முகங்கள்: "அகா துகா'ன்னா என்ன அர்த்தம்?
திரைப்படம் ஒரு காட்சி ஊடகம். நாடு, மொழி எல்லைகளைக் கடந்து எல்லாரையும் ஈர்க்கும் ஊடகம். பிறமொழித் திரைப்படங்களில் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்தால், அந்தத் திரைப்படங்களை இன்னும் நன்றாக ரசிக்க முடியும


திரைப்படம் ஒரு காட்சி ஊடகம். நாடு, மொழி எல்லைகளைக் கடந்து எல்லாரையும் ஈர்க்கும் ஊடகம்.
பிறமொழித் திரைப்படங்களில் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்தால், அந்தத் திரைப்படங்களை இன்னும் நன்றாக ரசிக்க முடியும். அதற்காகத்தான் பிறமொழிப் படங்களில் ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடுகிறார்கள்.
எந்திரன், காவலன் உட்பட தமிழில் வெளிவந்த 22 திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டிலை உருவாக்கியிருக்கிறார் ரேக்ஸ். சென்ற ஆண்டு தேசிய விருது பெற்ற ஆறு திரைப்படங்களில் ஐந்து திரைப்படங்கள் அவர் சப் டைட்டில் போட்ட படங்கள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள அவர் இல்லத்தில் அவரைச் சந்தித்த போது சப் டைட்டில் போடும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்று கேட்டோம்.
""நான் அடிப்படையில் ஒரு காஸ்ட்யூம் டிசைனர். பல திரைப்படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்து கொண்டு இருந்தேன். எனது கணவர் ஹரிச்சரணும், நியூட்டனும் சேர்ந்து இயக்கிய தூவானம் படத்துக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தேன். அந்தப் படத்தைத் திரைப்பட விழாவுக்கு அனுப்ப முடிவு செய்தோம். அப்போது நானே அதற்கு சப் டைட்டில் போட்டேன். அந்தப் படத்தில் சினிமாட்டோகிராபராக இருந்த மது அம்பட், சப் டைட்டில் போடுவதில் உள்ள பல புதிய தொழில் நுட்ப விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்தார்'' என்கிறார் ரேக்ஸ்.
தூவானம் படத்துக்கு சப் டைட்டில் போட்ட பிறகு, பல படங்களுக்கு வாய்ப்புகள் தேடி வந்தனவா?
தூவானம் படத்துக்கு சப் டைட்டில் போட்டவுடன் எனக்கு இந்தத் துறையில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. சப் டைட்டில் போட்டால்தான் தமிழ்ப் படங்களைப் பிற மொழிக்காரர்கள் ரசிக்க முடியும். தமிழ்ப் படங்கள் உலக அளவில் போவதற்கும் சப் டைட்டில் அவசியம். எனவே நான் பல திரைப்பட இயக்குநர்களை நாடிச் சென்று சப் டைட்டில் போடுவதற்கு வாய்ப்புக் கேட்டேன். ஆனால் பெரும்பாலோர் வாய்ப்புக் கொடுக்கவில்லை. அதனால் நான் மனம் சோர்ந்து போய்விடவில்லை.
அதற்கு அப்புறம் "விண்ணைத் தாண்டி வருவாயா?' படத்துக்கு சப் டைட்டில் போட வாய்ப்புக் கிடைத்தது. இயக்குநர் கெüதம் மேனன் சார் வாய்ப்புக் கொடுத்தார். 2010 பிப்ரவரி மாதம் அதற்கு சப் டைட்டில் போட்டுக் கொடுத்தேன். அதற்குப் பின் எந்திரன் படத்துக்கு சப் டைட்டில் போடும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்குப் பின்தான் நான் கேட்காமலேயே பல வாய்ப்புகள் வந்து குவிந்தன. இப்போது 22 படங்களுக்கு சப் டைட்டில் போட்டுவிட்டேன்.
சப் டைட்டிலை உருவாக்க வேண்டுமென்றால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை வேண்டுமே?
ஆமாம். ஆங்கிலத்தில் புலமை ஏற்பட என் இளம் வயதுப் பின்னணி ஒரு காரணமாக இருந்தது. என்னுடைய அம்மா விஜி ஸ்ரீநிவாசன் மேக்மில்லன் பதிப்பகத்தில் எடிட்டராக சில ஆண்டுகள் வேலை செய்தார். அப்போது தினமும் ஓர் ஆங்கில நாவலை, கதைப் புத்தகத்தை என்னிடம் வாசிக்கக் கொடுப்பார். அதைப் படித்து அதிலுள்ள முக்கியமான சாராம்சமான விஷயங்களை அவரிடம் சொல்ல வேண்டும் என்பார். அந்தச் சிறுவயதில் எனக்கு அது மிகவும் சிரமமாக இருந்தது. அவ்வாறு படித்ததனால் எனது ஆங்கில அறிவு வளர்ந்தது. எனது ஆங்கிலப் புலமைக்கு இது ஒரு முக்கியமான காரணம். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் படித்ததனால் தமிழில் திறமை பெறுவது இயல்பாகவே வந்துவிட்டது.
நீங்கள் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். கிராமப்புறத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் வரும் மண்மணம் கமழும் உரையாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது சிரமம் தானே?
கொஞ்சம் சிரமம்தான். என்றாலும் சப் டைட்டில் போடும் போது படத்தின் உதவி இயக்குநர்கள் விளக்கிச் சொல்வார்கள். மேலும் படத்தில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் வரும் நடிகரிடமோ, நடிகையிடமோ தெரியாத சொற்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். உதாரணமாக சந்தானம் ஒரு படத்தில் "என்னை அகா துகான்னு நெனைச்சியா?' என்று பேசுவார். இந்த அகா துகாவுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. பின்பு சந்தானத்திடமே போனில் கேட்டேன். அதற்கு அவர் ஆங்கிலத்தில் யூஸ் அண்ட் த்ரோ என்று சொல்கிறோமே, அதுதான் தமிழில் அகா துகா என்றார். அதுபோல சப்ளாக் கட்டை என்று ஒரு படத்தில் ராமையாவைக் கூப்பிடுவார்கள். சப்ளாக் கட்டைக்கு ஆங்கிலச் சொல் என்ன என்று பல அகராதிகளைப் புரட்டிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் பல முயற்சிகளுக்குப் பின்பு கண்டுபிடித்தேன்,
"உட்டன் கிளாப்பர்' என்ற வார்த்தைதான் சப்ளாக் கட்டைக்கான ஆங்கிலச் சொல். இப்படிச் சிரமங்கள் இருந்தாலும் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ளலாமே?
நன்றாகத் தமிழும் ஆங்கிலமும் தெரிந்தால் சப் டைட்டில் துறையில் சாதிக்க முடியுமா?
தமிழும் ஆங்கிலமும் நன்கு தெரிய வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது. சப் டைட்டில் போடுவதில் நிறைய நுட்பங்கள் இருக்கின்றன.
உதாரணமாக சப் டைட்டில் போடும்போது அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய விஷயம், ஃபிரேம் கணக்கு. இத்தனை ஃபிரேமுக்குள் சப் டைட்டில் அடங்க வேண்டும். அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம், சப் டைட்டில் எளிதாக வாசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். படம் பார்ப்பவர் கஷ்டப்பட்டு சப் டைட்டிலை வாசித்துக் கொண்டிருந்தால் காட்சிகளில் ஒன்ற முடியாமற் போய்விடும். சப் டைட்டிலை மட்டும்தான் வாசித்துக் கொண்டிருப்பார். இரண்டு வரிகளுக்கு மேல் சப் டைட்டில் போகக் கூடாது. சப் டைட்டிலில் ஃபுல் ஸ்டாப் வைக்கக் கூடாது. ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் இடையே இரண்டு இடைவெளிகள் இருக்கக் கூடாது. இப்படி நிறைய நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றைக் கற்றுக் கொண்டால்தான் சாதிக்க முடியும்.
இந்த வேலையில் பெண்கள் ஈடுபடுவது கஷ்டமா?
இந்தத் துறையில் இரவு,பகல் பாராமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஒரு பெண் இந்தத் துறையில் இருப்பது சிரமமான ஒன்றுதான். என்னைப் பொறுத்த அளவில் எனது கணவரும், குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள்.
மறக்க முடியாத அனுபவம்?
நிறையச் சொல்லலாம். ஒன்றைச் சொல்கிறேன். நான் சப் டைட்டில் போட்ட "காவலன்' படம் சீனாவிலுள்ள ஷாங்காய் திரைப்பட விழாவுக்குத் தேர்வு பெற்றது. அதற்கு நான், விஜய் எல்லாரும் போயிருந்தோம். சீன ரசிகர்கள் அந்தப் படத்தை மிகவும் ரசித்தார்கள். விஜய்யை பாராட்டினார்கள். அதை என்னால் மறக்க முடியாது. வடிவேலுவின் நகைச்சுவையை நம் ரசிகர்களைவிட அதிக அளவில் ரசித்தார்கள். அதற்கு என் சப் டைட்டிலும் ஒரு காரணமாக இருக்கிறதல்லவா?
தொழில் நுட்பத்திலும் சிறந்த கதையமைப்பிலும் தமிழில் நல்ல திரைப்படங்களை எடுக்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் இந்தியாவின் திரைப்படங்கள் என்று சொல்லும்போது அதில் தமிழ்த் திரைப்படங்களின் பெயர் இருப்பதில்லை. இந்தக் குறையைப் போக்க நிறையப் படங்களுக்கு சப் டைட்டில் போட்டு உலகில் நடக்கும் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நான் படங்களுக்கு சப் டைட்டில் போடுவது மட்டுமின்றி, அவற்றைப் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் உதவுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...