நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முயற்சி: உங்களுக்காகவே ஒரு நோட்டு!

அண்மையில் பள்ளி மாணவர் ஒருவர் அவர் கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் அவரது புகைப்படத்தை அட்டை படமாக வைத்திருந்தார். இதை எப்படி செய்தீர்கள்? என்று ஆச்சரியமாகக் கேட்டோம். அதற்கு அவர் மூன்று கல்லூ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:33 am

எம். ஆனந்த்

அண்மையில் பள்ளி மாணவர் ஒருவர் அவர் கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் அவரது புகைப்படத்தை அட்டை படமாக வைத்திருந்தார். இதை எப்படி செய்தீர்கள்? என்று ஆச்சரியமாகக் கேட்டோம். அதற்கு அவர் மூன்று கல்லூரி மாணவர்கள் இதைச் செய்து தருவதாக கூறினார். அவர் கூறிய கல்லூரி மாணவர்களைத் தேடிப்பிடித்தோம்.

கோவையைச் சேர்ந்த ஆர்.சந்தோஷ் கிருஷ்ணன், வி.சான்டோ என்கிற வி.சந்தோஷ், கே.முரளி என்னும் மூன்று இளைஞர்கள் தான் இதை செய்து வருகின்றனர்.

படிக்கும் போது ஒரு நல்ல மனநிலை வேண்டும். அது சார்ந்த எல்லா விஷயங்களும் நமக்கு பிடித்ததாக இருக்கும் பட்சத்தில் அந்த மனநிலை அமையும். பலருக்கு மத்தியில் நாம் மட்டும் ஏதோ ஒரு வகையில் தனித்து தெரிய வேண்டும் என்பது தற்போதைய இளையத் தலைமுறையினரின் விருப்பம். இதன் விளைவுதான் நோட்டுப் புத்தகத்தில் தனது புகைப்படத்தை அட்டைப் படமாக்கிய வித்தியாசமான முயற்சி.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியலை அண்மையில் முடித்திருக்கிறார் சந்தோஷ். கற்பகம் பல்கலைக்கழகத்தில் இவரது நண்பர் முரளி பொறியியல் முடித்துள்ளார். மற்றொருவரான சான்டோ, பி.எ.எஸ்.ஜி. கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் இறுதியாண்டு படித்து வருகிறார். மூவரும் சிறு வயது முதலே நண்பர்கள். மூவரும் பள்ளி நாட்களில் நோட்டு புத்தகத்தில் முதல் பக்கத்தில் 365 சிறிய வட்டங்களை வரைந்து வைப்பார்களாம். அன்றைய தினம் மகிழ்ச்சியாக அமைந்தால் சரி என்ற குறியீட்டை "டிக்' அடித்துக்கொள்வார்கள். துக்கமான தினமாக அமைந்தால் "ராங்க்' என்று குறித்துக் கொள்வார்களாம். ஆண்டு இறுதியில் ஒருவருடத்தில் எத்தனை நாள் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதைக் குறியீடுகளை எண்ணித் தெரிந்து கொள்வார்களாம். அதுமட்டுமல்ல. தங்கள் நோட்டு புத்தங்களில் பைண்டிங் செய்யும்போது முதல் பக்கத்தில் தங்களுக்குப் பிடித்த படங்களையும் சேர்த்து பைண்டிங் செய்வார்களாம். படிக்கத் துவங்குவதற்கு முன்பு முதல் பக்கத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த படங்களைப் பார்த்த பின்பு படிக்கத் தொடங்குவார்களாம். அது அவர்களுக்குப் படிப்பில் ஓர் உற்சாகத்தையும் நல்ல படிக்கும் மனநிலையையும் அமைத்து கொடுத்தது என்கிறார்கள்.

தங்களுக்கு ஏற்பட்ட நல்ல மனநிலை, தங்களைப் போன்று மற்ற மாணவர்களுக்கும் படிக்கும்போது அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் கோவை 100 அடி சாலையில் ஒரு சிறிய அறையில் 4 கணினிகளை வைத்துக் கொண்டு "யூ டிசைன்' என்ற பெயரில் தங்களின் பணியை ஆரம்பித்தனர். டிஜிட்டல் கேமிராவில் எடுக்கும் படங்களை இவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்தால் அந்தப் படங்களைப் ஃபோட்டோஷாப் மூலம் மிகவும் மெருகுபடுத்தி நமக்கே திருப்பி அனுப்பிவைப்பார்கள். பார்ப்பதற்கு ஆச்சரியமாக தோன்றும். அவ்வளவு நேர்த்தியாக அதை அழகூட்டியிருப்பார்கள். ஆர்டர் கொடுக்கும் பட்சத்தில் உங்கள் நோட்டு புத்தகம், ஆட்டோகிராப் புத்தகம், டி-ஷர்ட் உள்ளிட்டவைகளில் நீங்கள் சொல்லும் படங்கள், இயற்கை காட்சிகள், விளையாட்டு வீரர்களின் படங்களைப் போட்டு தருகிறார்கள். கல்லூரியில் சில மாணவர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இருப்பார்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ள அவர்களின் டைரிகளில் அந்தக் குழுவின் படங்களைப் பதித்து தருகிறார்கள். தற்போது இதுவே இவர்களுக்கு ஒரு தொழிலாக அமைந்துள்ளது. வரும்காலத்தில் முப்பரிமாண படங்களையும் பதித்துக் கொடுக்க திட்டங்களைத் தீட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.