ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்: 13

சேலம் மாநாட்டில் கட்சி பெயர் மாற்றம் பெற்ற பிறகு கூடிய முதல் திராவிடக் கழக மாநில மாநாடு 1945- இல் செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருச்சி புத்தூரில் மாபெரும் பந்தல் போட்டு ஏற்பாடாயிற்று. தலைவர்கள் முதல்
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்: 13
Published on
Updated on
4 min read

சேலம் மாநாட்டில் கட்சி பெயர் மாற்றம் பெற்ற பிறகு கூடிய முதல் திராவிடக் கழக மாநில மாநாடு 1945- இல் செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருச்சி புத்தூரில் மாபெரும் பந்தல் போட்டு ஏற்பாடாயிற்று. தலைவர்கள் முதல் நாளே வந்து சேர்ந்தனர். டி.பி. வேதாசலம் மாளிகையில் பெரியார், அண்ணா, சம்பத் ஆகியோர் தங்கி இருந்தனர். அன்று திருச்சியில் கடும் மழை பெய்தது. மாநாட்டுப் பந்தல் ஒழுக ஆரம்பித்தது. தங்கி இருந்த கழகக் குடும்பத்தவர்கள் குழந்தை குட்டிகளுடன் அங்குமிங்குமாக ஓட ஆரம்பித்து, மழையால் திடலே சேறும் சகதியுமானது. தண்ணீர் தெப்பமாக நின்றது.

எப்படியும் மாநாட்டை நடத்தியாக வேண்டுமென்று பெரியார் கட்டளையிட்டுவிட்டார். டி.பி. வேதாசலம், அன்பில் தர்மலிங்கம், துறையூர் அழகுமுத்து, பிரான்சிஸ் தவமணி ராஜன், கருணாநந்தம், அரங்கண்ணல், பராங்குசம், திருச்சி ராஜி போன்ற தோழர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மண்வெட்டி, கடப்பாறை முதலிய கருவிகளுடன் திடலில் இருந்த தண்ணீரை வடிக்கத் தீவிரமாக இறங்கினர். எம்.ஆர்.ராதா இடுப்பு வேட்டியைக் கழற்றி தலைப்பாகை கட்டிக் கொண்டு அரைக்கால் சட்டையில் மண்வெட்டியுடன் இறங்கினார்.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு பெரியார், மணியம்மை, அண்ணா, சம்பத் ஆகியோரும் அங்கு வந்து விட்டனர். மேடு பள்ளம் நிறைந்த சமுதாயத்தைச் செப்பனிடும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்த பெரியார், அதே ஆர்வத்தோடு மாநாட்டு மைதானத்தையும் சமப்படுத்துவதில் மண்வெட்டியுடன் இறங்கினார். அண்ணா, சம்பத், மணியம்மை எல்லோருமே மழையில் நனைந்தபடி மைதானத்தைத் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற்றது. தலைவர்கள் பேச்சுகளைவிட கருப்புச் சட்டைத் தலைவர் சம்பத்தின் பேச்சு சற்றுக் காரசாரமாக அமைந்தது. இக்கூட்டத்தில் கருப்புச் சட்டை அணிவது பற்றிப் பெரியார் வலியுறுத்திப் பேசினார்.

""நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம். பெண்டிரும் கருப்புத் துணியில் புடவை ரவிக்கை அணியலாம். கூட்டங்களில் இனி மாலைக்குப் பதில் கருப்புத் துணிகளே போடலாம். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை, நீலச்சட்டை, இந்துஸ்தான் சேவாதள் இருப்பது போல் இங்கும் கருப்புச் சட்டைப்படை தமிழ்நாடு முழுதும் இருக்கும்''.

அக்காலத்தில் தஞ்சை, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் மாதத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் கழகக் கூட்டங்கள் நடந்தபடியாக இருக்கும்.

1946 ஜனவரி முதல் வாரத்தில் திருத்துறைப்பூண்டியில் திராவிட மாணவர் மாநாடு காலையிலும், கருப்புச் சட்டைப் படை மாநாடு பிற்பகலிலும் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் எஸ் கருணாநந்தம். (அப்போதுதான் அவருக்கு தஞ்சை ஆர்.எம்.எஸ். சார்ட்டர் பணிக்கான நியமனக் கடிதம் வந்திருந்தது.) மாநாட்டுப் பணிகளில் எஸ்.கே. சாமி, அரங்கண்ணல், யாகூப், காஜாபீர் மற்றும் தோழர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினர். திருத்துறைப் பூண்டி காங்கிரஸ் கோட்டை என்பார்கள். அந்தக் கோட்டையே அதிரும் வண்ணம் கழக மாநாடு.

உடல் நலக் குறைவு காரணமாக பெரியார் வருவதற்கில்லை என்றும் அண்ணா அவசியம் கலந்து கொள்வாரென்றும் மாநாட்டு நிர்வாகிகளுக்குத் தகவல் வந்தது. தலைவர்களை வரவேற்க ரயிலடியில் கூட்டம் திரண்டிருந்தது. ரயிலில் இருந்து ஈ.வெ.கி சம்பத், நெடுஞ்செழியன், வீரமணி, தவமணிராஜன், அ. திராவிடமணி ஆகியோர் இறங்கினர். வாழ்த்துகள் முழங்கின. கறுப்புப் போர்வையில் குளிரில் நடுங்கியபடி ஓர் உருவம் இறுதியில் வண்டியை விட்டு இறங்கியது. அவர் மு. கருணாநிதி, "குடியரசு' துணை ஆசிரியர். கடுமையான அம்மை நோய் கண்டு உடல் கொதித்தது. ""மாநாட்டுக்கு வந்தே தீருவேன்'' என்று மு.க. வந்து சேர்ந்தார்.

அண்ணாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தனர். "எங்கே வரப்போகிறார்? இப்போதும் காலை வாரி விடத்தான் போகிறார்' என்று தோழர்கள் சலிப்போடு பேசிக் கொண்டிருந்தனர். அடுத்து வந்த ரயிலில் அண்ணா வந்து இறங்குகிறார். ஒரு குதிரை வண்டியில் மாநாட்டுப் பந்தலை அடைகிறார். அண்ணாவைக் கண்டதும் யாருக்கும் தலைகால் புரியவில்லை. ஒரே உற்சாகம். வாழ்த்து முழக்கம்.

மாநாட்டு நிர்வாகிகளிடம், ""ஏன் இப்போது தான் சுவரொட்டிகளை ஒட்டுகிறீர்கள்?'' என்று அண்ணா கேட்டார். பலரும் மெüனமாக இருந்தனர். அரங்கண்ணல் மட்டும் சற்று துணிவாகவே சொன்னார். ""இதற்கு முன் இரண்டு மூன்று கூட்டங்கள் விளம்பரம் செய்தும் நீங்கள் வராததால் காங்கிரஸ்காரர்கள் கேலி செய்தார்கள். அதனால்...'' என்று மழுப்பினார்.

சம்பத் தலைமையில் ஊர்வலம். மாநாட்டுப் பந்தலை நோக்கி ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்தனர். அண்ணாவும் நடந்தே வந்தது, தோழர்களுக்கு உற்சாகத்தைத் தந்தது. காங்கிரசாரின் கடும் எதிர்ப்புக்கிடையே மாநாடு வெற்றியுடன் நடைபெற்றது. கடும் காய்ச்சலிலும் கருணாநிதி தனது பாணியில் அழகாகவும் ஆவேசத்தோடும் பேசினார்.

இசையில் சிறந்தது எது?

இசைக் கலையைப் பொறுத்தவரை அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் தங்களது இளமைப் பருவத்தில் மிருதங்கத்தில் மனதைப் பறிகொடுத்தவர்கள்.

கலை, இலக்கியம், அரசியல், விஞ்ஞானம் போன்ற பல துறைகளையும் அண்ணாவின் எண்ணத் தராசில் போட்டு எடை காண்பார் சம்பத். ஒரு நாள், இசையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்ற சம்பத் கேட்டபோது, ""நாயன இசையே உலகில் சிறந்தது தம்பி'' என்று அண்ணா குறிப்பிட்டார்.

திருவாரூர் கீழ்வடம்போக்கித் தெருவில் குப்புசாமி நாயனக்காரரின் மூத்த மகன் தட்சணாமூர்த்திக்கு அண்ணா தலைமையில் திருமணம். அது ஒரு புகழ் பெற்ற இசைக் குடும்பம். திருவாரூர் சங்கீத மும்மணிகள் தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் தோன்றிய இடம். அதனால்தானோ என்னவோ, அன்றைய திருமண விழாவில் அண்ணா மணமக்களுக்குச் சொன்ன அறிவுரையைவிட இசை பற்றிய விரிவுரை ஓங்கி இருந்தது.

தம்பி சம்பத்தைத் தம் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசலானார். தொடக்கத்திலேயே சொன்னார்:

""இந்த மணவிழாவிற்கு நான் வந்து கொண்டிருந்தபோது உடனிருந்த என் தம்பி சம்பத் கேட்டான், "உங்களுக்கு இசையிலே மிகவும் பிடித்தது எது?' என்று. நான், "நாயன இசை'யென்றேன். இது புகழ் பெற்ற திருவாரூர் குப்புசாமி நாயனக்காரரின் இல்லத் திருமணம். அதற்காகக்கூட நான் சொல்லவில்லை. எனக்குப் பிடித்தது நாயன இசை தான்'' இவ்வாறு முகவுரை சொல்லிவிட்டு இசை பற்றிய விளக்கத்திற்கு வந்தார் அண்ணா.

""இசை என்றால் இசையவைப்பது. அதனால் தான் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை பாடிய நால்வர், ஆழ்வார்கள் காலத்திலிருந்து, ராமலிங்க அடிகள் காலம் வரை தமிழ்ப் பண்களின் அடிப்படையில் இசைப் பாடல்களாகவே இயற்றி தமது சைவ அல்லது வைணவ சித்தாந்தங்களுக்கு மக்களை இசைய வைத்தனர்'' என்பதாக ராக ஆலாபனை செய்யத் தொடங்கிய அண்ணா, பிர்காக்கள் சங்கதிகள் உதிர, மேலே மேலே உச்ச ஸ்தாயியில் சஞ்சாரம் செய்தார். இசையிலே உயர்ந்தது தமிழிசையே என்னும் பல்லவி, இசைக் கருவிகளில் உயர்ந்தது நாயனமே என்னும் அனுபல்லவி, தவில் வாத்தியத்துக்கு இணை உலகிலேயே இல்லையெனச் சரணம் சொல்லி, நிரவல் சுரப் பிரஸ்தாரத்துடன் ஆரோகண அவரோகணம் செய்து, கடைசியில் முத்தாய்ப்பு வைத்தார் அண்ணா. அன்றைக்கு அண்ணாவின் பேச்சுக் கச்சேரி, பாட்டுக் கச்சேரியாய் அமைந்தது.

நாயனக் கருவிக்கு நிகர் இல்லை. அதைக் கையாள்வதற்குத் தனித்திறமை வேண்டும். நமது திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களின் சுயமரியாதை உணர்வினால்தான் நாயனக்காரர்களின் நிலை இன்று மேம்பாடடைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

குற்றாலத்தில் அண்ணா, சம்பத்

சீசனில் குற்றாலம் செல்ல வேண்டுமென்று அண்ணாவுக்குக் கொள்ளை ஆசை. கோவில்பட்டி வள்ளிமுத்து கூட அடிக்கடி அழைப்பார். நெல்லை செல்லும்பொழுது கே.வி.கே. சாமி நினைவுபடுத்துவார். தொல்லை மிகுந்த லட்சிய வாழ்க்கையில் இந்த உல்லாசங்களுக்கு இடமேது?

கே.ஆர். ராமசாமிக்கு ஒரு யோசனை தோன்றியது. அண்ணாவையும் சம்பத்தையும் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்ற தம் எண்ணத்தை அண்ணாவிடம் வெளியிட்டபோது, ""தம்பி சம்பத் மாணவர் இயக்கத்தில் தீவிரம் காட்டுகிறான். அவன் குடந்தை வருகிறபோது சொல். நாம் போய் வரலாம்'' என்றார் அண்ணா.

அண்ணா, கே.ஆர்.ஆர்., சம்பத் மூவரும் இணைந்துவிட்டால் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார்கள். சுற்றுலா என்றால் கேட்கவா வேண்டும்?

சிந்தையைக் குளிப்பாட்டும் "சில்'லென்ற மென் தென்றல் தவழ்ந்துவரும் குளிர் குற்றாலம் சென்றனர் மூவரும். அவர்களோடு நகைச்சுவை நண்பர் சி.வி. ராஜகோபாலும் சேர்ந்து கொண்டார். பணிவிடைக்குப் பழம்பெரும் சுயமரியாதை இயக்கத் தலைவர் பொன்னம்பலனார் உடனிருக்கக் குறைவேது? தென்பாண்டி மண்ணின் சிறப்புகளுக்கு ஆலோலம் பாடும் குற்றாலத் தேனருவி. ஆல விழுதிறங்கும் பான்மையில், ஆடிச் சலசலக்கும் ஐந்தருவிக் காட்சியை அவர்கள் கண்டுகளித்தனர். வெள்ளியினால் செய்த வெகு நீளச் சங்கிலி போல் வெள்ளருவி துள்ளிவரும் காட்சியைக் கண்டு ரசித்தனர். உடல்வலி போக்க எண்ணெய் தேய்த்து அருவியில் குளித்தெழுந்தால் உடலுக்குக் குளிர்ச்சி; உள்ளத்திற்கும் மகிழ்ச்சி.

தம்பி சம்பத்தை உட்கார வைத்து அண்ணா எண்ணெய் தேய்த்து விடுகிறார். உடன்பிறந்த அண்ணனுக்குக் கூட அந்த அளவு அக்கறை இருக்காது. தம்பி சம்பத் தளிர்க் கரங்களால் அண்ணனுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிறார். மகிழ்ச்சியும் குதூகுலமும் போட்டியிடுகின்றன. அண்ணாவின் நகைக்சுவை தென்றலினும் இனிமை காட்டுகிறது. அனைவரும் ஐந்தருவியில் நீராடுகின்றனர். அண்ணாவுக்குத் தண்ணீரில் இறங்கவே பயம். அவரை ராமசாமியும், ராஜகோபாலும் தூக்கி வந்து அருவியில் நிறுத்துகின்றனர். அண்ணாவோ பதறுகிறார். பாய்ந்து விளையாடும் தம்பி சம்பத்துக்குத் தீங்கேதும் ஏற்பட்டுவிடக்கூடாதென்று கவனம் முழுவதையும் தம்பியின் பக்கம் திருப்புகிறார். ""எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று தைரியம் கூறுகிறார் கே.ஆர்.ஆர்.

""அண்ணா இந்த இன்பமான சூழ்நிலையில் கே.ஆர்.ஆரின் இசை கேட்டால் எப்படி இருக்கும்?'' என்கிறார் சம்பத். உடனே எட்டுக்கட்டை சுருதியில் கே.ஆர்.ஆர். ராக ஆலாபனை செய்கிறார். சுற்றுலா வந்தவர்கள் சுகமாக இசையில் நீந்துகின்றனர். அண்ணாவுக்கு இத்தகைய அனுபவங்கள் தனிச் சுகம் தரும்.

அப்போது அங்கே மனிதனை மனிதன் இழுத்து செல்லும் கை ரிக்ஷாக்கள் உண்டு. ஆனந்தத்திலும், ஆர்வம் மிகுதியிலும் அண்ணா சம்பத்தைத் தூக்கி ரிக்ஷாவில் வைத்துத் தாமே இழுக்கிறார். சம்பத் குதித்திறங்கி அண்ணாவை ரிக்ஷாவில் ஏற வைத்து அவர் இழுக்கிறார். இப்படி ரிக்ஷா ஓட்டிக்குச் சந்தர்ப்பம் தராமலே இருவரும் மாற்றி மாற்றி ரிக்ஷா இழுப்பதை அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு நாளல்ல, இரண்டு நாட்கள் குற்றால இன்பச் சுற்றுலா குதூகலம் தந்தது. காஞ்சி திரும்பிய அண்ணா, "குற்றாலம் கண்டோம்' என அந்தக் குதூகலத்தைக் கட்டுரையாகவும் தீட்டி மகிழ்ந்தார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com