தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஏன் இந்தப் புனைப் பெயர்?

புஷ்பா தங்கதுரை எஸ்.வேணுகோபாலன் ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் பல வருடங்களாக நான் எழுதிக் கொண்டிருந்தேன். 1970-க் குப் பின் நான் சிவப்பு விளக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் வைத்துக் கொண்ட ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:16 pm

ந. ஜீவா

புஷ்பா தங்கதுரை

எஸ்.வேணுகோபாலன்

ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் பல வருடங்களாக நான் எழுதிக் கொண்டிருந்தேன். 1970-க்

குப் பின் நான் சிவப்பு விளக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் வைத்துக் கொண்ட பெயர்தான் புஷ்பா தங்கதுரை. அந்தப் பெயரிலேயே சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் "என் பெயர் கமலா'வைத் தொடராக எழுதினேன். அப்போது பெண்கள் பெயரை வைத்துக் கொண்டு எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் சிலர், பலரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டு இருந்தனர்.

நானும் அந்த எண்ணத்தில்தான் புஷ்பா தங்கதுரை என்ற பெயரை வைத்துக் கொண்டேன். பல ஆண்டுகளாக ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் எழுதினாலும் பலரால் அறியப்படாதவனாகவே இருந்தேன். ஆனால் புஷ்பா தங்கதுரை என்று பெயர் வைத்துக் கொண்டவுடன் ஆறே வாரத்தில் என் பெயர் பிரபலமாகிவிட்டது. ஆனால் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுக்கவே எனக்கு ஒரு மாதம் ஆனது. முதலில் புஷ்பா என்று மட்டும் வைக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் அதில் "கிக்' இருக்காது என்று புஷ்பா தங்கதுரை என்று வைத்துக் கொண்டேன். இந்த தங்கதுரை யார்? புஷ்பாவின் கணவனா? தந்தையா? என்று வாசகர்கள் யோசிக்கட்டுமே என்று நினைத்தேன்.

இப்போது நினைத்துப் பார்த்தால் ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் நான் எழுதியவையாகட்டும், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் நான் எழுதியவையாகட்டும் எல்லாமே என்னைப் பொறுத்தளவில் சம மதிப்பையே பெற்றிருக்கின்றன.

வண்ணநிலவன்

ராமச்சந்திரன்

என்னுடைய முதல் சிறுகதை எஸ்.கே.முருகானந்தம் நடத்திய "சாந்தி' இதழில்தான் வெளிவந்தது. ஆனால் அந்தக் கதையை நான் சாந்திக்கு அனுப்பி வைக்கவில்லை. அதில் என் பெயர் வண்ணநிலவன் என்று போடப்பட்டிருந்தது. இதற்குக் காரணமாக இருந்தவர் வல்லிக்கண்ணன்.

நான் வல்லிக்கண்ணனின் சொந்த ஊரான ராஜவல்லிபுரத்துக்கு அவரைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வேன். அப்படிப் போகும்போது நான் எழுதிய மூன்று சிறுகதைகளை அவரிடம் படித்துப் பார்க்கும்படி கொடுத்தேன். அந்தக் கதைகளுக்குத் தலைப்பு கூடப் போடவில்லை.

சிறிதுநாள் கழித்துப் பார்த்தால் அந்தக் கதைகளில் ஒன்றுதான் வண்ணநிலவன் என்று எனக்குப் பெயர் வைத்து சாந்தியில் வெளியானது. என் இயற்பெயரான ராமச்சந்திரனில் உள்ள சந்திரனை எடுத்து நிலவன் ஆக்கி முன்னால் வண்ணத்தைச் சேர்த்துவிட்டார்கள். இதேபோன்ற பெயருடன் என் நண்பர் வண்ணதாசன் ஏற்கெனவே இருந்தார்.

"துக்ளக்' இதழில் நான் வேலை செய்தபோது 1976 - இல் எனக்குத் துக்ளக் ஆசிரியர் சோ "துர்வாசர்' என்ற பெயரை வைத்தார். அப்போது சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு தீய நிகழ்வுக்கும் நான் கடுமையாகக் கோபப்படுவேன். ""துர்வாச முனிவருக்குத்தான் இப்படிக் கோபம் வரும்'' என்று சொன்ன சோ, அவர் பெயரையே எனக்கும் வைத்துவிட்டார். இப்படித்தான் நான் துர்வாசராகவும் ஆனேன். துக்ளக்கில் சந்திரன் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறேன்.

இந்தப் பெயர்களைத் தவிர பாணபட்டன் என்ற பெயரிலும் முன்பு எழுதியிருக்கிறேன். இப்போது எழுதுவதில்லை.

சவீதா

எஸ்.டி.பாஸ்கரன்

சவீதா என்னும் பெயர் சென்னையில் உள்ள தஞஞஊ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் என் மூத்த மகளின் பெயர். சவீதா என்றால் ஒளி பொருந்திய சூரியன் என்று பொருள். என் பெயராகிய பாஸ்கரனுக்கும் அதே பொருள்தான்.

சவீதா குழந்தையாக இருக்கும்போது நான் கொடைக்கானலில் அரசுப் பணியிலிருந்தேன். அப்போது நானும் சவீதாவும் கொடைக்கானலில் சுற்றாத இடம் இல்லை. அப்படிச் சுற்றியதே கதை எழுதத் தூண்டுகோலாக இருந்தது.

அதற்குப் பின்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணி மாறுதல் காரணமாக வேலைக்கு வந்தபோது கதை எழுதத் தொடங்கினேன். 1971 - ஆம் ஆண்டு என்னுடைய முதல் கதை தினமணி கதிரில் வெளிவந்தது. கதையின் தலைப்பு: "எங்கே ரோஜா இதழ்கள் உதிர்கின்றனவோ?' சாவி அப்போது தினமணி கதிரில் ஆசிரியராக இருந்தார்.

கதை வெளிவந்தவுடன் நிறையப் பாராட்டுகள். எழுத்தாளர் சிவசங்கரி, "யார் அந்த புதுப்பெண்?' என்று விசாரித்ததாக சாவி என்னிடம் சொன்னார். ""நீ முதல் கதையிலேயே ஃபேமஸ் ஆகிவிட்டாய்'' என்று பாராட்டினார்.

அரசுப் பணியில் விருப்ப ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளனாக மாறிவிட்டேன்.

அதைவிட முக்கியமானது, என் மகள் சவீதா பி.ஏ. படிக்கும்போது என்னுடைய "நேசமுள்ள வான்சுடரே' என்ற புத்தகம் பாடப் புத்தகமாக இருந்திருக்கிறது.

அம்பை

சி.எஸ்.லக்ஷ்மி

1960 - இல் நான் எழுத ஆரம்பித்தபோது என் வயது 16. கண்ணன் இதழில் பரிசு வாங்கிய குழந்தைகளுக்கான நாவலை அப்போதுதான் எழுதினேன். பரிசு வரும் என்ற நம்பிக்கை ஏதும் இருக்காததால் அதை சி.எஸ். லக்ஷ்மி என்ற பெயரிலேயேதான் எழுதினேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைத்தபோது இயற்பெயரில் எழுத விருப்பம் இருக்கவில்லை. காரணம் வெள்ளிக்கிழமை அன்று பிறந்த அத்தனை பெண் குழந்தைகளுக்கும் லக்ஷ்மி என்றுதான் பெயர் வைப்பார்கள்.

அப்போது புனைப்பெயரில் எழுதுவது மோஸ்தராக இருந்தது. எனக்கென்று ஒரு பெயர் வேண்டும் என்று நினைத்தபோது என் மனத்தில் தோன்றிய முதல் பெயர் அம்பைதான். இதற்குக் காரணம் இருந்தது. தேவன் கதைகளை நான் விரும்பிப் படித்த காலம் அது. அவர் "பார்வதியின் சங்கல்பம்' என்றொரு குறுநாவல் எழுதியிருந்தார்.

தன்னைக் கணவன் உதறிவிட்ட பின் அம்பை என்ற பெயரில் கதை எழுத ஆரம்பிப்பாள் கதாநாயகி. அவள் பெயர் பார்வதி. அவளை உதாசீனம் செய்த கணவன் அவளை மீண்டும் வந்து அழைக்கும்போது அவள் போவாள். பிறகு பார்வதி தன் சுயமரியாதையை இருத்திக் கொள்ள கணவனை விட்டுப் போய்விடுவாள்.

தன் கடமையை எல்லாம் செய்துவிட்டுத்தான் அவள் போவாள். மென்மையாக, அதிர்ந்து பேசாமல் தன்னை நிலைநாட்டிக்கொண்டவளாகத்தான் அவள் இருந்தாள். அப்படியும் அவள் பிம்பம் என் மனத்தில் வேறு பல வகைகளில் உருக்கொண்டிருந்தது. கணவன் வந்து கூப்பிட்டபோது அவள் போக மறுத்தாள் என்று கதை மாறிவிட்டது. என் மனத்தில் அவள் ஒரு புரட்சிகரமான பெண்ணாக உருக்கொண்டாள்.

என் புனைப்பெயரும் அம்பை என்றிருக்க வேண்டும் என்று நினைத்தேன். வெகு சீக்கிரமே மகாபாரத அம்பைக்கும் என் புனைப்பெயருக்கும் தொடர்பு ஏற்பட்டுப் போய்விட்டது. காரணம் ஆணுமல்லாத பெண்ணும் அல்லாத, ஆண் பெண் இரண்டாகவும் இருந்த, இரு பால் கூறுகளுடைய, விளக்கங்களில் அடங்காத் தன்மை என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதன் எல்லையற்ற சுதந்திரம் என் வாழ்க்கையின் பொருளாகப் பட்டது. ஆகவே அம்பை என்ற பெயர் வெகுவாக மாறிய அர்த்தங்களுடன் நிலைத்துவிட்டது.

கலாப்ரியா

சோமசுந்தரம்

அடிக்கடி கேட்கப்படுகிற கேள்வி. அலுக்காத கேள்வி. நம்முடைய புராணக் கதைகளில் ஒன்று சந்திரனைப் பற்றியது. சந்திரனைச் சுற்றி பல நட்சத்திரங்கள். ஆனால் சந்திரன் விரும்பியது ரோகிணி என்ற நட்சத்திரத்தைத்தான். அதனாலேயே சிவபெருமானின் சாபத்துக்குச் சந்திரன் ஆளானதாக ஒரு கதை உண்டு. சந்திரனுக்கு ரோகிணிப்ரியா என்று ஒரு பெயர் உண்டு. இது கல்லூரியில் வானியல் வகுப்பில் படித்தது.

இதன் தாக்கத்தினால் நான் மட்டுமே விரும்பிய, எனக்குப் பிரியமானவளின் பெயரில் பாதியுடன் இணைத்து கலாப்ரியா என்று வைத்துக் கொண்டேன்.

1970 - இல் "கசடதபற' இதழில் கவிதை எழுதிய போது வைத்த பெயர்.

தனிப்பட்ட சோகத்தையோ, மகிழ்ச்சியையோ பொதுமைப்படுத்தும்போதுதான் அது கலையாகிறது. அதனால் கலாவின் மேல் பிரியம் கொண்டவன் என்பதைத் தாண்டி கலையின் மீதும் பிரியம் கொண்டவன் என்ற பரந்த அர்த்தமும் உண்டு இந்தப் பெயருக்கு.

ஸிந்துஜா

டி.ஆர். ராஜகோபால்

ஸிந்துஜா என்கிற புனைப் பெயரில், என் முதல் சிறுகதை, கணையாழியில் மார்ச், எழுபத்தொன்றில் பிரசுரமானது. பெண்களிடம் உள்ளார்ந்து அமைந்திருக்கும், துணிச்சலையும், புத்திசாலித்தனத்தையும் எதிரொலிக்கும் எழுத்தாக "ஒரே ஒரு கேள்வி' என்ற அக்கதை பிரசுரமானது.

ஸிந்துஜா என்கிற பெயர் கடலுடன் உறவு கொண்டது. ஸிந்துஜா கடலின் மகள் என்றும் சமஸ்கிருதத்தில் பொருள் வருகிறது. ஒன்றுக்கொன்று ஒட்டாத ஆழமும், அமைதியும் மிக ஆச்சரியமான விதத்தில் கடலுடன் சேர்ந்து உறவாடும் பிரமிப்பில் ஈர்க்கப்பட்டு, இந்தப் புனைப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.

ஒரு தடவை இந்தப் பெயரைப் பற்றிப் பேசும் போது, "கணையாழி' ஆசிரியர் கி. கஸ்தூரி ரங்கன், ""ஸிந்துஜாங்கிறது செல்வத்துக்கு அரசியான லக்ஷ்மியோடஇன்னொரு பெயர் இல்லையோ?'' என்று கேட்டார்.

"" ஓ... அப்படியா சரி, சரஸ்வதிதான் என்கிட்டே வர பயப்பட்டா} லக்ஷ்மியாவது அவளோட கருணையை எனக்குக் காமிக்கட்டும்'' என்று சிரித்தேன்.

ஆனால், லக்ஷ்மியும், சரஸ்வதியுடன் என் விஷயத்தில் சேர்ந்து கொண்டு விட்டாள் என்பது இன்னொரு கதை.

என் புனைப்பெயர் சாதாரண வழக்கத்தில் அவ்வளவாகப் புழங்கியிராத காலகட்டத்தில் நான் எழுதியதால் பரவலான வாசகர் கவனத்தை அது பெற்றது. திருமணம் ஆவதற்கு முன், கேர்ல் பிரண்டின் பெயரா? என்றும், ஆனதற்குப் பின் மனைவியின் பெயரா? என்றும் கேட்டவர்களின் எண்ணிக்கை அன்னா ஹசாரேயின்கூட்டத்துக்கு கூடியவர்களின் எண்ணிக்கையை விட ஜாஸ்தியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

விக்ரமாதித்யன்

நம்பிராஜன்

முதலில் நம்பிராஜன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

அப்போது வாசுதேவநல்லூரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வருவதும், மூன்று மாதங்கள் அலைந்து திரிந்து பிறகு வாசுதேவநல்லூருக்குப் போவதுமாக இருந்தேன். இது விக்ரமாதித்யன் கதையில் வருவதுபோல காடாறு மாதம், நாடாறு மாதமாக நான் அலைவதாகத் தோன்றியது. வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டம், விரக்தி காரணமாகவே விக்ரமாதித்யன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன்.

கவிஞர் பிரமிள் நியூமராலஜிபடி பெயரை மாற்றி வைக்கச் சொன்னார். எனக்கு நன்கு தெரிந்த நெல்லை வசந்தன் -ஜோதிடர்- அவரைக் குடும்ப ஜோதிடர் என்று கூடச் சொல்லலாம் - அவரும் பெயரை மாற்றி வைக்கச் சொன்னார்.

நானும் பெயரில் சிறிது மாற்றி விக்ரமாதித்யன் நம்பி என்ற பெயரில் இதழ்களுக்குக் கவிதை எழுதி அனுப்பினேன். ஆனால் அங்கிருக்கும் இலக்கிய நண்பர்கள் நம்பியை நீக்கிவிட்டு விக்ரமாதித்யன் என்ற பெயரிலேயே கவிதைகளை வெளியிட்டார்கள்.

நான் விட வேண்டும் என்று நினைத்தாலும் இந்தப் பெயர் என்னைத் தொற்றிக் கொண்டே வந்தது. என்ன செய்வது?

கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் எனது மகனும் உஜ்ஜயினியில் உள்ள மகாகாளி கோயிலுக்குச் சென்று வணங்கினோம். கதையில் வரும் விக்ரமாதித்யன் வணங்கிய அதே காளி. காளிதாஸனுக்கு அருள் வழங்கிய காளி. அப்புறம் விக்ரமாதித்யன் கோயிலுக்குச் சென்று அவனையும் வணங்கினோம்.

வேறு வழியில்லை, விக்ரமாதித்யனை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

மனுஷ்யபுத்திரன்

எஸ்.அப்துல் ஹமீது

வித்தியாசமான பெயர்கள் தமிழ்க் கவிஞர்களுக்குப் புதிதல்ல. ஆனால் நான் என்னை கவிஞனாக அடையாளம் காணும் முன்பே இந்தப் பெயர் என்னைப் பிடித்துக்கொண்டது. மனுஷ்ய புத்திரன் என்ற பெயரை ஒரு நாள் ஒரு வானொலி நாடகத்தில் கேட்டபோது அந்தப் பெயர் என் கனவுகளுக்கும் எண்ணங்களுக்கும் வடிவம் கொடுத்தது போலிருந்தது.

மனித குலத்தின் மகன் என்று என்னை கண்டுகொண்ட அந்த நாளில் எனக்கு வயது 14. அந்தப் பெயரில் பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதி, அதை அச்சில் கண்டு உறுதிப்படுத்திக்கொண்டேன். இரண்டாண்டுகளுக்குப் பிறகு 16 வயதில் "மனுஷ்ய புத்திரன் கவிதைகள்' என்ற பெயரில் எனது புத்தகம் வெளிவந்தபோது அந்தப் பெயர் எனது பெயராக மாறியது.

பின்னாளில் அறிந்தேன் மனுஷ்யபுத்திரன் என்பது கிறிஸ்துவின் பெயர் என்று. அந்தப் பெயருக்கு நான் தகுதியற்றவன் என்பது எனக்கு அப்போதும் தோன்றியது; இப்போதும் தோன்றுகிறது. ஆனாலும் அந்தப் பெயரை விட மனம் இல்லை.

இந்தப் பெயர் வடமொழிச் சொல்லாக இருப்பதால் இரண்டு சந்தர்ப்பங்களில் எனக்கு மறுபெயர் சூட்டு விழா நடந்தது. தொல்.திருமாவளவன் ஒரு கூட்டத்தில் பேசும்போது மேடையிலிருந்த என்னை "மானுட மகன்' என்று அழைக்க விரும்புவதாகக் கூறினார்.

இன்னொரு கூட்டத்தில் பேராசியர் க. அன்பழகன் எனது வட மொழிப் பெயரால் மிகவும் எரிச்சலடைந்து, "மாந்த மைந்தன்' எனப் பெயர் சூட்டினார். அருகிலிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், ""கூட்டதிற்கு வரும்போது பெயரோடு வந்தீங்க.. போறப்ப பெயரில்லாம திரும்பிப் போறீங்க'' என்று கிண்டல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.