உழைப்பாளர் தினம்: கையும் காலும்தானே மிச்சம்!
""வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா; தடைக் கல்லும் உனக்கொரு படிக் கல்லப்பா...'' - என்று தொடங்கும் மூன்று நிமிடப் பாட்டு முடிவதற்குள், கல் உடைக்கும் வேலை செய்யும் கதாநாயகன் மிகப் பெரிய கிரானைட் நிறுவன


""வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா;
தடைக் கல்லும் உனக்கொரு படிக் கல்லப்பா...''
- என்று தொடங்கும் மூன்று நிமிடப் பாட்டு முடிவதற்குள், கல் உடைக்கும் வேலை செய்யும் கதாநாயகன் மிகப் பெரிய கிரானைட் நிறுவனத்தின் முதலாளி ஆகிவிடுவார். திரைப்படத்தில் மட்டுமே சாத்தியமாகக் கூடும் சாதனை இது. நிஜத்தில், காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக விவசாயக் கூலிகளாக இருக்கும் பலருக்கு "காடு வெளைஞ்சென்ன மச்சான்; நமக்கு கையும் காலும்தானே மிச்சம்' என்ற பாடல்தான் நிரந்தரப் பாட்டாக இருக்கின்றது. சுரங்கத் தொழிலாளிகளாகவும் தீப்பெட்டித் தொழிற்சாலையிலும் தேயிலைத் தோட்டத்திலும் தினம் தினம் பட்டுப் போய்க்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் எத்தனையோ பேர். கல் குவாரிகளிலும், பண்ணைகளிலும் வேலை செய்யும் கொத்தடிமைகள் எத்தனையோ பேர். இப்படிப்பட்ட தொழிலாளிகளுக்கு முறையான வருமானமோ சலுகைகளோ மருத்துவ வசதிகளோ எதுவும் கிடைப்பதில்லை. அரசாங்கமும் அவர்களின் தொழிலை முறைப்படுத்துவதற்கு முன்வருவதில்லை. முதலாளிகளுக்கு ஆதரவாகவே பெரும்பாலும் அரசாங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
""முறைசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு அவர்களின் பணி சார்ந்த முன்னெச்சரிக்கை சாதனங்கள் வழங்கப்படுவதில்லை. கட்டட வேலை செய்பவர்களில் பெரும்பான்மையானோர் ஆயுள் காப்பீடு கூட செய்யப்படாமல்தான் பணியில் இருக்கிறார்கள். கூலித் தொழிலாளிகள், பட்டறைகளில் பணிசெய்பவர்களிலிருந்து சிறு தொழிற்சாலைகள் வரை பணியிலிருப்பவர்களுக்குப் பணியிடத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலையே நீடிக்கிறது. எதிர்பாராதவிதமாக இவர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டாலோ நோய்வாய்ப்பட்டாலோ இ.எஸ்.ஐ. போன்ற வசதிகள் கூட பெரும்பான்மையான தொழிலாளிகளுக்குக் கிடைப்பதில்லை'' என்கிறார் வண்ணாரப்பேட்டையில் இரும்பு கிரில் தயாரிக்கும் தொழிலாளி கிச்சா.
"உழைப்பவனின் வியர்வை காய்வதற்குள் அவனுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்' என்பார்கள். ஆனால் நடைமுறையில் பாலிஷ் பட்டறைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குப் பெரும்பாலும் முறையான ஊதியமே கிடைப்பதில்லை. இந்த வேலை செய்யும் தொழிலாளிகளிலேயே மாதச் சம்பளம் பெறும் தொழிலாளிக்குதான் நிரந்தர வருவாய் வாங்குகிறோம் என்ற திருப்தி இருக்கும். வாரக் கூலிக்கு வேலை செய்பவர்களுக்கு "முன் பணமாக' வாங்கிய தொகையைக் கழிப்பதற்கே காலம் சரியாக இருக்கும்...'' என்றார் யானைகவுனி பகுதியில் ஸ்டீல் பாலிஷ் பட்டறையில் வேலை செய்யும் ரமேஷ்.
""அஞ்சாவது வகுப்பிலேயே அஞ்சு வருஷம் படிச்சும் தேறலை. "எந்த வேலையும் தெரியாதவனை மூட்டை தூக்கத்தான்டா லாயக்கு'ன்னு சொல்வாங்க. எனக்கும் இந்த மூட்டை தூக்கும் வேலைதான் சரியா அமைஞ்சது. ஆனா மூட்டை தூக்குறது ஒண்ணும் அப்படியொண்ணும் ஈஸியான வேலை இல்லைங்கிறது என்னோட முப்பது வருஷ அனுபவத்துல எனக்குப் புரிஞ்சது. ஒருநாளைக்கு ரூபாய் 200, 300-ன்னு கிடைக்கும். சில நேரங்களில் எதுவுமே கிடைக்காது. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணுக்கு திருமணம் செய்துட்டேன். பையன் எலக்ட்ரிக் வேலை செய்றான். கை, கால் நல்லா இருக்கிற வரைக்கும்தான் வேலை செய்யமுடியும். அதனால எந்தக் கெட்ட பழக்கமும் எனக்கில்லை. 75 கிலோ மூட்டையை தூக்கணும்னா உடம்பிலேயும் மனசிலேயும் தெம்பு இருக்கணும். அது என்கிட்ட இருக்கு'' என்கிறார் பால்ராஜ்.
""என்னோட பத்தொன்பது வயசிலேயே சித்தாள் தொழிலுக்கு வந்துட்டேன். கிட்டத்தட்ட ஏழு வருஷம் இந்தத் தொழில்தான் செஞ்சிட்டிருக்கேன். இனியும் இந்தத் தொழிலை நம்பித்தான் இருக்கேன். என்னோட கணவரும் இந்தத் கட்டட தொழிலில்தான் பெரியாளா வேலை பார்க்கிறார். சித்தாளுக்கு ஒரு நாளைக்கு கூலி ரூபாய் 250. வேலை நிரந்தரமா இருக்கும்ணு சொல்லமுடியாது. பல இடங்களில் இந்தக் கூலியை கொடுப்பதிலும் சிக்கல் இருக்கு. கட்டடத் தொழிலாளர் சங்கத்தில் பதிவு செஞ்சிருக்கோம். ஆயுள் காப்பீடு எடுத்திருக்கோம். பையனையும் பொண்ணையும் நல்லா படிக்கவைக்கணும். இந்தத் தொழிலுக்கு அவங்க வரக்கூடாதுன்னு நினைக்கிறோம்...'' என்றார் பாரதி.
""முதல்லே சின்னதா போண்டா, வடை சுட்டு வித்திட்டிருந்தேன். 1992-லிருந்து கட்டை வண்டி இழுக்கும் தொழிலைச் செஞ்சிட்டு வர்றேன். சிமெண்ட் ஷீட், ஃபிளைவுட், பிளாஸ்டிக் குழாய்கள் போன்றவற்றை வண்டிகளில் வைத்து கிழக்கு தாம்பரத்தைச் சுற்றியிருக்கும் இடங்களுக்கு லோட் ஏற்றிக் கொண்டு செல்வேன். எனக்கு 60 வயசுக்கு மேல் ஆகிறது. ஒரு பெண்ணை திருமணம் செஞ்சு கொடுத்திட்டேன். பையன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். வண்டியில் ஒரு டன் வரை பாரம் ஏற்றமுடியும். அப்படி ஏற்றும்போது யாராவது ஒருவரை உதவிக்கு வைத்துக் கொள்வேன். நம்ப கையைக் கொண்டு உழைச்சாதான் கஞ்சி. அதனால எவ்வளவு காலம் ஓடுமோ வண்டி ஓடட்டும்ணு இருக்கேன்...'' என்கிறார் பாரவண்டி இழுக்கும் ஜனார்த்தனன் செட்டியார்.
படித்ததின் பலனாக வேலை செய்பவரை விட, உடல் உழைப்பு செய்பவர்களை இந்தச் சமூகம் கீழாகத்தான் பார்க்கிறது. நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளின் தயாரிப்புக்கும் பின்னால் ஓர் உழைப்பாளியின் வியர்வை சிந்திய உழைப்பு இருக்கிறது என்பதை இந்தச் சமூகம் உணர்ந்துகொள்வதில்லை. இந்தப் புரிதல் இல்லாமல் நாம் நாகரிகத்தில் மேம்பட்டுவிட்டோம் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இல்லை. ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...