வாய்ப்பு: திறமையைத் தேடி வலைவீச்சு!
யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? கம்ப்யூட்டர் என்ஜீனியராக இருப்பார். கர்நாடக சங்கீதத்தில் நிறையத் திறமை இருக்கும். டாக்டராக இருப்பார். குறும்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் இருக்கு


யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? கம்ப்யூட்டர் என்ஜீனியராக இருப்பார். கர்நாடக சங்கீதத்தில் நிறையத் திறமை இருக்கும். டாக்டராக இருப்பார். குறும்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். சமையற்காரராக இருப்பார். எப்படியும் நடிகனாக வேண்டும் என்ற லட்சிய வெறியோடு இருப்பார். ஆனால் இப்படிப் பலரிடமும் உள்ள திறமைகள் பல சமயங்களில் வெளியுலகுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.
பாடும் திறமை அதிகமுள்ள பலர் யாருக்கும் தெரியாமல் பாடல்களை முணுமுணுப்பதோடு தங்கள் திறமையை முடக்கிக் கொண்டு விடுகிறார்கள். இப்படி திறமைகள் இருந்தும் பளிச்சிட முடியவில்லையே என்று வருந்துபவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தேடித்தரும் விதமாக ம்ஹ்ஜ்ங்க்ஷள்ங்ழ்ண்ங்ள்.ஸ்ரீர்ம் என்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார் சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த வாசுதேவன். அவரிடம் இந்த இணையதளத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது? என்று கேட்டோம்.
""இப்போது வெளிநாடுகளில் வேலை கிடைத்து அங்கே நிறையப் பேர் வேலை செய்கிறார்கள். இங்கே இருக்கும்போது அவர்கள் முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்றிருப்பார்கள். நல்ல பாடும் திறமை பெற்றிருப்பார்கள். நன்றாக ஓவியம் வரைவார்கள். வீடியோ எடுப்பார்கள். ஆனால் வெளிநாடு சென்றதும் தங்களுடைய திறமைகளை எல்லாம் வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் அப்படியே முடங்கிவிடுவார்கள். தங்கள் வீடு உண்டு வேலையுண்டு என்று இருப்பார்கள். ஏனென்றால் அங்குள்ள சூழ்நிலை அந்த மாதிரி. அப்படிப்பட்டவர்கள் அவர்களுடைய திறமையை வெளிக்காட்டும்விதமாக வீடியோ எடுத்து அனுப்பினால் அதை எங்களுடைய இணைய தளம் மூலமாக உலகெங்கும் தெரியுமாறு ஒளிபரப்புகிறோம்.
அதுபோல நமது கிராமங்களில், சிறுநகரங்களில் பல்வேறு திறமையுள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக நல்ல நடிப்புத் திறமை உள்ள ஒருவர் திண்டிவனத்திற்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக அவருக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் சென்னையில் நடிப்புத் தேர்வு, குரல் தேர்வு நடத்த இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவரால் அவர்கள் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் அங்கே வரமுடியாமற் போய்விட்டது என்றால் அதனால் அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு கிடைக்காமற் போய்விடுகிறது.
சிலர் சினிமா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக அவர்கள் பல்வேறு பயிற்சிகளை எடுத்துக் கொள்வார்கள். குறும்படம் எடுத்துப் பயிற்சி பெறுவார்கள். ஆனால் அதைப் பலரிடமும் போட்டுக் காட்டும் சூழ்நிலை இல்லாமல் இருக்கும்.
மிமிக்ரி, யோகாசனம், வாய்ப்பாட்டு, இசைக் கருவிகளை இசைப்பது எனப் பல்வேறு கலைகளிலும் திறமையுள்ளவர்கள் அந்தத் துறையில் முன்னேற முடியாமல் பல்வேறு சூழ்நிலைகள் தடுத்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நான் இந்த இணையதளத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்தேன். எங்களுடைய இணைய தளத்தை ஒரு நாளில் 800 க்கும் அதிகமானவர்கள் பார்க்கிறார்கள். கடந்த ஆறுமாதத்தில் மட்டும் 2 லட்சம் பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். என்கிறார் வாசுதேவன்.
இணையதளத்தின் மூலம் வாய்ப்புகளை எப்படி ஏற்படுத்தித் தர முடியும்? என்று கேட்டோம்.
""இணைய தளத்தின் மூலம் வாய்ப்புகளை நேரடியாக ஏற்படுத்தித் தர முடியாது. எங்களுடைய இணைய தளத்தில் பங்குபெற்ற ராஜ்கல்கி என்பவர் நீண்ட நாளாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு இருந்தார். எங்களுடைய இணைய தளத்தில் பங்கு பெற்ற பின்பு அவருக்கு அந்த வாய்ப்புத் தேடி வந்துள்ளது. அதுபோல எங்களுடைய இணைய தளம் சார்பாக நடந்த விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்குக் கச்சேரியில் பாட வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
யு.கே. முரளி குழுவின் கச்சேரியில் அவர்கள் பாடப் போகிறார்கள்'' என்கிறார் பெருமையுடன்.
விழா நடத்தினீர்களா என்ன ? என்று கேட்டோம்.
""நாங்கள் எங்களுடைய இணைய தளத்தில் பலவிதமான திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் நிகழ்ச்சிகளை வைத்திருக்கிறோம். கர்நாடக இசை, இந்துஸ்தானி இசையில் திறமையுள்ளவர்கள் பங்கெடுக்கும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். அதற்கு வெப்போத்சவம் என்று பெயர். பாரம்பரிய இசை தவிர பிற இசைகளில் திறமையுள்ளவர்கள் பங்குபெறும் மியூசிக் மேளா என்பது இன்னொரு நிகழ்ச்சி.
இதில் 185 பேர் பங்கேற்றார்கள். அதற்கு அடுத்து குறும்படம் எடுப்பவர்களுக்கான போட்டியையும் அறிவித்திருந்தோம். இதுதவிர வெப்சீரியல் எனப்படும் இரண்டு மூன்று எபிசோடுகள் வரக்கூடிய இணையதளத் தொடருக்கான போட்டியையும் வைத்திருந்தோம். இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள். இந்தப் போட்டிகளில் வீட்டில் இருந்தபடியே பங்கேற்க முடியும். அதாவது பாடும் திறமையுள்ள ஒருவர் தான் பாடுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் எங்களுடைய இணைய தளத்தில் ஒளிபரப்புவோம்.
அதுபோல குறும்படம் எடுப்பவர் தனது குறும்படத்தை எங்களுக்கு டிவிடியாகவோ, இணையதள லிங்க்காகவோ அனுப்பி வைத்தால் அவற்றை எங்களுடைய இணைய தளத்தில் ஒளிபரப்புகிறோம். இப்படிப் பங்கேற்றவர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுடைய திறமையை நடுவர்கள் முன்னிலையில் நேரில் காட்டச் செய்கிறோம். நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பரிசுப் பணமும், சான்றிதழும் வழங்கிக் கெüரவிக்கிறோம். அந்த விழா கடந்த மாதம் 19 ஆம் தேதி சென்னை தியாகராய நகர் கர்நாடகா பள்ளி அரங்கில் நடைபெற்றது.
அதில் புல்லாங்குழல் நிபுணர் கே.பாஸ்கரன், தொலைக்காட்சி, திரைப்பட நடிகை பாத்திமாபாபு, டைரக்டர் அனந்தநாராயணன், கவிஞர் பிறைசூடன், திரைப்பட ஒளிப்பதிவாளர் கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தமது துறைசார்ந்த அறிவுடன் நிகழ்ச்சியில் போட்டியில் கலந்து கொண்டவர்களின் குறும்படங்கள், வெப் சீரியல்கள், இசைத்திறமை போன்றவை பற்றிய தங்களுடைய விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் திறமையான பலர் - வெளியுலகிற்குத் தெரியாத பலர் - அத்துறை சார்ந்த நிபுணர்களின் பார்வையில் பட்டார்கள். அதுமட்டுமல்ல, துறைசார்ந்த நிபுணர்களின் தொடர்பும் அவர்களுக்குக் கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் அவர்கள் முன்னேற ஒரு வாய்ப்புக் கிடைத்தது'' என்கிறார் மகிழ்ச்சி பொங்க.
உங்களுடைய நிகழ்ச்சிகளில் எந்த வயதுப் பிரிவினர் அதிகம் கலந்து கொள்கிறார்கள்? என்று கேட்டோம்.
""எல்லா வயதுப் பிரிவினரும் கலந்து கொள்கிறார்கள் என்றாலும் இளைஞர்கள் அதிகம். அதிலும் சிறுவர்கள் அதிகம். சென்னை பம்மல் பகுதியில் உள்ள சரவணமூர்த்தியின் மகன்கள் - யோகாசனக் கலையில் திறமை பெற்ற இரட்டையர்கள் ஹேமந்த்குமார், ஹரீஷ்குமார் இருவரும் எங்களுடைய இணைய தளத்தின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தார்கள். இன்னும் கராத்தேயில் திறமைவாய்ந்த சிறுவர்கள் ஜோதிசாய்ராஜா, சஞ்சய் குமார் இருவரும் எங்களுடைய இணையதளத்தின் இளம் நட்சத்திரங்கள்.
இன்னும் இதுபோல நிறையத் திறமையுள்ளவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் '' என்று பெருமையுடன் சொன்ன வாசுதேவனிடம், "சாஃப்ட்வேர் கம்பெனியில் செய்த வேலையை விட்டுவிட்டு இத்துறையில் இறங்கியுள்ளீர்களே, வருமானத்துக்கு என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டோம்.
""இணைய தளத்தை அதிகம் பேர் பார்ப்பதால் விளம்பரங்கள் கிடைக்கின்றன. அதை வைத்துச் சமாளிக்கிறோம்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...