திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஐரோப்பியப் படவிழா: சைக்கிள் திருடன்

போலந்து, ஸ்வீடன், பின்லாந்து, பல்கேரியா, எஸ்தோனியா, ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, லிதுவேனியா, ஹங்கேரி, நெதர்லாந்து, ஆஸ்திரியா - ஆகிய பன்னிரண்டு நாடுகளில் தயாரான படங்கள் ஐரோப்பிய பட விழாவாகத் திரையிடப்ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:00 pm

போலந்து, ஸ்வீடன், பின்லாந்து, பல்கேரியா, எஸ்தோனியா, ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, லிதுவேனியா, ஹங்கேரி, நெதர்லாந்து, ஆஸ்திரியா - ஆகிய பன்னிரண்டு நாடுகளில் தயாரான படங்கள் ஐரோப்பிய பட விழாவாகத் திரையிடப்பட்டன. கெüஹாத்தி, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இந்தத் திரைப்பட விழா நடந்தேறியது. இந்தப் படங்களின் இலக்கு குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் பையன்கள். ஆனால் பெரியவர்களும் பார்த்து ரசிக்கலாம். அந்த அளவுக்கு கலை நயம். கருத்துச் செறிவு. படவிழாவில் முக்கால் வாசி - கார்ட்டூன் படங்களே ஆக்ரமித்துக் கொண்டன.

இந்த சைக்கிள் திருடன், பின்லாந்து படம். ஆங்கிலத் தலைப்பு: தஐஇஓவ தஅடடஉத அசஈ பஏஉ ஆஐஇவஇகஉ பஏஐஉஊ. படத்தை மேரி ராந்தாசிலா இயக்கியிருக்கிறார். இதோ சைக்கிள் திருடனின் கதை:

சிறுவன் ராபர்ட் ரோசன் இரண்டு கால்களிலும் கட்டுப் போட்டுக் கொண்டு, சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். தன் கால்கள் செயல் இழந்துவிட்டதாகவே நினைத்தான். இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவன் சைக்கிளில் செல்லும்போது - ஒரு விபத்து நடந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமான அடி. வசதியான குடும்பத்துப் பையன் என்பதால் உயர்ந்த சிகிச்சை உரிய காலத்தில் கிடைத்தது. அவனைப் பார்த்துக் கொள்ள ஒரு மருத்துவ தாதியும் கிடைத்துவிட்டாள்.

தன்னால் இனி எழுந்து நடமாடவே முடியாது என்று நினைத்தான் ராபர்ட். ஆனால் செவிலி ப்ளோரா - நம்பிக்கையூட்டும் பாடல்களைப் பாடி - அவனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்தாள். "உன்னால் நிச்சயமாக நடக்க முடியும்' என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

ராபர்ட் கடும் வலியை அனுபவித்தான். கால்களை அசைக்கவே முடியவில்லை. கால்கள் மரத்துப் போனதுபோல் இருந்தன. தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் சொன்ன வார்த்தைகளில் அவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. தன்னால் எழுந்து நிற்கக்கூட முடியாது என்றே நினைத்தான்.

சிறுவன் ரிக்கியும், சிறுமி நெல்லியும் (சஉககவ) - இணைபிரியாத நண்பர்கள். இருவரும் ஒன்று சேர்ந்தே விளையாடுவார்கள். ஒன்று சேர்ந்தே எந்த இடத்துக்கும் போய் வருவார்கள்.

திருவிழா சமயத்தில் - ரிக்கியின் பெற்றோர் அவனுக்கு ஒரு சைக்கிளைப் பரிசாக அளித்தார்கள். அது ஒரு சாதாரண சைக்கிள் அல்ல. பிரமாதமாக அலங்கரிக்கப்பட்ட அழகு மிகு சைக்கிள் அது. ரிக்கி மிகவும் பூரித்துப் போனான். தன் தோழி நெல்லியிடம் காட்டிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டான். உனக்குக் கிடைத்திருக்கும் பரிசு உயர்வானது என்று நெல்லியும் பாராட்டினாள்...  

ஆனால் - திடீரென ஒருநாள் அந்த அழகு சைக்கிள் காணாமற் போனது. ரிக்கி வாடிப்போய்விட்டான். பல இடங்களில் சைக்கிளைத் தேடிப் பார்த்து அலுத்துப் போனான். "நாம் இரண்டு பேருமே சேர்ந்து தேடுவோம் வா' - என்று துணைக்கு வந்தாள் தோழி நெல்லி.

இருவரும் சேர்ந்து தேடத் தொடங்கினர்.

ரிக்கியின் உறவினர்கள் அன்று பெரிய பட்டணத்திற்குப் புகைவண்டியில் செல்ல இருந்தார்கள். எனவே அவர்களைப் பார்க்க - ரிக்கி - நெல்லி இருவருமே புகைவண்டி நிலையத்திற்குச் சென்றார்கள். புகைவண்டி நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு வண்டி நிறுத்தத்தில் - ஒரு நீல நிற வேனை அவர்கள் பார்த்தார்கள். அந்த வேனின் கண்ணாடிக் கதவு வழியாக - ஒரு சைக்கிளின் ஹேண்டில் பார் - கண்ணுக்குத் தெரிந்தது. அதன் கைப்பிடிகளில் தெரிந்த குஞ்சலம் - ரிக்கியின் ஆவலைத் தூண்டியது.

அந்த நீல நிற வேனின் பின் பக்கக் கதவைத் திறக்க முயன்றார்கள். பூட்டப்படாத பின் பக்கக் கதவு - நல்ல வேளையாகத் திறந்து கொண்டது. ஏறி உள்ளே போனால் - வண்டியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் தன் சைக்கிள்தான் என்பதை ரிக்கி கண்டறிந்தான். சைக்கிளில் பொறிக்கப்பட்டிருந்த ஆர்.ஆர். - என்ற பச்சைவர்ண எழுத்துக்கள் - அவன் வீட்டருகே இருந்து திருடப்பட்ட - அவனுக்குச் சொந்தமான சைக்கிள்தான் அது - என்பதைப் பறைசாற்றின.

""இந்த வண்டியில் நாம் மறைவாக அமர்ந்து கொள்வோம். இந்த வண்டி எங்கேதான் போகிறது என்று பார்க்கலாம். வண்டியின் இலக்கையும் - சைக்கிள் திருடன் யார் என்பதையும் நாம் கண்டுபிடித்து விடலாம்'' - என்றான் ரிக்கி.

இருவரும் நீலநிற வண்டியின் பின்புறத்தில் மறைவாக அமர்ந்து கொண்டார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் - நீலச்சீருடை அணிந்த ஒரு வண்டி ஓட்டி, வண்டியில் ஏறி அமர்ந்து வேனை ஓட்டத் தொடங்கினான்.

அவன் செல்போனில் யாருடனோ பேசுவது தெளிவாகக் கேட்டது...

""ராபர்ட் ரோசன்! நான் உன் அங்கிள் பெர்ட்டில் பேசுகிறேன். நீ சீக்கிரமே குணமடைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். மதியம் மூன்று மணிக்கு நான் பட்டணத்தில் இருக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வருகிறேன். உனக்கு நல்ல பரிசுப் பொருள்கள் கொண்டு வருகிறேன்!'' - என்று பேசிக்கொண்டிருந்தான் வண்டி ஓட்டி.

ரிக்கி - அவன் தோழி நெல்லி - இருவருக்குமே இப்போது வண்டியின் இலக்குத் தெரிந்துவிட்டது.

         ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு - வண்டி ஓட்டி பெர்ட்டில் சாப்பிடப் போனார். ரிக்கியும் நெல்லியும் - இயற்கை உபாதைக்காக மறைவிடத்திற்குச் சென்றார்கள்... அவர்கள் திரும்பி வருவதற்குள் நீல வேன் புறப்பட்டு விட்டது!...

""ரிக்கி - வண்டி பட்டணத்தில் இருக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத்தான் போகிறது. நீ வயிற்று வலி வந்த மாதிரி நடி! சாலையில் போகும் வண்டி எதையாவது நிறுத்தி லிப்ட் கேட்டு - நாமும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போய்விடலாம்!'' - என்றாள் நெல்லி.

தந்திரம் பலித்தது. ஒரு கார்க்காரர் லிப்ட் கொடுத்தார். உரிய நேரத்தில் இருவரும் ஜெனரல்ஆஸ்பத்திரி வளாகத்தை அடைந்தார்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் நீல வேன் அங்கு வந்து நின்றது! அங்கிள் பெர்ட்டில் - பின் பக்கத்தில் இருந்து சைக்கிளை இறக்கி - நிலத்தில் நிறுத்தினார்.

மறைவிடத்தில் இருந்து ரிக்கியும் நெல்லியும் அவர் முன்னால் வந்து நின்றார்கள்.             

""அங்கிள்! ஏன் என் சைக்கிளைத் திருடினீர்கள்?'' - என்று கோபத்துடன் கேட்டான் ரிக்கி.

அங்கிள் பெர்ட்டில் வருத்தத்துடன் பேசினார்.

""தம்பி! இது உன் சைக்கிளா? இதைத் திருடுவது என் நோக்கமல்ல! எங்கள் குடும்பத்துப் பையன் ஒருவன் விபத்தில் சிக்கிப் படுத்த படுக்கையாகிவிட்டான். அவனுக்கு இந்த சைக்கிளைப் பரிசாகக் கொடுக்க நினைத்தேன். உன் சைக்கிள் ஓர் அகால நேரத்தில் சவுக்கு மரத் தோப்பில் - அநாதையாகக் கிடந்தது. அதனால் எடுத்தேன். அங்கே இருந்த ஒரு சிமிண்டு பெஞ்சில் ஒரு கவரில் கணிசமான பணமும், உனக்கு ஒரு கடிதமும் வைத்தேனே! நீ பார்க்கவில்லையா? உன் பெயர் என்ன?''

""அந்தக் கடித உறையை நான் பார்க்கவில்லை. என் பெயர் ரிக்கி ரேப்பர்''

""ரிக்கி ரேப்பர் என்பதைக் குறிக்கும் விதத்தில் - உன் சைக்கிளில் ஆர்.ஆர். என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டு இருந்தது. எங்கள் வீட்டுப் பையன் பெயர் - ராபர்ட் ரோசன். அவன் பெயரும் ஆர்.ஆர் - என்றே வரும்''

இதற்குள் தாதி ராபர்ட் ரோசனை சக்கர நாற்காலியில் அழைத்து வந்தாள். ரிக்கியும்,நெல்லியும் மறைவிடத்திற்குச் சென்று ஒளிந்து கொண்டார்கள்.

அங்கிள் பெர்ட்டில், ""இந்த சைக்கிள் பரிசு உனக்கு !'' என்று சொன்னதும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் - சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து வந்து, ராபர்ட் ரோசன் சைக்கிளைத் தொட்டுப் பார்த்தான்.

மேலும் சிறிது நேரம் அவனுடன் அன்பாகப் பேசினார் - பெர்ட்டில் அங்கிள்.

தாதி  அவனை மீண்டும் சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்குள் கூட்டிச் சென்றாள்.

""எங்கள் வீட்டுப் பையனுக்கு உளவியல் ரீதியாகச் சிகிச்சை தரவே உன் சைக்கிளை எடுத்தேன்.''

""நீங்கள் என் சைக்கிளை எடுத்துக் கொண்டது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை!''  - என்று அமைதியாகச் சொன்னான் ரிக்கி. நெல்லியும் தலை ஆட்டினாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.