மேடை: அன்புதான் நிரந்தரத் தீர்வு!
துணுக்குத் தோரணங்களாக பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கருவாகக் கொண்ட நாடகங்களுக்கு இடையில், மக்களுக்குப் பயன்படும் கருத்துகளைத் தாங்கிய வண்ணம் பல நாடகங்களும் தற்போது மேடையேற்றப்பட்டு வருகின்றன. இந்த வக


துணுக்குத் தோரணங்களாக பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கருவாகக் கொண்ட நாடகங்களுக்கு இடையில், மக்களுக்குப் பயன்படும் கருத்துகளைத் தாங்கிய வண்ணம் பல நாடகங்களும் தற்போது மேடையேற்றப்பட்டு வருகின்றன. இந்த வகையில், வைக்கம் முகமது பஷீரின் "சப்தங்கள்' நாடகமும், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய "சங்கீதப் பைத்தியம்' நாடகமும் "தியேட்டர் லேப்' குழுவினரால் சென்னை, அலையன்ஸ் ஃபிரான்கைஸில் அரங்கேற்றப்பட்டது.
உலகின் பல நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நேரமிது. ஆங்காங்கே கலவரங்கள். சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களின் புரட்சிகள். தங்கள் நாட்டை வளப்படுத்திய ஓர் இனத்தையே அழிக்கும் அரசாங்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரங்கேற்றப்பட்டிருக்கும் "சப்தங்கள்' நாடகம், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடகத்தின் இயக்குநரும் "தியேட்டர் லேப்' நாடகக் குழுவின் நிறுவனருமான ஜெயராவ், கூத்துப் பட்டறையின் வார்ப்பு! அவர் தன்னுடைய குழுவைப் பற்றியும் நாடகங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
வைக்கம் முகமது பஷீரின் பல படைப்புகள் இருக்க, "சப்தங்கள்' என்னும் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகத்தை தயாரித்தது ஏன்?
இந்தக் குறுநாவல் வெளிவந்த காலத்திலேயே கடும் விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது. ஏனென்றால் இதில் இருப்பவை அத்தனையும் உண்மையான பதிவு.
போருக்குப் பின்னால் தனக்கென எந்த உறவும் இல்லாத ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கைப் பதிவாக விரியும் "சப்தங்கள்' நாடகத்தில், யாருக்காக போர்கள் நடக்கின்றன? எந்த நாட்டிலாவது சாதாரண மக்கள் போரை விரும்புகிறார்களா? மனிதனால் உண்டாக்கப்பட்ட சாதி, மதம் அமைப்புகள் அவனுக்கு நிம்மதியைத் தருகின்றதா... என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை அலசுகிறது. ஒழுக்கத்தை வலியுறுத்தும் மனிதர்களிடம் வெளிப்படும் ஒழுங்கீனங்களையும், பாலியல் தொழிலைச் செய்தாவது தன் குழந்தையைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு தாயின் உன்னதமான தாய்மையையும் இதில் பார்க்கலாம்.
சமூகத்தை நோக்கிய ஒரு தனிமனிதனின் கேள்வியாக இந்த நாடகம் இருக்கும். ஒவ்வொரு தனி மனிதனும் சேர்ந்ததுதான் இந்தச் சமூகம் என்னும்போது, பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும், சக மனிதனின் அன்பான ஆதரவே அவனுக்கான மருந்தாக இருக்கமுடியும்.
உலகத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கெல்லாம் அன்புதான் தீர்வாக இருக்கமுடியும் என்பதை உலகுக்கு அறிவிக்கும் வகையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தற்கொலைக்குத் துணிந்த மனிதனை வைக்கம் முகமது பஷீர் ஆரத்தழுவிக் கொள்வார். அதைத்தான் நாடகத்தின் இறுதிக் காட்சியாகவும் வைத்தேன். அதிகார மையங்களில் இருப்பவர்களுக்கு இந்த நாடகத்தின் கரு எட்டவேண்டும் என்பதுதான் இந்த நாடகத்தின் நோக்கம்.
வைக்கம் முகமது பஷீராக நடிப்பதற்கு எழுத்தாளர் பாரதி மணியை தேர்வு செய்தது எப்படி?
பாரதி மணி எங்களுக்கெல்லாம் கலைத் தந்தை. அவரின் எழுத்து ஆளுமையும் நாடகத் துறையில் அவருக்கு இருக்கும் அனுபவமும் முகமது பஷீருக்கும் அவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையும்தான் நாடகத்தில் அவர் பஷீராகத் தோன்றியதற்குக் காரணம். பஷீர் என்றதும் எங்களின் நினைவில் பாரதி மணிதான் வந்தார். இந்தத் தேர்வில் எங்களுக்குள் இருவேறு கருத்துகளே ஏற்படவில்லை.
பஷீரின் எழுத்துகளை அப்படியே நாடகத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறீர்களா, உங்களுடைய தனிப்பட்ட சிந்தனைகளையும் புகுத்தியிருக்கிறீர்களா?
வைக்கம் முகமது பஷீர் இந்தக் குறுநாவலை எழுதிய காலக்கட்டம் வேறு. அப்போதெல்லாம் புவி வெப்பமடைவது தொடர்பான விழிப்புணர்வெல்லாம் இல்லை. இன்றைய சூழ்நிலைக்கேற்ப, ஒவ்வொரு மனிதனுக்கும் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் பங்கிருப்பதைப் பற்றியும் அடுத்த தலைமுறைக்கு இந்த உலகத்தை பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் கடமைகளைப் பற்றியும் சில வசனங்களில் கொண்டுவந்திருப்பேன்.
கனமான கருத்துகளைச் சொல்லும் நாடகத்தோடு நகைச்சுவை நாடகத்தையும் மேடையேற்றியது ஏன்?
பம்மல் சம்பந்த முதலியாரின் "சங்கீதப் பைத்தியம்' நாடகம் கிண்டலுடன் கூடிய நகைச்சுவை நாடகம். இனிமேல் நமது ராஜாங்கத்தில் இருக்கும் மக்கள் தங்களுக்குள் இசையின் மூலமே சம்பாஷிக்க வேண்டும் என்று ராஜா உத்தரவிடுகிறார்.
இதன் விளைவாக நாட்டு மக்களிடம் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன, மக்களின் அன்றாட வாழ்க்கை, தொழில் போன்ற விஷயங்களை இது எப்படியெல்லாம் பாதிக்கிறது? என்பதை நகைச்சுவையாகச் சொல்லும் நாடகம். அரசாங்கத்தின் அறிவிப்புகள் மக்களை எப்படி அலைகழிக்கின்றன என்பதை உணர்த்தும் நாடகம். சிரிப்போடும் சிந்திக்க வைக்கமுடியும் என்பதை விளக்கவே இந்த நாடகம்.
உங்களின் குழுவுக்கு "தியேட்டர் லேப்' என்று பெயர் வைத்திருக்கிறீர்களே? உங்களின் குழு பரிசோதனைக் கூடமா?
எங்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தியான நடிப்பு வருவதற்கான சுய பரிசோதனைக் கூடம்தான் எங்களின் அமைப்பு. எங்கள் குழுவைத் தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கும் நாடகத்தில் பங்கேற்பதற்கு நடிப்பு, வசன உச்சரிப்பு, போன்ற பயிற்சிகளை அளிக்கிறோம்.
மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் அவர்களின் பிரச்னைகளை நாடகங்களின் மூலம் வெளிப்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறோம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னால் இயன்றதை இந்தச் சமூகத்திற்குச் செய்யவேண்டிய கடமைகள் உண்டு என்பதை எங்களின் படைப்புகள் மூலம் புரியவைக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...