ஆர்வம்: கேமிரா கிறுக்கர்கள்!

வாரக் கடைசியில் நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள்? பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவார்கள். ஜாலியாகப் பிக்னிக் போவார்கள். "தண்ணி' அடிப்பார்கள். சினிமாத் தியேட்டர்களில், பொது இடங்களி
ஆர்வம்: கேமிரா கிறுக்கர்கள்!
Published on
Updated on
3 min read

வாரக் கடைசியில் நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள்? பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவார்கள். ஜாலியாகப் பிக்னிக் போவார்கள். "தண்ணி' அடிப்பார்கள். சினிமாத் தியேட்டர்களில், பொது இடங்களில் கூச்சல் போட்டுக் கலாட்டா செய்வார்கள். இப்படித்தானே நினைக்கிறீர்கள்? உங்கள் நினைப்பைப் பொய்யாக்கும்விதத்தில் வாரக் கடைசியின் அதிகாலை நேரத்தில் கேமிராவும் கையுமாக கிளம்பிவிடுகிறார்கள், சென்னையைச் சேர்ந்த சில இளைஞர்கள்.

 "சென்னை வீக் எண்ட் கிளிக்கர்ஸ்' என்ற பெயரில் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகிறவர்கள்தாம் அவர்கள். வித்தியாசமான அந்த இளைஞர்களில் ஒருவரான பரணிதரனை கையும் கேமிராவுமாகப் பிடித்தோம்.

 பொறியாளரான பரணிதரன் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிகிறார்.

 ""இணைய தளத்தில் யாகூவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. யாகூவின் ஃபிளிக்கர்.காம் புகைப்படங்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட இணைய தளம். அதில் பல குழுக்கள் உள்ளன. நாங்கள் "சென்னை வீக் எண்ட் கிளிக்கர்ஸ்' என்ற பெயரில் ஒன்றாக இணைந்திருக்கிறோம். இதை முன்முயற்சி எடுத்து ஆரம்பித்தவர் நிக்கி என்பவர். இப்போது அருண், குருநாதன், அசோக் ஆகியோருடன் நானும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

 இந்தக் குழு முழுக்க முழுக்க புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்கள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் குழு. இந்தக் குழுவில் பல துறைகளில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். புகைப்படக் கலையைப் பற்றி அதிகம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். புரபஷனல் போட்டோகிராபர்கள் குறைவு'' என்கிறார் சிரித்துக் கொண்டே.

 வாரக் கடைசியில் எங்கே போய் படம் பிடிக்கலாம் என்பதை எப்படித் திட்டமிடுவீர்கள்?

 ஃபிளிக்கர்.காமில் இணைய தளம் மூலமாக டிஸ்கஷன் பண்ண முடியும். குழுவைச் சேர்ந்த நண்பர்கள் ஆளாளுக்கு ஓர் ஐடியா சொல்வார்கள். பலருடைய கருத்துகளையும் கேட்டு இறுதியில் ஒரு முடிவுக்கு வருவோம். சில வாரங்களில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வெளியூருக்குச் செல்லலாம் என்று முடிவெடுப்போம். பெரும்பாலும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை காலை 6.00 மணிக்கு இந்த இடத்தில் சந்திக்கலாம் என்று திட்டமிடுவோம். பின்பு அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு புகைப்படம் எடுக்கக் கிளம்புவோம். காலை ஆறு மணியிலிருந்து 9.30 மணி வரை படம் எடுப்போம். நாங்கள் படம் எடுப்பது பெரும்பாலும் திறந்த வெளியில் என்பதால் அதற்கு மேல் வெயிலில் படம் எடுத்தால் நன்றாக வராது. எனவே 9.30 மணியுடன் போட்டோ எடுப்பதை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவோம்.

 உங்களுடைய புகைப்படங்கள் சொல்லும் செய்தி என்ன?

 நாங்கள் பலவிதமான புகைப்படங்களை எடுக்கிறோம். ஒரு படம் ஏற்படுத்தும் உணர்வுகளும், செய்திகளும் எங்களுக்கு முக்கியமானவை. எங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர் அசோக் ஒருமுறை திருப்போரூரில் ஒரு புகைப்படம் எடுத்தார். ஊருக்கெல்லாம் துணி நெய்து தரும் ஒரு முதிய நெசவாளர் கோவணத்துடன் தறியில் வேலை செய்து கொண்டிருந்த காட்சியைப் பதிவு செய்தார். அதைப் புகைப்படத்தைப் ஃபிளிக்கரில் போட்டு வைத்தார். அந்தப் படத்தைப் பார்த்த மும்பையைச் சேர்ந்த ஒருவர் அந்த நெசவாளிக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார். இது எங்களை நெகிழ வைத்தது. நாங்கள் புகைப்படங்களை எடுப்பதற்கு முக்கிய காரணம் முதலில் எங்களுடைய அழகுணர்ச்சி. அதற்கடுத்து எங்களுடைய சமூக அக்கறை.

 முன்பின் தெரியாதவர்களைப் புகைப்படம் எடுத்தால் அடிக்க வரமாட்டார்களா?

 அதுபோல நிறையத் தகராறுகள் வந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைப்போம். மேலும் ஒருவரைப் படம் எடுக்க கேமிராவை அவர்கள் பக்கம் திருப்பியவுடனே முகத்தைச் சுளித்தார் என்றால் அவரைப் படம் எடுக்க மாட்டோம். சிலர் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பார்கள். அவர்களை மட்டுமே படம் எடுப்போம்.

 சென்னை பாரிமுனையில் ஒருமுறை போட்டோ எடுக்கச் சென்ற போது நடைபாதை வியாபாரிகள், நடைபாதையில் வசிப்பவர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். அவர்களை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்த அரசு நினைத்துக் கொண்டிருந்த சமயம் என்பதால் காவல்துறைக்காக அவர்களை நாங்கள் படம் எடுப்பதாக நினைத்து தகராறு செய்தார்கள். போட்டோ எடுக்கப் போய் ஒருமுறைபோலீசில் மாட்டிக் கொண்டோம். பாம்பன் பாலத்தைப் படம் எடுக்கத் திட்டமிட்டு அங்கே சென்றோம். ராமேஸ்வரத்திலிருந்து போலீஸ் அனுமதியுடன்தான் பாம்பன் பாலம் போனோம். படம் எடுத்தோம். திரும்பி வரும் போது போலீஸ் எங்களைப் பிடித்துக் கொண்டது. அந்தப் பகுதியில் அப்போது தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்ததாக போலீஸ் கருதியதால் எங்களைச் சந்தேகப்பட்டுப் பிடித்துவிட்டார்கள். பின்பு ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் போன் செய்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்புதான் எங்களை விடுவித்தார்கள். புகைப்படம் எடுக்கச் செல்லும் போது எந்தத் தகராறும் வரக் கூடாது

 என்பதற்காக கடுமையான ஒழுக்க விதிகளைப் பின்பற்றுகிறோம்.

 என்ன ஒழுக்க விதிகளா?

 போட்டோ எடுக்கும்போது புகைபிடிக்கக் கூடாது. மது அருந்திவிட்டு வரக் கூடாது. போட்டோ எடுக்கச் செல்லும் இடத்தில் பிளாஸ்டிக் பொருட்களைப் போடக் கூடாது. பெண்களைக் கிண்டல் பண்ணக் கூடாது. இப்படி நிறைய.

 வாரக் கடைசியில் இப்படி போட்டோ எடுக்க வெளியே கிளம்பிவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் திட்டமாட்டார்களா?

 அதையேன் கேட்கிறீர்கள்? மறுநாள் காலையில் போட்டோ எடுக்கப் போவதாக வீட்டில் சொல்லி அனுமதி வாங்கிவிட்டுத்தான் வருவார்கள். ஆனால் போட்டோ எடுத்து முடிப்பதற்குள்ளேயே ஏகப்பட்ட போன்கால்கள் வந்துவிடும். உடனே ஏதோ பேசி சமாளித்துவிட்டு, வீட்டுக்குப் போவதற்கு முன்பு காய்கறியெல்லாம் வாங்கிக் கொண்டு போய் கொடுத்துச் சமாளிப்பார்கள். இரண்டு நாள் வெளியூர் ட்ரிப் என்றால் போட்டோ எடுக்க வந்தவரை எங்களுடைய குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் கெடுப்பதாக போனில் திட்டுவார்கள்.

 தெருக் காட்சிகள் தவிர, வேறு என்ன புகைப்படம் எடுப்பீர்கள்?

 சேலையூரைத் தாண்டி காமராஜபுரத்தில் "கருணை இல்லம்' இருக்கிறது. அங்கு ஆதரவற்ற குழந்தைகள் இருப்பார்கள். நாங்கள் அங்கே சென்று அவர்களுக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களைப் படம் பிடித்து அன்றையப் பொழுதை அவர்களுடன் கழிப்போம். அதுபோல் நியூ லைஃப் ஆஸ்ரமத்தில் முதியவர்கள், ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். அங்கேயும் போய் அவர்களைப் படம் எடுத்து அவர்களுக்கு மதிய உணவு அளித்துவிட்டு வருவோம். எடுத்த புகைப்படங்களை பிரிண்ட் போட்டு அவர்களிடம் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை இன்னுமொரு போட்டோ எடுத்து வருவோம்.

 வேறு பொழுதுபோக்குகள் எவையும் இல்லையா?

 போட்டோ எடுப்பது கிறுக்குப் பிடித்த மாதிரி. எங்கள் குழுவில் பலர் என்னை கேமிராக் கிறுக்கன் என்றுதான் அழைப்பார்கள். என்னுடைய உண்மையான பெயரே பலருக்குத் தெரியாது. என்னைப் போலத்தான் எங்கள் குழுவில் பெரும்பாலோர் இருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.