"சாலையில் விபத்துகள் நடைபெறுகின்றன. அதனால் சாலையில் நடக்காமல் இருக்கிறோமா? அதுபோலத்தான் அணுமின்நிலையங்களும். உலகில் எங்கோ அணு உலை வெடித்துப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காக அணுமின் நிலையங்களே வேண்டாம் என்று சொல்வது தவறு' என்று பேசுபவர்களைப் பார்த்திருப்பீர்கள்.
"மின்சாரத் தேவை மிக அதிகமாக உள்ள நமது நாட்டில் அணுமின் நிலையங்களைத் தவிர்க்க முடியாது' என்று அடித்துப் பேசுபவர்களுக்கு இடையே, ""சாலை விபத்துகளையும் அணுமின் நிலையங்களினால் ஏற்படும் ஆபத்துகளையும் ஒப்பிட்டுப் பேசுவதே முதலில் தவறு. சாலை விபத்துகளில் பாதிப்படைவது மிகவும் குறைவான மக்களே. ஆனால் அணு மின்நிலையம் ஒன்று இருக்குமானால் அதனால் பாதிப்படைவது ஆயிரக்கணக்கான மக்கள்'' என்கிறார் கோ.சுந்தர்ராஜன்.
சென்னையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். அணு மின்நிலையங்கள் இல்லாமலேயே நாம் நம் மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்கிறார் அவர்.
மேலும் அவர், ""ஜப்பானில் அண்மையில் ஃபுகுஷிமாவில் நடந்த அணு உலை வெடிப்பைப் போலவோ, முன்பு ரஷ்யாவில் ஷெர்னோபிலில் நடந்த விபத்தைப் போலவோ நடந்தால்தான் அணுஉலைகளால் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அணுமின்நிலையத்தின் கழிவுகளால் எப்போதுமே அணுக்கதிர் வீச்சு ஏற்படும் அபாயம் உள்ளது. அணுக் கழிவுகளை மூன்றுவிதமாகப் பிரிக்கிறார்கள். அதிகக் கதிர்வீச்சு அபாயம் கொண்டவை, குறைந்த அளவில் கதிர் வீச்சு அபாயம் கொண்டவை, மத்திம அளவில் கதிர்வீச்சு அபாயம் கொண்டவை என்று பிரிக்கிறார்கள். இதில் குறைந்த கதிர்வீச்சு அபாயம் கொண்டவற்றைக் கடலில் கலக்கிறார்கள். மத்திம கதிர்வீச்சு அபாயம் கொண்ட கழிவுகளை சிலிக்கா பிளேட்டாக மாற்றி குளிர்சாதன வசதியுள்ள இடத்தில் பாதுகாக்கிறார்கள். அதிகக் கதிர்வீச்சு அபாயம் உள்ள கழிவுகளைப் பூமிக்கடியில் மிகவும் குளிர்ச்சியான கண்டிஷனில் பாதுகாக்கிறார்கள்.
அணு மின்நிலையக் கழிவுகளைக் கடலில் கலப்பதால் அதிலுள்ள அணுக்கதிர் வீச்சு கடலில் உள்ள சிற்றுயிர்களைப் பாதிக்கிறது. அவற்றை உண்டு வளரும் மீன்களைப் பாதிக்கிறது. மீனை உண்ணும் மனிதர்களையும் பாதிக்கிறது. எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், குழந்தையின்மை, பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறத்தல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவரின் சந்ததியினரும் உடற்குறைபாடுடன் பிறக்கும் நிலை உருவாகிறது.
கடலில் கலக்காவிட்டாலும் கூட அணுஉலை அமைந்துள்ள பகுதிகளில் கதிர் வீச்சு அபாயம் இருக்கிறது. அணு உலை வெடித்தால்தான் பாதிப்பு என்றில்லை, சாதாரண காலத்திலேயே பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே அணுஉலையில் விபத்து நடந்தால்தான் பாதிப்பு ஏற்படும் என்று நினைப்பது தவறு; அணுஉலை இருந்தாலே பாதிப்புதான்'' என்கிறார்.
""ஜெர்மனியில் 2022 ஆம் ஆண்டுக்குள் அங்கே உள்ள அணு
உலைகளை மூடப் போகிறார்கள். ஸ்விட்சர்லாந்தில் புதிய அணு உலைத் திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஜப்பானில் அணுஉலைகள் தேவையா? என்று மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். பல வெளிநாடுகளில் மக்கள் அணுஉலைகளின் பாதிப்பைத் தெரிந்து கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராடுகிறார்கள். அதனால் அங்கே அணுஉலைகளை நிறுவ முடிவதில்லை. அதனால்தான் விழிப்புணர்வு குறைவாக உள்ள நம் நாட்டில் அணுஉலைகளை உருவாக்க வெளிநாட்டுக்காரர்கள் வருகிறார்கள்.
நம் நாட்டிலேயே கூட, மக்கள் விழிப்புணர்வு அதிகமாக உள்ள கேரளத்தில் ஓர் அணுஉலை கூட இல்லை. மக்கள் அவற்றை எதிர்த்துப் போராடியதால் அணு மின்நிலையத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஜெய்தாபூரில் அணு மின்நிலையத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். மக்கள் திரண்டெழுந்து போராடியதால் அங்கே அணுமின்நிலையம் அமைப்பது இழுபறி நிலையில் இருக்கிறது.
அணுமின்நிலையத்தை ஆதரிப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படுவது எல்லாரும்தான். ஏழை, பணக்காரன் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாரும் பாதிக்கப்படுவோம். அப்புறம் ஏன் சிலர் அணுஉலைகள் அமைப்பதை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை'' என்கிறார் சீற்றத்துடன்.
""2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சுனாமி தாக்கி 6 மணி நேரங்கள் கழித்துத்தான் இந்தியாவை சுனாமி தாக்கியது. இருந்தும் நாம் உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்ய முடியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்தார்கள். நம்நாட்டில் சுனாமித் தாக்குதலுக்கு அணுமின்நிலையங்கள் உள்ளாகாது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?
மேலும் ஜப்பான் எப்போதுமே பூகம்பங்களால் பாதிக்கப்படக் கூடிய பூமி. அங்கே பேரிடர் மேலாண்மை மிகவும் வளர்ந்த நிலையில் உள்ளது. அங்கேயே சுனாமி தாக்குதலின் போது அணு உலைகள் வெடிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. நாம் எப்படித் தவிர்க்க முடியும்?
கூடங்குளம் அணு மின்நிலையம் கடல் மட்டத்தைவிட 7.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கூடங்குளம் உட்பட தமிழ்நாட்டில் அணு உலைகள் இருக்கும் பகுதிகளில் சுனாமி பாதிப்பு ஏற்படவே ஏற்படாது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?'' கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார் சுந்தர்ராஜன்.
நமது நாடு வளர்ந்து வரும் நாடு. இங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் மின்சாரம் ஓர் அடிப்படைத் தேவை. அனல் மின்நிலையங்களால் அந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. செலவும் அதிகம். எனவே அணு மின்நிலையங்களே வேண்டாம் என்று சொல்வது, தொழில் வளர்ச்சியை வேண்டாம் என்று சொல்வதுபோல் ஆகாதா? என்று கேட்டோம்.
""நமது இன்றையத் தேவை 1 லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மின்சாரம். நமது நாட்டில் உள்ள எல்லா அணுஉலைகளும் செயல்பட்டாலும் கூட 4 ஆயிரத்து 780 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிவதில்லை. மொத்தத் தேவையில் இது வெறும் 2.73 சதவீதம்தான். எனவே அணுமின்நிலையங்களால் மின் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூற முடியாது. அப்புறம் இன்னொன்றும் சொல்கிறார்கள். அணுமின்நிலையத்தில் மின்சாரம் தயாரிக்க மிகவும் குறைந்த செலவு ஆகும் என்று. இதில் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வது, அனல் மின்நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியையும், அணுமின்நிலையத்துக்குத் தேவையான யுரேனியத்தையும் மட்டும்தான். ஆனால் ஓர் அணுமின்நிலையத்தை ஏற்படுத்திவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய கழிவுகளைப் பாதுகாக்க எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிடவில்லை. ஓர் அணுஉலையின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள். அதற்குப் பிறகு அதைப் பாதுகாக்க வேண்டும். அணு உலையில் புளுட்டோனியம் என்ற கடுமையான கதிர்வீச்சுத் தன்மை கொண்ட பொருள் உருவாகிறது. அதன் கதிர்வீச்சுத் தன்மை பாதியாகக் குறைவதற்கே 2.5 லட்சம் ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என்கிறார்கள். அப்படியானால் அவற்றை அதுவரைக்கும் பாதுகாக்க எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். அப்படிப் பார்த்தால் அணுமின்நிலையங்களால் கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு அனல் மின் நிலைய மின்சார உற்பத்திச் செலவைவிட பல மடங்கு அதிகமாகிவிடும்.
இன்னொருபுறத்தில் தற்போது நம்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் அதைப் பயன்படுத்துகிற நம்மை வந்து சேர்வதற்குள் 27 சதவீதம் வீணாகிவிடுகிறது. இதைச் சரிசெய்தாலேயே எவ்வளவோ மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். அதுமட்டுமல்ல, நாம் பயன்படுத்துகிற குண்டு பல்புகளை மாற்றி எல்இடி பல்புகளைப் போட்டால் தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். இப்படிச் செய்தால் அணுமின்நிலையங்களின் மூலம் மின் உற்பத்தியே நமக்குத் தேவையில்லாமல் போகும். எல்இடி பல்புகள் அதிக விலை என்று சொல்வார்கள். ஆனால் அதிக அளவில் எல்இடி பல்புகளைத் தயாரிக்கும்போது விலை குறைந்துவிடும்'' என்கிறார் தெளிவாக.
வளர்ந்துவரும் மின்தேவையை ஈடு செய்ய இவை மட்டும் போதுமா? என்று கேட்டோம்.
""நிச்சயமாகப் போதாததுதான். நமது நாட்டில் 3 ஆயிரம் தாலுகாக்கள் உள்ளன. அவற்றில் 70 சதவீதம் தாலுகாக்களின் மக்களுக்கு 20 மெகாவாட் மின்சாரம் போதும். இந்த மின்சாரத்தைச் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்து பெறலாம். நிறைய காற்றாலைகளை நிறுவலாம். பயோ மாஸ் முறையில் பெறலாம். சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிக செலவு ஆகும் என்று சொல்வார்கள். உண்மைதான். ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ.15 கோடி ஆகும். ஆனால் ஒருமுறை அமைத்துவிட்டால், அவற்றைப் பராமரிக்கவோ, இயக்கவோ அதிகச் செலவில்லை. மேலும் அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும்போது அதன் செலவு குறையும். காற்றாலைகளில் முதலில் 200 கிலோவாட் மின்சாரத்தைத்தான் உற்பத்தி செய்ய முடியும். அப்படிப்பட்ட காற்றாலைகளைத்தான் பல இடங்களில் முதலில் நாம் நிறுவியிருக்கிறோம். இப்போது 2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலைகள் வந்துவிட்டன. எனவே பழைய காற்றாலைகளை எடுத்துவிட்டு அந்த இடத்தில் புதிய காற்றாலைகளை நிறுவினால் அதிக மின்சாரத்தைப் பெற முடியும். நீளமான கடற்கரைப் பகுதிகள் உள்ள நம்நாட்டில் காற்றாலைகளை அதிகம் நிறுவலாம். கடல் அலையின் மூலம் மின்சாரம் பெறும் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இவற்றையெல்லாம் செய்தால் அணுமின்நிலையங்கள் எதற்கு? சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நமது நாட்டு மக்களின் நல்வாழ்வைப் பற்றிக் கவலைப்படாமல் அணுஉலைகளை நியாயப்படுத்திக் கொண்டு இருப்பவர்களைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை'' என்கிறார் சுந்தர்ராஜன் உணர்வு பொங்க.