடிப்போம்.

சாமித்துரை என்ற பெயரை சாமித்துறை என்று ஒரு செய்தியேட்டில் காண நேர்ந்தது. துரையாக (பிரபு) இருப்பவரை ஒரு நீர்த்துறை - படித்துறை ஆக்குதல் சரியா? மற்றொரு செய்தித்தாளில் கழுத்தை அறுத்துக் கொள்ளப்படும் என்று படித்தபோது மனம் பதறியது. கழுத்தை அறுத்துக் கொல்லப்படும் ஆடுகளை விட்டுவிட்டுத் தமிழை ஏன் கொல்லுகிறார்கள்?

தொலைக்காட்சி - சிறுவர் தொடர்களில் அடிக்கடி போடா கொய்யா (goiya) என்ற சொல்லைக் கேட்டுள்ளேன். இஃது என்ன சொல்? ஒன்றும் புரியவில்லை. அண்மையில் பழங்களின் விலை விவரம் பற்றித் தொலைக்காட்சியில் கூறியவர் கொய்யா (Go) என்றபோதுதான் ஓகோ! நமது கொய்யாப் பழம்தான் இது என்று புரிந்துகொண்டேன். குடிசையை Gudisai என்பதுபோல் (Ko) கொய்யாவை (Go) கொய்யா என்பதும் ஒலிப்புப் பிழை.

 (தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com