எல்லாரும் வழிபடும் கல்லறைக் கோயில்கள்!
தஞ்சை - திருச்சி சாலையில் செங்கிப்பட்டியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தச்சன்குறிச்சி. கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு "தவக்காலத்தில்' ஐந்தாவது வெள்ளிக்


தஞ்சை - திருச்சி சாலையில் செங்கிப்பட்டியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தச்சன்குறிச்சி. கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு "தவக்காலத்தில்' ஐந்தாவது வெள்ளிக்கிழமை, லட்சக்கணக்கில் அங்கே திரளுகிறார்கள் எல்லா மதங்களையும் சேர்ந்த மக்கள். அவர்கள் எல்லாரும் அங்குள்ள "சின்னமாயி கல்லறைக் கோயிலுக்கு' வழிபட வருகிறார்கள்.
மே மாதம் கடைசி வாரம். திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை தாண்டி உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மதவேறுபாடு இல்லாமல் ஒரு கல்லறைக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அந்தக் கல்லறைக் கோயிலின் பெயர்: மரித்தியம்மாள் கல்லறைக் கோயில்.
மதவேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் இந்தக் கல்லறைக் கோயில்களில் வழிபாடு செய்வது எப்படி? என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார் அ.இருதயராஜ்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அருட்தந்தையான இவர், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்துக்காக இந்த ஆய்வைச் செய்திருக்கிறார். அவர் கூறுகிறார்:
""இந்த இரண்டு கல்லறைக் கோயில்களின் வரலாற்றை ஆராய நான் சென்றபோது பலருக்கும் இவற்றின் வரலாறு தெரியவில்லை. 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் சிலருக்குத்தான் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் பேசி இந்தக் கல்லறைக் கோயில்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
தச்சன்குறிச்சியிலுள்ள சின்னமாயிக் கல்லறைக் கோயிலுக்குள் இரண்டு கல்லறைகள் இருக்கின்றன. ஒன்று சின்னம்மாளின் கல்லறை. மற்றொன்று அவருடைய கணவரான சின்னப்பனின் கல்லறை.
சின்னம்மாளின் கதையைக் கேட்டால் நெஞ்சு நெகிழ்ந்துவிடும்.
சின்னம்மாள் - சின்னப்பன் தம்பதிக்கு நிறைய நிலம் இருந்திருக்கிறது. அதில் அமோக விளைச்சல் கிடைத்திருக்கிறது. அவர்கள் முன்பட்டத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்களை விளைவித்து, அவர்களுடைய வீட்டில் உள்ள குதிரில் நிறையச் சேமித்து வைத்திருப்பார்கள். அப்படிச் சேமித்து வைத்திருந்த தானியங்களை நல்ல விலை வரும்போது வியாபாரிகளிடம் விற்றுவிடுவார்கள்.
ஆனால் ஒருசமயம் சின்னம்மாளின் நிலத்தில் ஏராளமான தானியங்கள் விளைந்திருக்க, பின்பட்டத்தில் விதைத்த பல ஏழை மக்களின் நிலங்களில் நன்றாக விளையவில்லை. இதனால் மக்கள் பட்டினி கிடக்கும்நிலை ஏற்பட்டுவிட்டது.
தன்னைச் சுற்றியுள்ள மக்கள் பட்டினியாகக் கிடப்பதைக் கண்டு மனம் பொறுக்காத சின்னம்மாள், தன் வீட்டில் குதிருக்குள் இருந்த தானியங்களை எல்லாவற்றையும் எடுத்து, மக்களுக்கு இலவசமாகத் தந்துவிட்டார்.
சின்னம்மாளின் கணவர் சின்னப்பனுக்கு இது தெரியாது. கிராமத்துக்கு வந்து தானியங்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகளை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் அவர், தானியங்களை விற்பதற்காக.
ஆனால் வீட்டில் தானியங்கள் எதுவுமில்லை. சின்னம்மாள் பயத்தால் நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்திருக்கிறார். ஆனால் சின்னப்பன் கோபப்படவில்லை. மெதுவாகச் சின்னம்மாளிடம் பேசி விஷயத்தைத் தெரிந்து கொண்ட அவர், வியாபாரிகளை வெறும் கையுடன் அனுப்பி வைத்துவிட்டார்.
அதற்குப் பின்பு அவரும் சின்னம்மாளுடன் சேர்ந்து ஏழைகளுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டினார்.
ஆனால் சின்னப்பனின் தாய், உறவினர்கள் எல்லாம், சின்னம்மாள் இப்படி வீட்டிலுள்ள தானியங்களை எடுத்து ஊராருக்குக் கொடுப்பதைக் கடுமையாக கண்டித்தனர். கொடுமையான சொற்களால் வசை பாடினர்.
இதனால் மனம் உடைந்த சின்னம்மாள் தனது கணவனின் ஊராகிய செüரியார்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து கிளம்பி தச்சன்குறிச்சிக்கு வரும் வழியில் ஒரு மரத்தடியில் உள்ள கல்லில் அமர்கிறார். சிறிதுநேரத்தில் இறந்தும் போகிறார். அந்த இடம் சின்னம்மாளுக்கு அதிக விளைச்சலைக் கொடுத்த நிலம் உள்ள இடம்.
பின்பு, சின்னம்மாளை அந்த இடத்தில் புதைத்துவிடுகிறார்கள். கல்லறை ஒன்றையும் எழுப்புகிறார்கள்.
ஆண்டுகள் சில கழிகின்றன. அந்தப் பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் நிலத்தில் கிடை போடுகிறார்கள். அப்படிக் கிடை போட வந்த ஒருவருக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி வந்துவிடுகிறது. அவருடன் வந்தவர்கள் அவரை நிலத்திலேயே விட்டுவிட்டு, மருந்து வாங்க ஊருக்குள் போனபோது, அவர் வயிற்று வலி தாங்கமுடியாமல் அந்தப் பகுதியில் இருந்த மரத்தில் ஏறித் தூக்குப் போட முயற்சி செய்யும்போது, "தூக்குப் போட ஏறிய தேத்தாமரத்தின் இலைகளைப் பிடுங்கிச் சாப்பிட்டால் வயிற்றுவலி போய்விடும்' என்று அசரீரி கேட்டது. அதைப் போல இலைகளை மென்று தின்ற அவர் உடனே வயிற்று வலி நீங்கிக் குணமடைந்தார்.
மரத்தடியில் இருந்த கல்லறையில் மெழுகு திரி ஏற்றி வழிபாடு செய்தார். அந்தக் கல்லறை வேறு யாருடையதுமல்ல, சின்னம்மாவின் கல்லறைதான் அது.
அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்கள் அலைஅலையாக சின்னம்மாளின் கல்லறையை நோக்கி வர ஆரம்பித்துவிட்டார்கள். திருமணமாகாதவர்கள் திருமணம் ஆகவும், தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டவும் என நம்பிக்கையோடு வந்து வழிபாடு செய்கிறார்கள். வழிபாடு செய்ய வருகிறவர்கள் நிறைய தானியங்களைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். பின்பு அந்தத் தானியத்தில் ஒருபிடியை எடுத்துச் சென்று விதை நெல்லாகப் பயன்படுத்துகிறார்கள். அந்த விதை நெல்லை விதைத்தால் நிலத்தில் அமோக விளைச்சல் கிடைக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க தானியங்களைக் கொடுத்த சின்னம்மாள் வாழ்ந்த காலம் சரியாகத் தெரியவில்லை. என்றாலும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மாள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது'' என்ற இருதயராஜிடம், மரித்தியம்மாள் கல்லறைக் கோயில் வழிபாடு எப்படி ஏற்பட்டது? என்று கேட்டோம்.
இருதயராஜ் சொல்கிறார்:
""நூறாண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு தாத்தாவும், சிறுவயதுப் பேத்தியும் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு நடந்தே வந்திருக்கின்றனர். வரும்போது நல்ல மழை. சிறுவயதுப் பேத்திக்கு அப்போது அம்மை போட்டுவிடுகிறது. அம்மை நோயால் அவளால் நடக்கவும் முடியவில்லை. மழை பெய்ததால் வாகன வசதியும் இல்லை. அந்தச் சிறுமி இறந்துவிடவே தாத்தா வேறு வழியின்றி அந்தச் சிறுமியை அங்கேயே புதைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். அப்படிப் புதைக்கப்பட்ட சிறுமிதான் மரித்தியம்மாள்.
சிறுமி புதைக்கப்பட்ட இடம் ஒரு நிலச்சுவான்தாருக்கு உரியது. அவர் மீது சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருந்தது. அந்த வழக்கில் வெற்றி பெறுவோமோ? மாட்டோமோ? என்று அவர் கலங்கிக் கொண்டு இருந்த நேரம் அது. அவருடைய கனவில் வந்த மரித்தியம்மாள், தான் வெயிலிலும், மழையிலும் துயர்ப்படுவதாகவும், தனக்கு ஒரு கல்லறை கட்டித் தர வேண்டும் என்றும், அப்படித் தந்தால் அவர் மீதுள்ள வழக்கில் அவர் வெற்றி பெறுவார் என்றும் கூறினாள். நிலச்சுவான்தாரும் கல்லறையைக் கட்ட ஆணையிடுகிறார். வழக்கில் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துவிடுகிறது. அதிலிருந்து நினைத்த காரியம் நடக்க வேண்டுமானால் மரித்தியம்மாள் கல்லறையை வணங்க வேண்டும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
அந்த வழியாகச் செல்லும் வியாபாரிகள், மக்கள் எல்லாரும் சாதி, மத வேறுபாடு இல்லாமல் கல்லறையில் மலர்களைத் தூவி வழிபட ஆரம்பித்தனர். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொருவிதமாக வழிபாடு செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மாலை, மெழுகுதிரி போன்றவற்றைக் கொண்டும், இந்துக்கள் விபூதி, மாலை போன்றவற்றைக் கொண்டும் வழிபடுகிறார்கள்.
மரித்தியம்மாள் கல்லறை கோயில் கிழக்குக் கடற்கரைச் சாலையருகே இருப்பதால், அந்தச் சாலையை அமைக்கும்போது அதை இடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் கட்சி வேறுபாடில்லாமல் அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பி, மரித்தியம்மாள் கல்லறைக் கோயிலை இடிக்காமல் தடுத்துவிட்டனர்.
என்னுடைய இந்த ஆய்வு மக்களின் வழிபடும்முறையைப் பற்றியது. மக்களுக்குத் தொண்டு செய்தவர்களை மக்கள் எந்நாளும் மறக்கமாட்டார்கள் என்பதற்கு சின்னமாயி கல்லறைக் கோயில் வழிபாடு சான்றாக இருக்கிறது. எங்கேயோ பிறந்து எங்கேயோ மரணமடைந்த ஒரு சிறுமி, அப்பகுதி மக்களுக்கு நன்மை செய்கிறாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மரித்தியம்மாள் கல்லறைக் கோயில் வழிபாடு நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...