கலை: மக்களின் பாராட்டுகளே பெரிய விருது!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலக மேற்பார்வையாளர், நாடகக் கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், சின்னத்திரை நடிகர் எனப் பல்வேறு தளங்களில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார் ஆர்.ஆர். என்கிற ஆர். ராமச்சந்திரன். 57 வயத
கலை: மக்களின் பாராட்டுகளே பெரிய விருது!
Updated on
3 min read

சென்னை பிஎஸ்என்எல் அலுவலக மேற்பார்வையாளர், நாடகக் கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், சின்னத்திரை நடிகர் எனப் பல்வேறு தளங்களில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார் ஆர்.ஆர். என்கிற ஆர். ராமச்சந்திரன். 57 வயதேயான அவர், விருதுகளை விடவும் மக்களின் பாராட்டுகளே வலிமையானவை

என்கிறார். இனி அவருடனான உரையாடல்...

உங்களைப் பற்றி..?

தந்தை- கே. ராஜகோபால், தாய்- ஆர். வசந்தா, தம்பிகள் இருவர், மனைவி- ரஞ்சனி, மகன்- ஆர். சந்தோஷ், மகள்- திருமணமாகிவிட்டது.

எனது பெற்றோரின் சொந்த ஊர் திருச்சி மலைக்கோட்டை பகுதியாகும். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். தற்போது, சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

நாடகத் துறைக்கு வந்தது எப்படி?

1966-67-ல் பழனியில் உள்ள பள்ளியில் படித்த போது, அங்கு மாணவர் தலைவராக இருந்தேன். அப்போது, எங்கள் பள்ளியில் நடந்த இலக்கிய மன்ற விழாவில் அறிஞர் அண்ணா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறு வேடம் ஏற்று நடித்தேன்.

எனது நண்பர் கே. மாரிமுத்து பழனி நாடகக் குழுவில் நடிகராக இருந்தார்.  பின்னர், சில கருத்து வேறுபாடுகளால், அந்த நாடகக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதையடுத்து, மாரிமுத்துவும்,  நானும் இணைந்து

ஜூலை, 1974-ல் அன்னை ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தோம்.

உங்களின் நாடகம் பற்றி?

எங்களின் முதல் நாடகமான "அறிமுகம்' பழனி முருகன் நகராட்சி கலையரங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, என் "ஆடைகள்', "நம்பிக்கை', "ஓ மை டார்லிங்', "ஓடி விளையாடு அப்பா' ஆகிய நாடகங்களை நடத்தினோம். எங்கள் நாடகக் குழுவால் தயாரிக்கப்படும் அனைத்து நாடகங்களுக்கும் கதை, வசனம், இயக்கம் என்னுடையது.

1980-ல் மதுரையில் "அவள் ஒரு பச்சைக்கிளி' நாடகத்தையும், 1983-ல்  சென்னையில் "என்னம்மா கண்ணு செüக்கியமா' நாடகத்தையும் அரங்கேற்றினோம்.  இந்த நாடகத்தில் தற்போது சுமதிஸ்ரீ (தங்கம் தொடர்) கதாநாயகியாக நடித்தார். இந்த நாடகத்துக்கு கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்தேன்.

1984-85-ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் "பாரதி கண்ணம்மா' நாடகத்தை அரங்கேற்றினோம். இதிலும், கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்தேன். சென்னை தியாகராய நகர் வாணி மஹால், எழும்பூர் மியூஷியம் தியேட்டர், மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், ஆழ்வார்பேட்டை நாரதகான சபா மினி ஹாலில் "எண்ண அலைகள்' நாடகத்தை நடத்தினோம்.

1985-86-ல் சென்னை அகில இந்திய வானொலியில் "வசந்தகால மேகங்கள்', "எண்ணங்கள்' ஆகிய நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. நாடகத்துக்கு கதை, வசனம் எழுதி நடித்தேன். இதைத் தொடர்ந்து, 1986-87-ல் "வண்ணச் சுடர்', "பாரதி கண்ணம்மா', "ஓடி விளையாடு அப்பா', "எண்ண அலைகள்' ஒலிபரப்பப்பட்டன.

2008-09-ல் புதுவையில் கண்மணி கிரியேஷன்ஸ், புதுவை மாநில படைப்பாளிகள் கூட்டமைப்பு, தென்னிந்திய பண்பாட்டு மையம் ஆகியவை சார்பில் "வஞ்சனை செய்வாரடி', "நெஞ்சு பொறுக்குதில்லையே', "உன் கண்ணில் நீர் வடிந்தால்' ஆகிய நாடகங்களை அரங்கேற்றினோம். இந்த நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கினேன்.

இதைத் தொடர்ந்து, புதுவை ஆசிரியர் கலைக் குழு சார்பில் மேற்கண்ட மூன்று நாடகங்களையும் இயக்கினேன். இதே நாடகங்களை தஞ்சை காவிரி அன்னை கலை மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்தின.

2009-ல் திருச்சி ஆர்.ஆர். சபா, தென்னக பண்பாட்டு மையம் ஆகியவை சார்பில் ஆர்.ஆர். சபாவில், "காணி நிலம் வேண்டாம்' என்ற நாடகத்தை நடத்தினோம். இந்த ஆண்டில் (2010) திருச்சி ஆர்.ஆர். சபாவில் நடைபெற்ற "வேண்டும் வரம் தருவாள்' நாடகத்தில் சாரமா முனிவர் வேஷத்தில் நடித்தேன்.

"வானம் தொட்டுவிடும் தூரம்தான்' நாடகத்தை நடத்தினோம். இந்த நாடகத்தில் 8 நாயகிகள் நடித்தனர். இந்த நாடகத்தின் முக்கிய கதை, தனியார் பெண்கள் விடுதியில் பாதிக்கப்படும் 6 பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தது.

நாடகக் குழு பற்றி...

அன்னை ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் நாடகக் குழு சார்பில், இதுவரை 60 நாடகங்களை நடத்தியுள்ளோம். 20 நாடகங்களில் நடித்துள்ளேன். பெரும்பாலும், எல்லா நாடகங்களையும் கதை, வசனம் எழுதி இயக்குவேன். நாடகக் குழுவில் மொத்தம் 12 பேர் உள்ளனர்.

இவர்களில் சூறாவளி சீனிவாசன் கதாநாயகன் வேஷமும், நாகராஜன்- குணசித்திரம், வி.பி.சி. சேகர்- கதாநாயகன், வில்லன், துரை- குணசித்திரம், விஜயவாணன்- நகைச்சுவை, பரசை பாலா- குணசித்திரம், நகைச்சுவை, துரைராஜ்- குணசித்திரம், ரமேஷ்- நகைச்சுவை, ஜெயப்பிரகாஷ்- கதாநாயகன், செந்தில்- கதாநாயகன், வில்லன் என வேஷமிட்டு நடிக்கின்றனர். இந்த கதாபாத்திரங்களில் யாரேனும் விடுபட்டால் அன்று நான் அந்தப் பாத்திரத்தில் நடிப்பேன்.

எங்களது நாடகங்கள் அனைத்தும் சமூகத்தில் பெண்களின் நிலை, மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை பற்றித்தான் இருக்கும்.

நாடகங்களுக்கு மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது?

அன்றைய காலகட்டத்தில் சினிமா பரப்பு குறைவாக இருந்தது. அதனால், நாடகங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில், ஏராளமான திரைப்படங்கள், ஏராளமான திரையரங்குகள், நவீன தொழில்நுட்பம் என சினிமா பரப்பு விரிந்திருக்கிறது. இதனால், நாடகத்தின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது. சின்னத்திரை நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

உங்களுக்கு கிடைத்த விருதுகள்?

2009-ல் "நாடக மாமணி', "கலைக் காவலர்' விருதுகளும், "நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருதும்' வழங்கப்பட்டன.

2010-ல் "நாடகக் கலை அரசு' என்ற பட்டமும், "பேரறிஞர் அண்ணா விருது', "நாடகச் சிற்பி விருது', "சிறந்த நாடக இயக்குநர் விருது' போன்றவையும் வழங்கப்பட்டன. இந்த விருதை திரைப்பட நடிகர் திருச்சி அலெக்ஸ் வழங்கினார்.

இதுவரை நான் 15-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். என்றபோதும், விருதுகளைவிடவும் மக்களிடமிருந்து வரும் பாராட்டுகளையே பெரிய பரிசாகக் கருதுகிறேன்.

இளம் கலைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் நடத்தத் திட்டம் உள்ளது. ஆயுள்காலம் வரை நாடகத் துறையிலேயே பணியாற்ற விரும்புகிறேன்

சின்னத்திரை, குறும்படம்...?

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் "சவுந்தரவல்லி' தொடரில் ஊர் பெரிய மனிதராக நடிக்கிறேன். டூ லெட் என்ற குறும்படத்துக்கு கதை எழுதியுள்ளேன். இந்தக் குறும்படத்துக்கு இயக்கம், ஒளிப்பதிவு எனது சகோதரர் ஆர். ஸ்ரீதர். 15 நிமிஷம் வரை ஓடக் கூடியது.

ராசி திரைப்பட இயக்குநர் முரளி அப்பாஸ் கதை, வசனம் எழுதி இயக்கிய "நெய் பந்தம்' என்ற குறும்படத்தில் குணசித்திர வேஷத்தில் நடித்துள்ளேன். இந்த குறும்படம் 2011-ல் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com